வார்த்தைகளைத் தாண்டிப் புரிந்துகொள்வோம் – தரம்

வார்த்தைகளும் வழக்கு மொழிகளும் பல நேரங்களில் நம் கண்ணை மறைத்துவிடுகின்றன. அந்த விதத்தில் நாம் இன்னும் சரியாகப் புரிந்துகொள்ளாத ஒரு வார்த்தை – Quality.

Quality என்றால் என்ன?

தரம் – இதனை குறையற்ற தன்மை என்றும், குறிப்பிட்ட பயன்பாட்டிற்கான தகுதி என்றும் கூறலாம்.

Quality குறித்த பல வரையறைகளுள் குறிப்பிடத் தகுந்த சில –

American Society for Quality – ASQ தரத்தைப் பின்வருமாறு வரையறுக்கிறது.

Quality என்பது ஓர் அனுபவம். அறிவியல் பூர்வமாகப் பார்க்கும் போது அதற்கு இரண்டு அர்த்தங்கள் கொள்ளலாம்.

  1. குறிப்பிட்ட அல்லது எதிர்பார்க்கப்படும் தேவையைப் பூர்த்திசெய்யும் திறன் மற்றும்
  2. குறையற்ற தன்மை.

தரவியலின் தந்தையாகப் போற்றப்படும் அமெரிக்காவின் எட்வர்ட் டெமிங் தரத்தைப் பின்வருமாறு வரையறுக்கிறார் –

பயன்படுத்துவோரின் தேவைக்கு ஏற்றதுபோல் பொருளை / சேவையை வடிவமைத்து உற்பத்தி செய்தல், வடிவமைப்பு மற்றும் உற்பத்தித்திறனைத் தொடர்ந்து சீர்செய்து பயன்படுத்துவோரின் செலவைக் குறைத்தல்.

தரவியலின் மற்றொரு குருவான பிலிப் க்ராஸ்பி தரத்தை

தேவைகளை நிறைவு செய்தல் 

என்று கூறுகிறார்.

தரவியல் வல்லுநர் ஜூரான்

தரம் என்பது பயன்பாட்டிற்கான தகுதி; இந்தத் தகுதி பயன்பாட்டளரால் நிர்ணயிக்கப்படுகிறது

என்கிறார்.

மேலாண்மை குருவான பீட்டர் டிரக்கர் கூறுகையில்,

தரம் என்பது பொருள் தயாரிப்பாளர் அல்லது சேவையளிப்பவர் உருவாகுவது அல்ல; மாறாக, பயனாளரால் உணரப்படுவது. மேலும் பயனாளர் எதற்காக விலை கொடுக்கத் தயாராக இருக்கிறார்களோ அதுதான் தரம்

என்று வாதாடுகிறார்.

மிகப்பெரிய வியாபார உத்தியாகக் கருதப்படும் கேனோ மாடலை (Kano Model) வழங்கிய நோரியாகி கேனோ, தரத்தை இரு கூறுகளாக வரையறுக்கிறார்.

  • கட்டாயத் தரம் – பயன்பாட்டிற்கான தகுதி மற்றும்
  • உன்னதத் தரம் – நுகர்வோரை பிரமிக்க வைக்கும் தகுதி.

பொதுவாக நுகர்வோர் அவருக்கு சொல்லத் தெரிந்த தேவையை மட்டுமே உற்பத்தியாளரிடம் கூறுகிறார் (stated need). ஆனால், உற்பத்தியாளர் தன் நுகர்வோர் சொன்ன தேவையைப் புரிந்துகொண்டு, அவர் கூறாத தேவையையும் உணர்ந்து பொருள் / சேவையை வடிவமைக்க வேண்டும். அந்நிலையில், பொருள் / சேவை நுகர்வோரின் தேவையை (customer satisfaction) மிஞ்சி, அவர்கள் எதிர்பாராத தேவையையும் (customer delight) பூர்த்திசெய்யும்.

ஐ.எஸ்.ஒ,

பயன்படுத்துவோரின் தேவை அல்லது எதிர்பார்ப்பை எந்த அளவுக்கு நிறைவேற்றுகிறதோ அதுவே அந்தப் பொருள் / சேவையின் தரமாக அறியப்படும் 

என்று குறிப்பிடுகிறது.

சிக்ஸ் சிக்மா (Six Sigma) எனப்படும் தர மேலாண்மையியல், தரத்தை

ஒரு மில்லியன் வாய்ப்புகளில் நிகழும் குறைகளின் எண்ணிக்கையாக (Defects per Million Opportunities)

குறிக்கிறது.

சரித்திரத்தில் தரம் மற்றும் தரக் கட்டுப்பாடு

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தரம் பற்றிய விழிப்புணர்ச்சி நம் இந்திய கலாச்சாரத்திலும் எகிப்திய கலாச்சாரத்திலும் இருந்திருக்கின்றது. இந்திய அரண்மனைக் கட்டடங்களும், கோட்டைகளும் எகிப்திய பிரமிடுகளும் இதற்கு சான்றாக நிற்கின்றன.

உதாரணமாக, இந்தியாவில், ஒரு கோட்டையில்  பயன்படுத்தப்பட்டுள்ள கற்களின்  ஒத்த தன்மை, ஒரே மாதிரியான அளவுகள், சீரான வடிவங்கள் – இவை அக்காலத்திலேயே அளவீடுகளும் அவற்றிற்கான ஆய்வுகளும் மிக மேம்பட்ட நிலையில் இருந்திருப்பதைக் காட்டுகின்றன.

அறுதியிட்டுக் கூறும்படியான வரலாற்றுக்குறிப்பும் பண்டைய கிரேக்கத்தில் ஒரு பொருளின் தரத்திற்கும் நம்பகத்தன்மைக்கும் தரப்பட்ட முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. அதாவது கி.மு. 1700களில் பாபிலோனை ஆண்ட ஹம்முரபி என்ற கிரேக்க மன்னன் இயற்றிய ஒரு சட்டம், ஒரு கட்டடம் இடிந்து விழுந்து ஒருவன் இறக்க நேரிட்டால் அந்தக் கட்டடத்தைக் கட்டியவனுக்கு மரண தண்டனையும், கட்டட உரிமையாளரின் குடும்பம் உயிரிழந்தால், கட்டியவனின் குடும்பத்திற்கு மரண தண்டனையும் விதிக்கப் படும் என்று சொல்கிறது.