தொழில்முனைவோரின் மூன்று குணங்கள்

உங்கள் நிறுவனத்திற்கு வடிவம் கொடுங்கள்! – Chapter 3

An article series on Benefits of Organisation Structure & KPIs in MSMEs

மூன்று குணங்களும்…

‘அதென்ன மூன்று கேரக்டரும் எனக்குள்? அந்நியன் படம் மாதிரி இருக்கே’ என்று நீங்கள் நினைக்கலாம். உண்மைதான். ஒவ்வொரு தொழில்முனைவோருக்குள்ளும் – ஏன் – ஒவ்வொரு சாதாரண மனிதருக்குள்ளும் இந்த மூன்று வித குணங்கள் இருக்கின்றன. அவற்றின் விகிதம் மட்டுமே மாறுபடுகிறது.

உங்கள் நிறுவனத்தில், ஆபரேட்டராக, தனது சூப்பர்வைசரின் நல்ல பணியாளராக இருக்கும் ஒருவர் தனது ஊரில் ஒரு பெரிய பொறுப்பில் இருக்கலாம். அவர் முன்னின்று கோவில் கட்டிக்கொண்டிருப்பர்; ஊர்த்திருவிழாவை நடத்திக் கொடுப்பார். அங்கே அவர் தலைவர் கேரக்டர். ஆனால், பாக்டரியில் கொடுத்த வேலையை மட்டும் முடித்துவிட்டுப் போய்க்கொண்டிருப்பார். இங்கே தொழிலாளர் கேரக்டர்.

இப்படி, ஒரு தொழில்முனைவோராகிய நீங்கள் எல்லா கேரக்டர்களையும் உங்கள் தொழிலில் பயன்படுத்த வேண்டி இருக்கும். இதனைப் புரிந்து கொள்ள ஒரு சின்ன பிளாஷ் பேக். நீங்கள் முதல் தலைமுறை தொழில் அதிபராக இருந்தால், முதன்முதலில் தொழில் தொடங்குவதற்கு முன் என்ன வேலை செய்து கொண்டிருந்தீர்கள்? அல்லது உங்கள் நிறுவனத்தைத் தொடங்கியவர் என்ன வேலை செய்துகொண்டிருந்தார்?

தொழில்நுட்ப அறிவே முதல் படி 

பெரும்பாலான நேரங்களில், ஒரு கைதேர்ந்த அக்கவுன்டன்ட் ஒரு அக்கவுன்டிங் நிறுவனத்தைத் தொடங்குவார். ஒரு தலை சிறந்த விற்பனையாளர் ஒரு விற்பனை நிறுவனத்தைத் தொடங்குவார். நானும் கன்சல்டிங் நிறுவனத்தை ஆரம்பிப்பதற்கு முன் ஒரு கன்சல்டன்ட்டாக வேலை செய்துகொண்டிருந்தேன். அப்போது எனக்குள் இருந்த ஒரு அசைக்க முடியாத நம்பிக்கை – நான் ஒரு மிகச் சிறந்த கன்சல்டன்ட் என்பதே.

ஒவ்வொரு தொழில்முனைவோரும் இவ்வாறு தனது தொழில் நுட்ப அறிவை அடிப்படையாய்க் கொண்டே ஒரு தொழிலைத் தொடங்குவர். அந்தத் தொழிலைத் தொடங்கும் முன்புவரை அவர் ‘Technician’ அல்லது ‘பணியாளர்’ என்ற மனநிலையிலேயே அதிகம் இருந்திருப்பார். தொழில் தொடங்குவது என்று முடிவெடுக்கும் போது, அவர் ‘தலைவர்’ மனநிலையில் அதிக நேரம் இருக்கத் தொடங்குகிறார்

வெவ்வேறு மனநிலைகள் 

அவரவர் செய்யும் வேலை மட்டுமல்ல, அவர்களின் மனநிலையைப் பொருத்தும் அவர் நிர்வாகத்தின் எந்த அடுக்கில் இருக்கிறார் என்பது புலப்படும்.

ஒரு பணியாளர், தனது பழைய சாதனைகளில், பழைய கல்வித் தகுதி, தொழில்நுட்பத் தகுதி போன்றவற்றையே மையமாகக் கொண்டிருப்பார். அவர் தனக்கு ஒப்படைக்கப்பட்ட வேலைகளைக் குறித்தே கவனமாக இருப்பார். தன் கடின உழைப்பைப் பற்றியும் அதனால் அவருக்கு ஏற்படும் உடல் வலி அல்லது அசௌகரியங்கள் பற்றி அதிகம் பேசுவார்.

ஒரு மேலாளர் அன்றைய நாளிலோ, வாரத்திலோ, மாதத்திலோ செய்யவேண்டிய காரியங்களைப்  பற்றி சிந்திப்பார். அவரது நோக்கமெல்லாம் குறுகியகாலத் திட்டங்களும் அவற்றை செயல்படுத்துவதும்தான். நிறுவனத்திடமிருக்கும் பொருட்களையும், மனிதவளம், பணம், நேரம் போன்ற ஆதாரங்களைக் கொண்டு அதிகபட்ச உற்பத்தியை / வெளியீட்டைக் கொடுக்க வேண்டுமென்பதே அவரது குறிக்கோளாக இருக்கும். திட்டத்தையும் நேரத்தையும் ஒப்பிட்டே அவர் வேலை செய்வதால் எப்போதும் பரபரப்பாகவும், படபடப்பாகவும் இருப்பார்.

ஒரு தலைவர் நிதானமாகவும், அமைதியாகவும் இருப்பார். தனது கனவுகளை பற்றியும் எதிர்காலத்  தேவைகள் பற்றியும், நாளைய தொழில் நுட்பங்கள் பற்றியும் ஆர்வம் கொண்டிருப்பார். தனது கனவுகளையும், நோக்கங்களையும் தனது மேலாளர்களிடம் பகிர்ந்துகொள்வார். புதுமையை விரும்புவார். நாளையைப் பற்றிய அவரது சிந்தனையில் ஒரு புத்துணர்வும், துணிவும், துடிப்பும் இருக்கும்.

நீங்கள் எந்த மனநிலையில் இருக்கிறீர்கள்?

நான் தொழில்முனைவோருக்கான பயிற்சிகளில் தவறாமல் கேட்கும் கேள்வி – ஒரு தொழில் முனைவோராக எத்தனை நாள் நீங்கள் உங்கள் தொழிலில் இருந்து விலகி இருக்கமுடியும்? உதாரணமாக, நீங்கள் குடும்பத்துடன் வெளிநாட்டுப் பயணம் போகிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். அப்போது நீங்கள் எத்தனை நாள் உங்கள் போன், ஈமெயில் அல்லது வாட்ஸாப்பில் உங்கள் நிறுவனத்துடன் தொடர்பில்லாமல் இருக்க முடியும்? மூன்று மாதம் வரை இருக்க முடியுமா? 2 மாதங்கள்? 1 மாதம்? 10 நாட்கள்? 3 நாட்கள்?

ஒரு மாதம் வரை நீங்கள் விலகி இருக்க முடிந்தால், நீங்கள் உங்கள் நிறுவனத்தை ஓரளவு கட்டமைத்து விட்டீர்கள் என்று அர்த்தம். அதற்குக் கீழிருந்தால் … நீங்களே முடிவுசெய்துகொள்ளுங்கள்.

இந்தக் கேள்விக்கு பதில் சொல்லாமல் தயவுசெய்து தொடர்ந்து படிக்காதீர்கள்.

என்ன நடக்கிறது?

அப்படியெனில் உங்கள் நிறுவனத்தில் பல முக்கியமான வேலைகள் உங்களைச் சுற்றியே நடக்கின்றன என்று அர்த்தம். நீங்கள் முதல் தலைமுறை தொழிலதிபரென்றால், உங்களுக்கு இது அதிகப்படியான மகிழ்ச்சியைக் கொடுக்கும். உங்கள் ஈகோ இதனால் திருப்தி அடைகிறது. ‘நான் எவ்வளவு பெரிய ஆள் தெரியுமா? நானில்லாமல் இங்கு ஒரு வேலையும் நடைபெறாது’ என்று நீங்கள் நினைத்துக்கொள்ளும்போது, உங்கள் தலையில் நீங்களே ஒரு கிரீடத்தை வைத்துக் கொள்கிறீர்கள். நான் அதனை ஒரு கோமாளியின் குல்லா என்கிறேன்.

உங்களுக்கு ஒரு சவால் 

கீழே ஒரு கடிகாரச் சக்கரம் இருக்கிறது. அதில் ஒரு வேலை நாளின் பன்னிரண்டு மணிநேரம் குறிக்கப்பட்டிருக்கிறது. நீங்கள் கடைசியாக உங்கள் அலுவலகத்தில் இருந்த அன்று (இன்றோ, நேற்றோ, அதற்கு முன்தினமோ) ஒவ்வொரு மணியிலும் எந்த மனநிலையில் இருந்தீர்கள் என்று எழுதமுடியுமா? இதனை வரும் ஒரு வாரத்திற்குத் தொடர்ந்து எழுதுங்கள்.

How many hours do you behave as a Leader?

இந்தப் பயிற்சியிலிருந்து நாம் தெரிந்துகொள்ள வேண்டியது – நீங்கள் பெரும்பாலான நேரத்தை  ஒரு மேலாளராகவோ ஒரு பணியாளராகவோதான் கழிக்கிறீர்கள். அந்த நேரம்போக மீதிநேரத்தில் தான் – அப்படி மீதி இருந்தால் – நீங்கள் ஒரு தலைவராக நடந்துகொள்ள முடியும்.

அடுத்து…

ஏன் இவ்வாறான தடுமாற்றங்கள் ஏற்படுகின்றன? உங்கள் நிறுவனத்திற்கு ஒரு வடிவம் கொடுப்பதன் மூலம் எப்படி இதனை மாற்றி அமைக்கலாம் என்று வரும் அத்தியாயத்தில் பார்க்கலாம்.