கொரோனாவை வெல்வோம்

ஒரு தொழில் முனைவோராக அல்லது ஒரு நிறுவனத் தலைவராக எதிர்வரும் சோதனையான சில நாட்களை திறம்பட எதிர் கொள்ள 10 விஷயங்கள்.

1. மனஉறுதியே மருந்து 

வெற்றி என்பது முடிவில் நிர்ணயிக்கப்படுவது இல்லை. போராடுவோரின் மன உறுதியில் நிர்ணயிக்கப் படுகிறது. இது போன்ற தருணங்களில் உங்கள் குடும்பத்தினருக்கும், பணியாளர்களுக்கும், நண்பர்களுக்கும் நம்பிக்கை அளிக்கும் ஒரு நபராக மாறுங்கள். புலம்புவதோ வருத்தப்படுவது நமக்கு சிறிதளவும் உதவப்போவது இல்லை. 

உங்கள் மன உறுதியே உங்கள் நோய்எதிர்ப்பு சக்தியின் முதல்படியாகும். நம்மைச் சுற்றி இருப்பவருக்கும் தைரியத்தைக்கொடுங்கள். உலகம் இப்போது அழியப்போவதில்லை. சீனாவில் இயல்பு வாழ்க்கை திரும்பிக்கொண்டிருக்கிறது.

2. நாளையைப் பற்றிக் குழப்பம் வேண்டாம் 

நாளை, அடுத்த வாரம், அடுத்த மாதம் என்று அறுதி இட்டுக் கூற முடியாத விஷயம் – எப்போது இந்த நிலை சீரடையும் என்பது. இது நமது நிறுவனத்திற்கு மட்டுமே ஏற்படும் இழப்பு என்று எண்ணவேண்டாம். உலகம் முழுவதும் பல லட்சக்கணக்கான தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 

பொருளாதாரநிலை பற்றிக் குழப்பமடையாதீர்கள். திட்டமிடுவதற்கான தருணம் இதுவல்ல. புயல்காற்றிலிருந்து நம்மைக் காத்துக் கொள்வோம். பிறகு பயணத்திட்டத்தைத் தயாரிப்போம். 

3. கலகலப்பே ஆரோக்கியம் 

கவலைகொண்ட மனம் நோய்களை வரவழைக்கும். கவலைப்படாமல் இருப்பதால் உங்கள் உடல் ஆரோக்கியத்தையும் நோய் எதிர்ப்பு சக்தியையும் நீங்கள் அதிகரிக்கலாம். லாக்-டவுனில் இருப்பதால் அதன்  வெறுமையும், இயக்கமின்மையும் உங்களுக்குள் ஒருவித வெறுப்பை உண்டாக்கலாம். 

வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும் என்பார்கள். வாய் விட்டு அழுதாலும் நோய் விட்டுப் போகும். இப்போது நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளைப்பார்க்கும் போது, உங்கள் மனது அனுதாபம் கொள்ளலாம்; துக்கம் வரலாம். ஆழ்ந்த துயரம் கூட உங்களை ஆட்கொள்ளலாம். அனைத்தையும் உங்கள் மனதுக்குள் போட்டு அடைத்துக்கொள்ளாதீர்கள். வாய்விட்டு அழ வேண்டி வந்தால் அழுதுவிடுங்கள். அழுவது கோழைத்தனம் அல்ல. அது வீரம்; மனதின் அடையாளம். அதற்குப் பின் உங்களால் கலகலப்பையும், நகைச்சுவையையும் கையில் எடுத்துக்கொள்ள முடியும். உங்கள் குடும்பத்தினரின் சிரிப்பிற்கும், மகிழ்ச்சிக்கும் நீங்கள் பொறுப்பெடுத்துக் கொள்ளுங்கள்.

4. உங்களை உற்சாகப்படுத்தும் விஷயங்களைக்கண்டுபிடியுங்கள்

உங்கள் வேலை, தொழில் ஆகியவற்றைத்தாண்டி உங்களை உற்சாகப்படுத்தும் விஷயம் எது? நீங்கள் பள்ளி அல்லது கல்லூரி நாட்களில் மேடையில் பாடவிரும்பினீர்களா? கவிதைகள் எழுதியதுண்டா? ஓவியம், நாட்டியம், நாணயம் அல்லது ஸ்டாம்ப் சேகரிப்பு?

உங்களுக்கு விருப்பமான அல்லது நீங்கள் கனவுகண்ட செயல்களுக்கு இப்போது உயிர் கொடுங்கள். அவை உங்களுக்கு உற்சாகம் கொடுக்கும்; உங்கள் பொழுதுகளுக்கு உயிர் கொடுக்கும். 

5. 20 நாள் Fitness சவாலைத் திட்டமிடுங்கள் 

இந்த 20 நாட்களும் நமது இயல்பான நடமாட்டம் வெகுவாகக் குறையும். எனவே நமது flexibility மற்றும் fitness ஐ உறுதிப்படுத்த வேண்டிய கட்டாயம் நமக்கு இருக்கிறது. வீட்டைவிட்டு  வரமுடியாத நிலையில் யோகா, பிராணாயாம, push-ups, sit-ups போன்ற உங்களுக்குப் பொருத்தமான ஒரு உடற்பயிற்சியைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளவும். அதில் உங்களுக்கு நீங்களாகவே ஒரு டார்கெட்டை வைத்துக்கொள்ளவும்.

உங்கள் நண்பர்கள், குடும்பத்தினரிடமும், வாட்சப் குரூப்பிலும் உங்கள் சவாலை அறிவியுங்கள். அதனை தினமும் அப்டேட் செய்யுங்கள்.  இதன் மூலம் நீங்களும் அவர்களும் ஊக்கத்தைப் பரிமாறிக்கொள்ளலாம்.

6. சமூகத் தொலைவையும், சமூக வலைத்தளங்களில் கொரோனாவின் தொலைவையும் கடைபிடியுங்கள் 

போதும்! கொரோனா பற்றிய பெரும்பாலான விஷயங்களை நமது சமூக வலைத்தளங்களும் வாட்ஸப்பும் கொண்டுவந்து கொட்டிவிட்டன. இது வொவ்வால் சாப்பிட்டதால் வந்து, வெற்றிலை சாப்பிட்டால் வராது என்று அனைத்ததைப் பற்றியும் பேசியாகிவிட்டது. இனி யாருக்காவது கொரானா பற்றி அறிவுரை கூற விரும்பினால் அவருக்கு தொலைபேசியில் அழைத்துப் பேசிவிடுங்கள்.

இதனைத் தவிர்த்து இன்னபிற விஷயங்களை அவர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். உங்கள் சக ஊழியர்களிடம் வீடியோ காலிங்கில் உரையாடுங்கள். தன் பொழுதை எப்படிப் பயன்படுத்துகிறார் என்று கேளுங்கள். உங்கள் நண்பர்களுடனும் அவர்கள் குடும்பத்தினருடனும் வீடியோ காலிங் இல் உரையாடுங்கள். இதெற்கென ஒரு நாளுக்கு ஒரு நண்பர், ஒரு குழு உறுப்பினர் என்று அட்டவணையைத் தயாரித்துக்கொள்ளுங்கள்.

7. அளவோடு செய்திகளைப் பாருங்கள்  

கொரோனா நிலையைப் பற்றியும், நாம் எடுக்கவேண்டிய முன்னெச்சரிக்கைகள் பற்றியும் நமக்கு  விழிப்புணர்வை ஏற்படுத்தியதில் தொலைத் தொடர்பு அன்பர்கள் குறிப்பாக டிவி மிகப்பெரிய பங்கற்றி இருக்கின்றனர்.

ஆனால் நீங்கள் தொடர்ந்து டிவி செய்திகளையே பார்த்துக்கொண்டிருந்தால் உங்களுக்குள் செய்திகளைத் தாண்டி ஒரு வகையான பயமும் பதட்டமும் தொற்றிக் கொள்ளும். உலகமே நமது கண்முன் இடிந்து விழுவதைப் போன்ற மாயை ஏற்பட்டு தூக்கமின்மையும் வரலாம். அதனால், ஒரு குறிப்பிட்ட இடைவெளியில், சற்று நேரத்திற்கு மட்டும் எதாவது 2 அல்லது 3 நியூஸ் சானெல்களை மட்டும் பார்ப்பது என்று முடிவெடுத்துக் கொள்ளுங்கள். குறிப்பாக, மாலை 6 அல்லது 7 மணிக்கு மேல் செய்திகள் பார்ப்பதைத் தவிர்த்து விடுங்கள்.

8. உங்கள் வாடிக்கையாளரை யோசியுங்கள் 

இதுபோன்ற இக்கட்டான சூழல்களில்தான் பல புதிய உக்திகளும், புதிய  சிந்தனைகளும், புதிய வாய்ப்புகளும் ஒளிந்திருக்கக் கூடும். உங்கள் வாடிக்கையாளரின் நிலையில் நின்று யோசித்துப்பாருங்கள். அவர்களுக்கு நீங்கள் செய்யவேண்டியது ஏதாவது இருக்கிறதா?

21 நாட்களில் இந்த அடைப்பாட்டிலிருந்து விடுதலை அடைந்தவுடன் நீங்கள் கவனம் செலுத்த வேண்டிய வாடிக்கையாளர் தேவைகள் என்னென்ன? வாடிக்கையாளரைத் திருப்திப்படுத்துவதில் உங்கள் வியாபார வாய்ப்பு எங்கு உள்ளது? உங்கள் நிறுவனத்தின் மீது நன்மதிப்பை ஏற்படுத்த என்ன செய்யவேண்டும்? ஒருமுறை அமெரிக்காவின் ஒரு பகுதி மின்சாரமில்லாமல் மூன்று நாட்களுக்கு மேல் இருளில் மூழ்கியது. அந்த நேரத்தில் உணவகங்கள் அனைத்தும் பொருட்களின் விலையைப் பலமடங்கு உயர்த்தி லாபம் பார்த்தன. அனால் ஒரு இந்திய உணவக நிறுவனம் வடிக்கையாளரைப் பற்றி வித்தியாசமாக யோசித்தது. வங்கிகளும் ATMகளும் செயல்படாத நிலையில் வாடிக்கையாளர்கள் தேவையான அளவு சாப்பிட்டு, முடிந்த அளவு பணம் கொடுக்கலாம் என்றும், அப்போதைக்குப் பணமெடுக்க முடியவில்லையென்றால் நிலைமை சரியானதும் வந்து பில்லுக்குப் பணம் கொடுக்கலாம் என்றும் அறிவித்தது. அன்றிலிருந்து அந்த உணவகத்தை மக்கள் தங்கள் சொந்த நிறுவனம் போல் நினைக்கத் தொடங்கிவிட்டனர். 

9. உங்களைப்  புதுப்பித்துக் கொள்ளுங்கள்  

பல நாட்களாக உங்கள் வேலையில் செய்ய நினைத்து செய்யமுடியாமல் போன செயல்களை செய்யுங்கள். அது ஒரு புதிய மொழியைக் கற்றுக்கொள்வது, நெடு நாட்களாக கிடப்பில் போட்ட ப்ரெசென்ட்டேஷன்களை முடிப்பது, வாங்கி வாய்த்த முக்கியமான புத்தகங்களை படித்துமுடிப்பது, இப்படி எதுவாகவும் இருக்கலாம்.

விக்டர் பிராங்கெல் என்ற ஜெர்மானியர் மிகப்பெரிய மனவியல் தத்துவத்தை அவர் ஹிட்லர் படைகளால் சிறைப்படுத்தப்பட்டபோது உருவாக்கினார். அவர் சொல்லும் விஷயம் இதுதான்- நமக்கு நடக்கும் பல விஷயங்களைத் தீர்மானிக்கும் சுதந்திரம் நம்மிடம் இல்லை. ஆனால், மனிதனின் உண்மையான சுதந்திரம் அவன் தனக்கான சூழ்நிலைகளை எப்படி எதிர்கொள்கிறான் என்பதில் இருக்கிறது. அவன் சவால்களை நேர்மறையாக சந்திப்பதும், எதிர்மறையாக எண்ணி முடங்கிப்போவது அவரது விருப்பம். இதுபோன்ற பல படைப்புகள் சிறையிலிருந்து உருவானவை. நான் என்ன செய்யப்போகிறேன் என்று நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்.

Fitness சவாலைப் போலவே இந்த சவாலையும் உங்கள் குரூப்பில் அறிவியுங்கள்.

10. உங்கள் குழுவினருக்குப் பயிற்சிகொடுங்கள்

“ஒரு  மரத்தை வெட்ட எனக்கு 6 மணிநேரம் கிடைத்தால், முதல் 4 மணிநேரத்தில் நான் என் கோடாலியைக் கூர்மையாக்கிக் கொள்வேன்” என்று சொல்கிறார் ஆபிரகாம் லிங்கன். எனவே, இந்த நேரத்தில் உங்களையும் மிக முக்கியமாக உங்கள் குழுவினரையும் கூர்மைப் படுத்திக்கொள்ளுங்கள்.

போர்களே நடக்காதபோது ராணுவத்தினரை சும்மா இருக்க சொல்லலாமா அல்லது விடுமுறை கொடுத்து வீட்டுக்கு அனுப்பிவிடலாமா? அப்படி எந்த ராணுவமும் செய்வதில்லை. மாறாக அவர்கள் தங்களது வீரர்களைத் தொடர்ந்து பயிற்றுவித்துக் கொண்டே இருக்கிறார்கள். உங்கள் விற்பனைப் பிரதிநிதிகளுக்கு விற்பனை நுணுக்கங்களையும், உங்கள் உற்பத்திப் பிரிவினருக்கு தரம்பற்றியும், உற்பத்திசெலவுகள் பற்றியும், உங்கள் மார்க்கெட்டிங் அலுவலர்களுக்கு அன்சாப் மேட்ரிக்ஸ் பற்றியும் நீங்கள் ஆன்லைனில் பயிற்சி அளிக்கலாம். உங்கள் மேலாளர்களை அவரது உறுப்பினர்களுக்குப் பயிற்சி அளிக்கவையுங்கள்.