உங்கள் நிறுவனத்திற்கு வடிவம் கொடுங்கள்!

எவ்வளவு நாள் SME ஆகவே இருப்பது?

பெரும்பாலான SME நிறுவனங்கள் கார்ப்பரேட்டுகளாக மாறத் தவறிவிடுகின்றன. இதற்கான காரணத்தைத் தேடும் என் பயணத்தில் பல விஷயங்களை என்னால் பட்டியலிட முடிந்தது. ஆனால், கீழே குறிப்பிட்டுள்ள விஷயங்களே அவற்றுள் மிக முக்கியமானவை. 

ஒரு தொழில் முனைவோர்

  • தன் கனவுகளுக்கு வடிவம் கொடுக்காமல் இருப்பது;
  • அவர் தனக்கு ‘ஊக்கம் தரும் வேலைகள்’ பற்றி அறியாமல் இருப்பது; (Joyous Quadrant என்ற இந்தக் கருத்தைப் பற்றி வேறொரு சந்தர்ப்பத்தில் விரிவாக அலசுவோம்).
  • தன் நிறுவனத்திற்கு வடிவம்  கொடுக்காமல் இருப்பது; அதனால் கனவுகளை செயல்களாக மாற்றாமல் போவது;  
  • பருவ நிலைபோல தொழில் வளர்ச்சியில் இயல்பாய் ஏற்படும் மாற்றங்களை அறியாமல் இருப்பது; மற்றும் 
  • வளர்ந்த நிறுவனங்களிடமிருந்து சரியான விஷயங்களைக் கற்றுக்கொள்ளாமல் போவது.

ஏன் இந்தக் கட்டுரைத் தொடர்?

எனது தொழில் வாழ்க்கையின் குறிக்கோளாக நான் ஏற்றுக்கொண்டது இதுதான் – பல சிறந்த யோசனைகளை, உயர்ந்த சிந்தனைகள், வளங்கள், வாய்ப்புகள் இருந்தும் தனது முழு பலனை அடையாத சிறுதொழில் நிறுவனங்களைக்  கண்டெடுத்து, மேற்கண்ட சரிவுகளை அவர்களே சரிசெய்ய உதவிசெய்து, அவை பெரிய நிறுவனங்களாக வளர உதவுவது.

இந்தக் குறிக்கோளை அடையும் பயணத்தில், நான் கற்ற பாடங்கள் தான் மேலே சொன்ன 5 குறிப்புகள். இந்த ஐந்து குறிப்புகளையும் 5 படிகளாக எனது தொழில்துறை நண்பர்களுக்கு Consulting Support கொடுத்துக் கொண்டிருக்கிறேன். 

இந்தக் கட்டுரைத் தொடரில், மூன்றாவது காரணமாக நான் கருதும் ‘நிறுவனத்திற்கு வடிவம்கொடுப்பதையும், அதன்மூலம் எண்ணங்களை செயலாக்குவது’ பற்றியும் எழுதுகிறேன். உங்கள் கருத்துகளையும், சந்தேகங்களையும், கேள்விகளையும் kannan@csensems.com என்ற எனது ஈமெயில் முகவரிக்கு அல்லது இந்த வெப் பேஜில் தெரியும் வாட்ஸாப்ப் லோகோவை கிளிக் செய்து வாட்சப்பில் அனுப்பலாம். 

உங்கள் நிறுவனத்திற்கு ஒரு வடிவம் வேண்டுமா?

உங்களுக்கு ஒரு சுவாரசியமான விஷயம் – நமது உடலில் தோராயமாக 500 கோடி தசைகள் இருக்கின்றன. அவற்றில் ஒரே ஒன்று இதயத் தசை, 700 எலும்புகளை ஒட்டிய தசை, மற்ற அனைத்தும் மென்மையான தசைகள் –  குடல்,வயிறு, கல்லீரல், போன்றவை. எப்போதாவது உங்கள் கண்முன்னே வந்த ஒரு பூச்சியை நீங்கள் தட்டிவிட்டதுண்டா? அந்த நிகழ்வு இதுநாள் வரை ஒரு சாதாரண நிகழ்வாக இருக்கலாம். ஆனால், அது இயற்கையின் மிகப்பெரிய பரிணாம வளர்ச்சி. உங்கள் கை, ஏன் எந்த உத்தரவிற்கும் காத்திருக்காமல் அந்தப் பூச்சியைத் தட்டிவிட்டது? தட்டிமுடித்த பிறகுதான் என்ன நடந்ததென்று நீங்கள்  உணர்ந்திருப்பீர்கள். இப்படித்தான் நமது மூளை கோடிக்கணக்கான தசைகளைக் கட்டுப்படுத்திக்கிறது. 

ஏன் கைகள் வந்து பூச்சியைத் தட்டவேண்டும்? வேறெந்த உறுப்பும் இதற்கு உதவாதா? உதவலாம். ஆனால், ஒரு செயலுக்கான அவசரம் நேரும்போது யார் செய்யவேண்டும் என யோசித்து நேரத்தை வீணடிக்கக் கூடாது. தலைவரின் (மூளையின்) உத்தரவிற்காகவும் காத்திருக்க முடியாது. செய்துமுடிக்கவேண்டிய காரியத்தை செய்துமுடிக்கவேண்டிய நேரத்திற்குள் செய்து முடிக்க வேண்டும். அதற்காக இயற்கை ஒரு ரகசிய வழியைக் கடைபிடிக்கிறது. அது தான் நாம் விவாதிக்கப் போகும் விஷயம். 

ஒரு நிறுவனம் எப்படி வளர்கிறது?

பெரும்பாலான சந்தர்ப்பங்களில், ஒரு தொழில்நுட்ப வல்லுநர் தனது சொந்த முயற்சியில் ஒரு சிறிய தொழிலைத் தொடங்குகிறார். சில நாட்கள் ஒன் மேன் ஆர்மியைப் போல பல வேலைகளைத் தானே திறம்பட செய்கிறார். அதனால் அந்நிறுவனம் வேகமாக வளர்கிறது. அதிகரிக்கும் தேவைகளில் உதவி செய்ய தனக்குத் தெரிந்த உறவினர்களையும் நண்பர்களையும் அவர் வேலைக்கு வைக்கிறார். 

அவர் ஆரம்ப வெற்றியைத் சுவைத்த பின்னர் தொழிலை விரிவாக்க நினைக்கிறார். இந்த விரிவாக்கத்தின் போது முதலில் சேர்ந்த நண்பர்களும் உறவினர்களும், தங்களுக்கு முதலில் கொடுக்கப்பட்ட வேலையிலேயே தொடர்கிறார்கள். திறமையான மேலாளர்களும், தொழில்நுட்ப வல்லுனர்களும் சீனியரிட்டி அடிப்படையில் அவர்களுக்குக் கீழேயே வேலை செய்ய நேரிடுகிறது. 

சிலநேரங்களில் தன்னைவிடத் தகுதி வாய்ந்த ஒரு பணியாளரைத் தனக்குக் கீழ் வேலைக்கு அமர்த்த ஒரு சீனியர் மேனேஜர் தயங்குகிறார். தன்னைவிடத் திறமையாக ஒருவர் பணியாற்றினால் அவரை எப்படியாவது மட்டம் தட்டியும், முதலாளியிடம் அவரை வெளிக்கட்டவிடாமல் தடுத்தும் விடுகிறார். சில வருடங்களில், அந்நிறுவனத்தில் ஒரு துறையின் அறிவாற்றல் சீனியர் பணியாளரின் அறிவோடு நின்றுவிடுகிறது.

இதனால் அந்நிறுவனம் ஒரு குறிப்பிட்ட நிலைக்கு மேல் வளரமுடிவதில்லை. வளர்ச்சி இல்லாமல் போனதற்கான காரணங்களை ஆராயவும் சரி செய்யவும் தேவையான மனநிலையும், சுய பரிசோதனைகளும் இல்லாமலே போகிறது.

இப்படி உங்களுக்கு நடந்திருக்கிறதா?

“சார், நீங்கள் வாங்க நினைக்கும் புதிய மாடல் எந்திரம் இன்று இருக்கும் விற்பனை நிலவரப்படி இன்னும் இரண்டு வருடங்களுக்கு நமக்குத் தேவையில்லை. மேலும் நமது பட்ஜெட்டில் குறிப்பிட்ட விலையைவிட அதிகமாக இருக்கிறது. அதனால், இந்த பர்ச்சேஸ் ஆர்டரை நான் அனுமதிக்க முடியாது. நாம் ஏன் முன் திட்டமிட்டது போல விலை குறைந்த சிறிய எந்திரத்தை வாங்கக் கூடாது?” இப்படி உங்கள் அக்கவுண்ட்ஸ் மற்றும் பைனான்ஸ் மேனேஜர் என்றாவது உங்களிடம் கூறியதுண்டா?

“அடுத்த ஆண்டு நம் விற்பனையை அதிகரிக்க நாம் இந்த புதிய ஏரியாவில் உள்ள வாடிக்கையாளர்களை சந்திக்க வேண்டும். அவர்களில் முக்கியமான 3 வாடிக்கையாளர்களுடன் நான் அபாயின்ட்மென்ட் வாங்கியிருக்கிறேன். நீங்களும் என்னுடன் வரவேண்டும். நாம் அடுத்த வாரம் போகிறோம்!” என்று உங்கள் மார்க்கெட்டிங் மேனேஜர் சொன்னதுண்டா?

“சீசன் சமயங்களில் நம் அலுவலகத்தை (அல்லது கடையை) மூட இரவு தாமதமாகி விடுகிறது. பஸ்ஸில் வீட்டுக்கு செல்லும் பணியாளர்கள் அவதிப்படுகிறார்கள். இந்த சீசன் முடியும்வரை தற்காலிகமாக அவர்களை பஸ் ஸ்டாண்டில் ட்ராப் செய்ய ஒரு வேன் ஏற்பாடுசெய்ய வேண்டும். அதற்கான செலவை பணியாளர் நலனுக்கான பட்ஜெட்டிலிருந்து எடுத்துக் கொள்ளலாம்” இவ்வாறு உங்கள் HR மேனேஜர் உங்களிடம் யோசனை கூறியதுண்டா?

தொடர்ந்து வருவது…

உங்கள் நிறுவனத்தில் இவ்வாறான ஒரு நிலையை அடைவது எப்படி? அப்படி நீங்கள் ஏற்கனவே அடைந்திருந்தால் அதைத் தக்க வைத்துக் கொள்வது எப்படி? என்பதைத்தான் இந்தக் கட்டுரைத் தொடரில் விவாதிக்கப் போகிறோம்.

மேலும், அந்தக் குறிக்கோளை அடையும் பாதையில், தொழில் என்றால் என்ன? நிறுவனம் என்றால் என்ன? ஒரு நிறுவனம் எவ்வாறு கட்டமைக்கப்படுகிறது? தலைவராக உங்கள் பங்களிப்பு என்னவாக இருக்க வேண்டும்? ஒரு நிறுவனத்தில் எத்தனை துறைகள் இருக்கவேண்டும்? ஒவ்வொரு துறைக்கும் நீங்கள் எவ்வளவு நேரம் கொடுக்க வேண்டும்? என்பது பற்றியெல்லாம் பார்ப்போம்.