
உங்கள் நிறுவனத்திற்கு வடிவம் கொடுங்கள்! – Chapter 12
An article series on Benefits of Organisation Structure & KPIs in MSMEs
Product & Process Development – பொருள் மற்றும் செயல்முறை மேம்பாட்டுத் துறையின் குறிக்கோள் மற்றும் வேலைகள்
ஒரு SME நிறுவனத்தில் Product Development என்பதை நான் இரண்டு வகையாகப் பார்க்கிறேன். ஒன்று வாடிக்கையாளரின் தேவைக்கேற்ப இருக்கும் பொருள் அல்லது சேவையைத் தொடர்ந்து மேம்படுத்துதல். இரண்டாவதாக, புதிய பொருள் அல்லது சேவை வடிவமைப்பு மற்றும் உருவாக்கம்.
Product Life Cycle
இதனை ஒரு Product Life Cycle – உற்பத்திப் பொருளின் வாழ்க்கை சுழற்சி என்ற கண்ணோட்டத்தில் பார்க்கலாம். ஒரு பொருளின் விலை நிலவரத்தைக் கீழ்காணும் cost curveஐப் பயன்படுத்தி விளக்கமுடியும். இந்தப் படத்தில் Cost என்ற நீலநிறக் கோடே நமது பிரதானம். இதனை நமது மொபைல் டேட்டாவின் விலையாகக் கற்பனை செய்து பாருங்கள். 3 வருடங்களில் 1 ஜிபி 300 ரூபாயிலிருந்து 60 ஜிபி 150 ரூபாய் வரை நாம் பார்த்திருக்கிறோம்.

எந்த ஒரு நிறுவனனமும் ஒரு பொருளை உருவாக்கி / மேம்படுத்தி விற்கும் போது இந்தவகையான காஸ்ட் அமைப்பையே கொண்டிருக்கும். அது ஒரு ஸ்டார்ட்-அப் ஆக இருந்தாலும் சரி, பெரிய நிறுவனமாக இருந்தாலும் சரி. ஏற்கனவே இருக்கக் கூடிய ஒரு பொருளை மேம்படுத்தி விற்பனை செய்யும்போதும் இது பொருந்தும்.
சந்தை விற்பனையாளரின் பிடியில்…
ஒரு புதிய பொருளை உருவாக்க அல்லது மேம்படுத்த ஒரு நிறுவனம் சில மாதங்களுக்குத் தொடர்ந்து நேரமும், பணமும் செலவு செய்திருக்கும். எனவே, அந்தப்பொருளை அதிக விலைக்கு விற்று அந்த செலவை சரிசெய்ய முயற்சிக்கும்.
மேலும், ஒரு பொருள் புதிதாக அறிமுகம் ஆகும்போது, அதிகப்படியாக இருக்கும் அதன் உற்பத்தி செலவு, அதன் விற்பனை அதிகரிக்க அதிகரிக்க ‘Economy of Scale’ என்ற விளைவுப்படி குறையத் தொடங்கும்.
அந்தப் பொருள் வாடிக்கையாளரிடம் வரவேற்பு பெறும்போது, அந்நிறுவனம் மிக அதிக அளவில் லாபம் சம்பாதிக்கலாம் – சம்பாதிக்க வேண்டும். இது சந்தையில் அந்த நிறுவனத்தைப் பிரபலப் படுத்துகிறது.
தேவையை விட உற்பத்தி குறைவாக இருக்கும் நிலையில், ஒரு விற்பனையாளர் பொருளின் விலையையும் மற்ற சட்டதிட்டங்களயும் நிர்ணயம் செய்யலாம். இந்த வகை சந்தை விற்பனையாளரின் சந்தை என்று கூறப்படுகிறது.
அதிகரிக்கும் போட்டி – நுகர்வோரின் சந்தை
அதே சமயம், இந்த அதிகப்படியான தேவையும், அதிகமான லாபமும் புதிய போட்டியாளர்களைக் கவரும். பல புதிய போட்டியாளர்கள் அதே பொருளுடன் உள்ளே வருவார்கள். எனவே, தேவையை விட உற்பத்தி அதிகமாக இருக்கும்.
இந்நிலையில் வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக்கொள்ள நிறுவனங்கள் தங்கள் உற்பத்திப் பொருட்களின் விலையைக் குறைக்க நேரிடுகிறது. இது இரண்டாவது நிலை. இந்த நிலை நுகர்வோர் சந்தை என்று கூறப்படுகிறது. ஏனெனில், வாடிக்கையாளருக்கு அவர் தேவைக்கேற்ப வாங்குவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன.
இதனால் லாபம் குறையத் தொடங்கும். கடுமையான போட்டிகளுடன் இந்த நிலை பலநாட்கள் வரை தொடரும். பொருளாதார ஒழுக்கம் இல்லாத நிறுவனங்கள், பெரிய குறிக்கோள் இல்லாத நிறுவனங்கள், புதிய பொருட்களையும், புதுமையையும் உருவாக்கமுடியாத நிறுவனங்கள் மிகுந்த நெருக்கடியில் தொழில் நடத்தவேண்டி இருக்கும் அல்லது வேறு தொழிலுக்கு மாறவேண்டி வரும்.
சந்தை ஒருங்கிணைப்பு
இறுதியில், பல சிறு நிறுவனங்கள் வெளியேறிய பின், புதிதாக எந்த நிறுவனமும் உள்ளே வராதபோது, மீதமுள்ள நிறுவனங்களுடன் சந்தை ஒரு சம நிலையை அடையும். இதனை Consolidation என்று கூறுவார்கள். Merger மற்றும் Acquisition போன்றவை இந்த நிலையில் நடக்கும். இரண்டு பெரிய போட்டி நிறுவனங்கள் தங்களுக்குள் ஓர் உடன்பாட்டுக்கு வருவதும், இரண்டு மூன்று நிறுவனங்கள் சேர்ந்து சேவை அளிப்பதும் (Vodafone – Idea), சிறிய நிறுவனங்களைப் பெரிய நிறுவனங்கள் விலைகொடுத்து வாங்குவதும் இந்நிலையில் பார்க்கலாம்.
“சார், இதெல்லாம் நிறைய ட்ரெயினிங்ல கேட்டிருக்கோம். இந்த நிலையை சமாளிக்க ஏதாவது வழி இருக்கிறதா? நாங்கள் இப்போது ‘Commodity’ நிலைல இருக்கிறோம். நாங்கள் எப்படி இதில் சிறப்பாக செயல்படுவது? எப்படி லாபத்தைக் கொஞ்சம் அதிகரிப்பது?”
இவைதானே உங்கள் கேள்விகள்?
சந்தையின் சமநிலை

பொருளாதார சந்தை எப்போதும் தன்னை சமநிலையில் வைத்துக்கொள்ளமுயலும். அதற்கான நடவடிக்கைகள் பல மூலைகளிலிருந்தும் வந்துகொண்டே இருக்கும். இது கம்யூனிசம் போலத் தோன்றினாலும் – இந்த சமநிலை முயற்சியில் சிலர் வெற்றிபெறுவதும், சிலர் நஷ்டம் அடைவதும் சந்தையின் விதிப்படி இயல்பானதாகும். ஆனால், இதனைப் புரிந்துகொண்ட நிறுவனங்கள் தொடர்ந்து தங்கள் லாபத்தை அதிகரித்து, தங்கள் வளர்ச்சியைத் தக்கவைத்துக் கொண்டுள்ளன.
மூலதன சந்தை எப்போதும் ஒரு சமநிலையைத் தக்க வைத்துக்கொள்ளவே முயற்சி செய்யும்!
சரி நாம் என்ன செய்யவேண்டும்?
இப்போது நாம் இந்தப் பொருள் மேம்பாடு மற்றும் செயல்முறை மேம்பாடு என்ற இரண்டு யுக்திகள் நமக்கு என்ன உதவி செய்யமுடியும் என்று பார்ப்போம்.
கார் இண்டஸ்ட்ரியையும் மொபைல் போன் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இண்டஸ்ட்ரியையும் உதாரணமாக எடுத்துக் கொள்வோம். நாம் வாங்கிய ஒரு புத்தம் புதிய மொபைல் போன் இரண்டே மாதங்களில் பழைய மாடல் ஆகிவிடுகிறது. ஆனால், மேம்படுத்தப்பட்ட புதிய மாடல் போன்கள் நாம் வாங்கிய பழைய விலைக்கே கிடைக்கின்றன. இந்த இண்டஸ்ட்ரி எரிக்சன், RIM, நோக்கியா போன்ற நிறுவனங்களால் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் பலப் பல நிறுவனங்கள் தயாரிப்பில் இறங்கின. இந்தியாவில் மைக்ரோமாக்ஸ், லாவா போன்ற நிறுவனங்கள் வெற்றிகரமாகவும் லாபகரமாகவும் இருந்தன.

அதே போல் இன்றைய புதிய மாடல் டிவி (LED, OLED, ஸ்மார்ட் டிவி போன்றவை) அந்தக் காலத்தில் கிடைத்த அதே விலையில் கிடைக்கின்றது. கார்களுக்கும் இதே நிலைதான். ஆனால் ஒவ்வொரு மாடலும் ஏன் ஒவ்வொரு மாதமும் அந்தப் பொருளில் தொடர்ந்து முன்னேற்றம் செய்யப்படுகிறது. அந்நிறுவங்களே அவற்றின் முந்தைய மாடல்களை வேகமாகப் பழையதாக்குகின்றன. அதனால் வாடிக்கையாளர்கள் தொடர்ந்து தங்கள் பொருட்களை அப்டேட் செய்துகொண்டே இருக்கிறார்கள்.
மேலும், அந்நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் ஈர்ப்பையும் பெறுகின்றன. Xaiomi சாம்சங் போன்ற நிறுவனங்களை இதற்கு உதாரணமாகக் கூறலாம். இதனால் இந்த நிறுவனங்கள், ஒரு cost curve, discontinuation நிலைக்கு வரும்முன் அதே பொருளை சற்று மேம்படுத்தி, புதியதொரு cost curveஐ உருவாக்குகின்றன. இதனால் இவை தங்களது commodity நிலைமையைத் தள்ளிப் போடுகின்றன. இவை தம் புதுமையைக் கொண்டு தங்களை வேறுபடுத்திக் காட்டமுடியும். இவற்றை முன்னிறுத்தி, தனது பொருட்களின் விலையையும் அதிகப் படுத்த முடியும்.
மேம்பட்ட Cost Curve
இந்த நிறுவனங்களின் cost curve கீழ்கண்டமாதிரி இருக்கும்.

போட்டியாளர்களிடமிருந்து தன்னை வேறுபடுத்தி, தனது பொருட்களுக்கான அதிக விலையையும் நிர்ணயித்து commodity போட்டியை வெற்றிகரமாக சமாளிக்க பொருள் மேம்பாடுத் துறை உங்கள் நிறுவனத்திற்கு உதவும்.
“சார், இதல்லாம் மொபைல் போன் கம்பெனிக்கும், டிவி கம்பெனிக்கும் சரிதான். அவையெல்லாம் பெரிய கம்பெனிகள். நாங்கள் எல்லாம் தினசரி உபயோகப் படுத்தற அரிசி, பருப்பு, துணி, எண்ணெய் இதைத்தான் உற்பத்தி செய்யறோம். எங்களுக்கு எப்படி சார் இது பொருந்தும்?”
உங்கள் கேள்வி சரி தான். இந்தக் கேள்விக்கு நிச்சயம் விடை கண்டுபிடிப்போம் – இந்த அத்தியாயத்திலும் அடுத்து வரும் அத்தியாயத்திலும்.
மேம்பாட்டுத் துறையின் நோக்கங்கள்
இந்தத் துறையின் முக்கிய நோக்கங்களைப் பார்க்கலாம்.
ஒரு தொழிலின் அத்தனை நிலையிலும் இந்த மேம்பாட்டுத் துறையின் பங்களிப்பு மிகப் பயனுள்ளது. நாம் ஏற்கனவே பார்த்தது போல ஒரு வணிகத்தின் பார்வை உள்ளீட்டுப் பொருட்களை வாங்குவது, அவற்றைக் கொண்டு வாடிக்கையாளருக்குத் தேவையான பொருட்களை உற்பத்தி செய்வது, அவற்றை வாடிக்கையாளரிடம் கொண்டு சேர்ப்பது, முக்கியமாக, வாடிக்கையாளரிடம் பொருளுக்கான பணத்தைப் பெற்றுக்கொள்வது என்பதோடு முடிகிறது.
உங்கள் வெற்றியின் ரகசியம் தெரியுமா?

ஆனால், பொருட்களைப் பயன்படுத்திய பின்னர் வாடிக்கையாளர் எப்படி உணர்கிறார்? அவர் திருப்தியடைந்து விட்டாரா? நம்மிடம் பொருளை வாங்கியது பற்றி அவர் மகிழ்ச்சியாக இருக்கிறாரா? அல்லது நம் மீது வெறுப்படைகிறாரா? அந்தப் பொருளை எவ்வாறு பயன்படுத்துகிறார்? அவரது தேவை முழுமையாகப் பூர்த்தியடைந்து விட்டதா? அவர் சொல்லாத தேவைகள் அல்லது பிரச்சினைளை அவர் அனுபவிக்கிறாரா? நமது போட்டியாளர்கள் எவ்வாறு நடந்துகொள்கிறார்கள்? நமது வாடிக்கையாளர் நமது பொருட்களை ஏன் வாங்குகிறார்?
இவை போன்ற கேள்விகளைக் கேட்பதற்கு ஒரு நிறுவனருக்கு நேரம் இருப்பதில்லை. நேரமிருந்தாலும் அந்தக் கேள்விகளுக்கு பதில் சொல்ல நிறுவனத்தில் யாரும் இல்லை. இந்தக் கேள்விக்கான பதில்களையே நான் ‘secret of success – உங்கள் வெற்றியின் ரகசியம்’ என்று கருதுகிறேன்.
தோல்வியிலிருந்து பல பாடங்களைப் படிக்கலாம் என்று சொல்வார்கள். ஆனால், தோல்வியிலிருந்து கற்றுக்கொள்ளும் விஷயங்களைவிட, நமது வெற்றியிலிருந்து நாம் கற்க வேண்டியவை ஏராளம். அதற்கான மந்திரம் – ‘எதனால் வெற்றியடைந்தோம்?’ என்ற கேள்வி . ஆனால், வெற்றியை நாம் சாதாரணமாக எடுத்துக் கொண்டுவிடுகிறோம்.
பல போட்டியாளர்களின் பொருட்களும் / சேவைகளும் மலிந்திருக்கும் இந்நாட்களில் உங்கள் வாடிக்கையாளர் ஏன் திரும்பத் திரும்ப உங்களிடமே வருகிறார் என்பது உங்களுக்கு இப்போது தெரியுமா? இது போல வெற்றிக்கான காரணம் தெரியாமல் ஜெயித்துக்கொண்டிருப்பது ஒரு வெடிகுண்டின் மேல் உட்கார்ந்திருப்பதற்கு சமம். இதனால் பல நேரங்களில், வியாபாரத்தைப் பெருக்க நினைத்து செய்யும் சின்னச் சின்ன விஷயங்கள் நமது விற்பனையில் பெரிய சரிவைக் கொடுத்திருக்கும்.
இது போல உங்கள் நிறுவனத்தில் நடந்திருக்கிறதா?
ஆம் எனில், இந்தத் துறை நிச்சயம் உங்களுக்குத் தேவை.
ஒரு நிறுவனத்தின் வெளிப்புற அமைப்பில் இருந்து அதன் எல்லாதுறைகளுக்கும் தேவையான நுண்ணறிவைத் தருவதேமேம்பாட்டுத் துறையின் குறிக்கோளாகும்.
அடுத்து
இத்துறையின் வேலைகளை அடுத்து வரும் அத்தியாயங்களில் பார்ப்போம்.