உங்கள் நிறுவனத்திற்கு வடிவம் கொடுங்கள்! – Chapter 11
An article series on Benefits of Organisation Structure & KPIs in MSMEs
மார்க்கெட்டிங் துறைக்கான வேலைகள் என்னென்ன?
மார்க்கெட்டிங் துறையின் நோக்கம் – வாடிக்கையாளர் எண்ணிக்கையை அதிகரிப்பது, கடைக்கு வருவோரின் எண்ணிக்கையை அதிகரிப்பது, வளர்ச்சிக்கான சரியான சந்தையைக் கண்டுபிடிப்பது, சரியான வாடிக்கையாளர் பிரிவுகளைக் கண்டுபிடிப்பது, அவர்களின் தேவைகளை அறிவது.
மார்க்கெட்டிங் துறையை ஒரு நிறுவனத்தின் முகம் என்றே கூறலாம். ஒரு நிறுவனத்தை வாடிக்கையாளர்கள் அறிவது அதன் மார்கெட்டிங்கின் மூலமாகவே. மார்க்கெட்டிங் துறையின் வேலைகளை 6 பிரிவுகளாகப் பிரிக்கலாம்.
- பிராண்ட் உருவாக்கம்
- பிராண்ட் காட்சிப் படுத்துதல் (Brand Visibility)
- மார்க்கெட் யுக்தி (Strategy)
- வாடிக்கையாளர்களுடன் நெருக்கம் / சந்திப்புகள்
- மார்க்கெட் இன்டெலிஜென்ஸ் – சந்தையைப் பற்றிய ஆழ்ந்த அறிவு
- ஆன் லைனில் இருத்தல்
1. பிராண்ட் உருவாக்கம்
ஒரு நிறுவனம் தொடக்கம் முதலே ஒரு பிராண்டாக அறியப்படுவதில்லை. அந்நிறுவனத்தின் ஸ்டார்ட்-அப் நிலையில் அந்த நிறுவனரின் முகத்தையும், அவரது குணங்களையும் கொண்டே அடையாளம் காணப்படுகிறது.
“அவர் ரொம்ப பிசியா இருப்பார். நம்ம ஆர்டரை மறந்திடுவார். எதுக்கும் சாயங்காலம் ஒரு போன் பண்ணி அவருக்கு ஞாபகப் படுத்திடு” என்று நாம் பேசி இருப்போம். அதுவே அந்நிறுவனத்திடம் மக்கள் எதிர்பார்ப்பது – இதில் நல்லது, கெட்டது என்பதெற்கெல்லாம் அப்பாற்பட்டு அந்நிறுவனத்திடம் என்ன எதிர்பார்க்கலாம் என்ற வாடிக்கையாளர்களின் கணிப்பே பிராண்ட் அடையாளமாகிறது.
எனவே, ப்ராண்ட் அடையாளம் என்பது அந்நிறுவனத்தின் பொருள் / சேவையில் இவை இருக்கும் என்ற வாடிக்கையாளரின் குறைந்த பட்ச எதிர்பார்ப்பு ஆகும். “இந்நிறுவனத்தின் சோப்பை நம்பி வாங்கலாம். ஓஹோ ன்னு இல்லலைன்னாலும் என் தோலுக்கு எந்தக் கெடுதலும் செய்யாது” என்று சிலர் பேசிக் கேட்டிருப்போம். இது அந்நிறுவனத்தின் பிராண்ட்டுக்கான சிறந்த உதாரணமாகும்.
பிராண்ட் மேம்பாடு Vs பிராண்டிங் முயற்சி
முன்பு பார்த்தது போல பிராண்ட் அடையாளம் என்பது ஒவ்வொரு நாளும் ஒரு செங்கலாகக் கட்டி எழுப்பப்படும் ஒரு கோட்டையைப் போன்றது. அது ஒரு நீண்ட பயணம். ஒரு நிறுவனத்தின் ஒவ்வொரு முடிவும், ஒவ்வொரு செயல்பாடும் அதன் பிராண்ட் மீதான மதிப்பெண்ணைக் கூட்டிகொண்டு இருக்கும் அல்லது கழித்துக் கொண்டிருக்கும்.
ஒரு பிராண்ட் ஒரே நாளில் உருவாவதில்லை.
ஆனால், பிராண்டிங் என்பது அந்நிறுவனத்தின் பிராண்டைப் பற்றி வாடிக்கையாளர்களின் மனதில் விரைவாக ஒரு தோற்றத்தைக் கொடுக்கும் புத்திசாலித் தனமான ஒரு முயற்சியாகும். பிராண்டிங் என்பது ஒரு திரைப்படத்தின் டீசர் அல்லது ஓப்பனிங் காட்சி போல; பார்வையாளர்கள் மத்தியில் தேவையான எதிர்பார்பைத் தூண்டக்கூடியது.
பிராண்ட் உருவாக்கத்தில் உதவக்கூடிய காரணிகள்
நிறுவனத்தின் பெயர், லோகோ,
பொருட்களின் / சேவைகளின் பெயர் / லோகோ, லேபிள், அவற்றின் தீம், வண்ணங்கள், tagline ஆகியவற்றின் வடிவமைப்பு.
பேக்கிங் பெட்டிகள், பைகளின் வடிவமைப்பு, அவற்றில் சொல்லவேண்டிய தகவல்கள்
SKU எனப்படும் பேக்கிங் அளவுகள்
இவை அனைத்தையும் முடிவு செய்வதும், மேம்படுத்துவதும் மார்க்கெட்டிங் துறையில் ‘பிராண்ட்’ என்ற துணைத்துறையின் முக்கியமான வேலைகள் ஆகும்.
2. Brand Visibility
விசிபிலிட்டி என்பதை வாய்ப்புள்ள வாடிக்கையாளரின் பார்வையில் பட்டுக்கொண்டேஇருத்தல் என்று சொல்லலாம். தேவைகளை விட உற்பத்தி அதிகமாகிவிட்ட இந்தக் காலத்தில் வாடிக்கையாளர்களுக்கு பல வாய்ப்புகள் இருக்கின்றன. உதாரணமாக நீங்கள் ஒரு சோப்பை வாங்கவேண்டுமென்றாலும், இப்போது கடைகளில் உங்கள் விருப்பத்திற்கேற்ற 10 முதல் 20 வகை சோப்புகள் கிடைக்கும்.
இவ்வாறு குழப்பமான நேரத்தில், நம் நினைவில் நிற்கும் ஒரு ப்ராண்டையே நாம் தேர்ந்தெடுப்போம். இதனை உளவியல் அடிப்படையிலும் நிரூபித்துள்ளனர். எனவே மக்களின் பார்வையில் பட்டுக்கொண்டே இருப்பதுதான் பிராண்ட் விசிபிலிட்டியின் கோக்கமாகும்.
பிராண்ட் விசிபிலிடியை மேம்படுத்த செய்யக்கூடிய வேலைகள்
2.1 Digital Marketing
மார்க்கெட்டிங் துறையையே மாற்றிப்போட்டிருக்கும் மிக முக்கியமான கருவி இந்த டிஜிட்டல் மார்க்கெட்டிங். இது வாய்ப்புள்ள வாடிக்கையாளர் இந்த உலகத்தில் எந்த மூலையில் இருந்தாலும் அவரைச் சென்று அடைய உதவிசெய்கிறது. மேலும், ஒரே அளவிலான முயற்சியின் மூலம் எத்தனை வாடிக்கையாளரையும் அடைய முடியும்.
டிஜிட்டல் மார்க்கெட்டிங் இல் கவனிக்கவேண்டிய வேலைகள்
- Content Creation
- Content positing
- Your website
- Blogs
- Snapchat
- Tiktok
- SEO – Search Engine Optimisation for Website
- Paid Promotions to target audience
2.2 Promotions to existing customers
இதனை விற்பனைப் பிரிவின் பணியாக வரும் CRM என்ற தலைப்பில் பாப்போம்.
2.3 ஊடகங்கள் வழியான மார்க்கெட்டிங்
1. உள்ளூர் FM ரேடியோவில் விளம்பரம் செய்தல்
2. உள்ளூர் கேபிள் டிவியில் விளம்பரங்கள்
3. உள்ளூர் FM & கேபிள் டிவிக்கான நிகழ்ச்சிகள் – நேயர் விருப்பம், நேயர் பேட்டி போன்றவற்றை நடத்துதல்
4. செய்தித் தாளில் / பத்திரிக்கைகளில் விளம்பரங்கள், கட்டுரைகள்
5. ஊடகங்கள் நடத்தும் போட்டிகள், நிகழ்ச்சிகள் போன்றவற்றில் பங்களித்தல்.
2.4 பார்வையில் படும்படியான முயற்சிகள்
1. பஸ் & ரயில் வண்டிகளில் விளம்பரப் பலகைகள், சுவரொட்டிகள், சமூக செய்தியோடு சேர்ந்த விளம்பரங்கள்
2. பொது இடங்களில் வைக்கும் விளம்பர பேனர்கள், டிவி விளம்பரங்கள் (உதாரணமாக ரயில் நிலையத்தில் டிவி விளம்பரம்)
3. உள்ளூர் திருவிழாக்கள், நிகழ்ச்சிகளுக்குப் பணம் கொடுத்து வைக்கும் பேனர்கள்
4. ஹோர்டிங் எனப்படும் விளம்பர பலகைகள்
5. ‘வரவேற்பு மற்றும் நன்றி’ சொல்லும் பலகைகள். உதாரணமாக, எங்கள் ஊருக்கு வருகை தரும் அனைவரையும் — நிறுவனம் வரவேற்கிறது.
6. சுவர் வரைபட விளம்பரங்கள்
2.5 Sponsored நிகழ்ச்சிகள்
1. ரத்த தான முகாம்கள், கண் தான / உடல் உறுப்பு தான registration முகாம்கள் போன்ற சமூக நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துதல்
2. கொரோனா, மலேரியா, டெங்கு விழிப்புணர்வு முகாம் / நிகழ்ச்சிகள்
3. சிறப்பு தினங்களுக்கான பேச்சு அல்லது நிகழ்ச்சிகள் (சுதந்திர தினம், குழந்தைகள் தினம், மகளிர் தினம்)
4. உள்ளூரில் பள்ளிகளில், கல்லூரிகளில் பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி போன்றவற்றை நடத்துதல், பரிசுகளை அளித்தல்
5. மரக்கன்று வழங்குதல், மரம் நடுவிழா நடத்துதல்
6. உள்ளூர் குளம், ஏரி, பூங்கா போன்றவற்றைப் பராமரித்தல் & அங்கு விளம்பரப் பலகைகள் வைத்தல்
7. உள்ளூர் நிகழ்ச்சிகள், திருவிழாக்களுக்கு தண்ணீர், பானங்கள், சிறு உணவுகளை அளித்தல் (அவற்றில் நிறுவனத்தின் பெயருடன்)
8. உள்ளூர், பள்ளி, கல்லூரி விளையாட்டுப் போட்டிகளில் டீ-ஷர்ட், பேனர் போன்றவற்றை அளித்தல்
9. பள்ளி, கல்லூரிகளின் ஆண்டுவிழாக்களில் பரிசுப்பொருட்களை வழங்குதல், பேனர் வைத்தல்
2.6 அச்சிடப்பட்ட விளம்பரங்கள்
- விளம்பரப் பிரசுரங்கள்
- செய்தித் தாள்களில் Fliers அனுப்புதல், தள்ளுபடிக் கூப்பன் கொடுத்தல்
- வழிபாட்டுத் தளங்களில் அத்தலத்தைப் பற்றிய கையேடு அச்சிட்டுக் கொடுத்தல், அதில் விளம்பரம் கொடுத்தல்
- சுற்றுலாத் தளங்களில் கையேடுகள் அச்சிட்டுக் கொடுத்தல், அதில் விளம்பரம் கொடுத்தல்
- பள்ளிகளுக்கான ரசீதுகள் அச்சிட்டு அவற்றின் பின்புறம் விளம்பரம் செய்தல்
- அரசு நிறுவனங்களில் – மின்சார அட்டை, பில், பஸ் டிக்கெட் – போன்றவற்றில் விளம்பரம் செய்தல்
- மருத்துவமனை, திருமண மண்டபம் போன்ற பொது நிறுவனங்களின் அச்சிடப்பட்ட வழிகளில் (பில், அவர்களது brochure போன்றவை) விளம்பரம் செய்தல்
3. மார்க்கெட்டிங் யுக்தி (strategy)
சந்தை யுக்தி – எப்படி சந்தைப்படுத்தப் போகிறோம் என்ற திட்டம்
பொருட்களின் விலை நிர்ணயம்
பொருட்களின் அளவீடுகள் (பேக்கஜ்)
எங்கு கிடைக்கும் என்பது பற்றிய திட்டம்
தனிச் சிறப்பு பண்புகள் (USP)
போட்டியாளர்களிடமிருந்து வேறுபடுத்திக்காட்டுதல்
4. வாடிக்கையாளர் சந்திப்புகள்
- நேரடி சந்திப்புகள் – one to one எனப்படும் நேரடி சந்திப்புகள்
- வாடிக்கையாளர் நிறுவனத்தில் அவர்களை நேரில் சென்று சந்தித்தல்
- பொது இடங்களில் வாடிக்கையாளருக்கு விருந்து அளித்துப் பேசுதல்
- வாடிக்கையாளர் இல்லங்களின் அவர்களை சந்தித்தல்
- வாடிக்கையாளர் குழுவை சந்திக்க அனுமதி கேட்டு பிறகு சந்தித்தல்
- ஆன்-லைன் மூலமாக வாடிக்கையாளர்களை சந்தித்து அவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தல்
- பொது சந்திப்புகள்
- தொழில் சம்மந்தமான சந்திப்புகள், நிகழ்ச்சிகளில் பங்கெடுத்தல்
- தொழில் சங்கங்களின் சந்திப்புகளில் பங்கெடுத்தல்
- Expo க்களில் ஸ்டால் வைத்தல்
- வாய்ப்புள்ள வாடிக்கையாளரின் இடங்களில் கண்காட்சிகளில் பங்கேற்றல்
- விற்பனைக் குழுக்கள், நெட்ஒர்க் சந்திப்புகளில் பங்கெடுத்தல்
5. சந்தையைப் பற்றிய ஆழ்ந்த அறிவு
ஒரு நிறுவனத்தின் மதிப்புள்ள சொத்து அந்நிறுவனத்தின் அறிவும் அனுபவமும் ஆகும். பல சிறுதொழில் நிறுவனங்கள் பெரிய வெற்றியடையாமல் போவதற்கும், பெரிய நிறுவனங்களின் போட்டியை சமாளிக்க முடியாமல் போவதற்கும் முக்கியக் காரணம் – சிறுதொழில் நிறுவனங்களின் பொருள் அல்லது சேவையில் புதுமைகள் இல்லை. இந்நிறுவனங்கள் பெரும்பாலும் பெரிய நிறுவனங்களின் வழியைப் பின்பற்றியே பொருட்களையும் சேவைகளையும் வழங்குகின்றன.
ஏன் சிறுதொழில் நிறுவனங்களால் புதுமைகளைப் புகுத்த முடியவில்லை? ஏனெனில், வாடிக்கையாளர்களின் தேவைகள் – குறிப்பாக, சொல்லப்படாத தேவைகள் பற்றிய போதிய விவரம் அவர்களிடம் இல்லை.
வாடிக்கையாளருக்கு என்ன பிரச்சினை இருக்கிறது, நமது பொருளை அல்லது சேவையைப் பயன்படுத்திய பின்னர் ஒரு வாடிக்கையாளர் எவ்வித உணர்வை அடைகிறார், அவர் திருப்தி அடைந்துவிட்டாரா, அவரை மேலும் சந்தோஷப்படுத்த என்ன செய்யவேண்டும் போன்ற கேள்விகளை சிறுதொழில் நிறுவனர்கள் கேட்பதே இல்லை.
இந்த சந்தை அறிவே போட்டியாளர்களிடமிருந்து நம்மை வேறுபடுத்திக்காட்டும். வாடிக்கையாளருக்கும் தெரியாத அவரது பிரச்சினைகளை ஒரு நிறுவனம் கண்டுபிடித்து தொடர்ந்து அவற்றைத் தீர்த்து வரும்போது மக்களின் அபிமானம் பெருகும்.
இந்த ஆழ்ந்த அறிவினை வளர்க்கத் தேவையான சில வழிமுறைகள்
1. போட்டியாளர்களைப் பற்றிய தொடர்ந்த மதிப்பீடு மற்றும் அவர்களுடன் நமது ஒப்பீடு. இதற்கு Strategy Canvas என்ற வழி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதைப் பற்றி விரிவாக பின்பு பாப்போம்.
2. போட்டியாளர் பொருட்களின் தொடர் ஒப்பீட்டு ஆய்வுகள் (Market Sample Analysis)
3. வாய்ப்புள்ள சந்தையையும், வாய்ப்புள்ள வாடிக்கையாளர்களையும் தொடர்ந்து கண்டுபிடித்தல். உதாரணமாக, அடுத்த வருடம் எந்த இடத்திலிருந்து, எந்த மாதிரியான வாடிக்கையாளர்களைக் கவரவேண்டுமென்று இப்போது உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும்.
4. புதிய கிளைகளை எங்கு திறக்கலாம், எங்கு புதிய டீலரை நியமிக்க வேண்டும் என்ற தொடர் ஆய்வு
5. வாடிக்கையாளரைச் சென்றடைய புதிய வழிகளுக்கான தேடல்
6. ஆன் லைனில் இருத்தல்
ஆன் லைன் என்ற நவீன சந்தையில் உங்கள் நிறுவனம் பெரும் லாபம் ஈட்ட முடியுமா என்பது இன்றைய கேள்வியே இல்லை. அதனை யாரும் அறுதி இட்டுக் கூற முடியாது. அதற்கு பதில் சொல்ல மிகச் சரியான நபர் – நீங்கள்தான். மிகச் சரியான வழி – செய்துபார்த்தல்.
உங்கள் நிறுவனத்திக்கென்று ஒரு வெப்சைட் இருக்க வேண்டும். நீங்கள் உங்கள் நிறுவன டொமைன் பெயரில் உள்ள ஈமெயில் முகவரியையே பயன்படுத்த வேண்டும். பொதுவான ஜிமெயில் முகவரியைப் பயன்படுத்துவது உங்கள் நிறுவனத்தை நீங்களே குறைத்து மதிப்பிடுவதாக ஆகிவிடும்.
நீங்கள் பொருள் விற்பனை செய்பவர் என்றால் – அமேசான், flikart, போன்ற e-commerse தளங்களில் உங்கள் பொருள் கிடைக்க வேண்டும். உங்கள் வெப்சைட்டிலும் ஆன்லைன் ஷாப்பிங் வசதி இருக்க வேண்டும்.
மற்ற ஆன்லைன் வர்த்தக விளம்பர வழிகளான IndiaMart, TradeIndia, JustDial, UrbanClap போன்றவற்றில் உங்கள் நிறுவனம் இடம் பெற்றிருக்க வேண்டும்.
அவற்றிலிருந்து வரும் கேள்விகளுக்கும், புகார்களுக்கும் உடனுக்குடன் பதில் அனுப்ப வேண்டும். பாராட்டுதல்களுக்கு உடன் நன்றி தெரிவிக்க வேண்டும்.
Google MyBusiness, Facebook Business Page போன்றவற்றில் உங்கள் நிறுவனம் இடம்பெற்றிருக்க வேண்டும்.
அடுத்து
Product Development & Process Development துறையையின் பங்களிப்பைப் பற்றி அடுத்து பாப்போம்.