மேம்பாட்டுத் துறையின் வேலைகள் – பாகம் 2

உங்கள் நிறுவனத்திற்கு வடிவம் கொடுங்கள்! – Chapter 14

An article series on Benefits of Organisation Structure & KPIs in MSMEs 

ஒரு SME நிறுவனத்தின் வளர்ச்சியில் மேம்பாட்டுத் துறையின் வேலைகளாக வாடிக்கையாளர் புகார்கள் மற்றும் குறைகளைக் கையாளுதல் மற்றும் வாடிக்கையாளரின் கருத்துக்களை சேகரித்தல் பற்றி போன அத்தியாயத்தில் பார்த்தோம்.

இந்த அத்தியாயத்தில் மேம்பாட்டுத் துறையின் பிற முக்கிய வேலைகளான போட்டியாளர் ஆய்வுகள், புதிய பொருள் உருவாக்கம், மற்றும் செயல்முறை சீரமைப்பு மற்றும் மேம்பாடு போன்றவற்றைப் பற்றிப் பார்ப்போம்.

3. போட்டியாளர்களை பற்றிய ஆய்வுகள் 

சந்தை நிலவரம் குறித்த நுண்ணறிவைப் பெற இன்னொரு வழி இந்த ஆய்வுகள்.

வினைவலியுந் தன்வலியும் மாற்றான் வலியும்

துணைவலியுந் தூக்கிச் செயல்.

(திருக்குறள், அதிகாரம் – வலியறிதல், குறள் எண் – 471).

அதாவது, தான் செய்யும் செயலில் தனது வலிமை, தனது நிறுவனத்தின் வலிமை, போட்டியாளர்களின் வலிமை, இருசாராருக்கும் துணையாகவும் பொதுவாகவும் இருப்போரின் வலிமை ஆகியவற்றை ஆராய்ந்தறிந்தே அந்தச் செயலில் ஈடுபட வேண்டும் என்கிறது திருக்குறள்.

உலகிலேயே மிகச் சிறந்த பொருளை உற்பத்தி செய்யும் ஒரு நிறுவனம், அதீத தரமான பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனம் லாபகரமாக இருக்கும் என்பது நிச்சயம் இல்லை. ஒரு லாபகரமான வியாபாரம் என்பது வாடிக்கையாளருக்கு என்ன வேண்டுமோ அதைத் தருவதிலும் – அவற்றில் எந்த அம்சம் மிக முக்கியமோ அவற்றைச் சிறப்பாகத் தருவதிலும் இருக்கிறது.

Better or Best – Which is Better?

நீங்கள் ஒரு கதையைக் கேட்டிருப்பீர்கள். இரண்டு பேர் ஒரு காட்டுக்குள் சாகசப் பயணம் போகிறார்கள். அப்போது எதிர்பாராத விதமாக பேசிக்கொண்ட ஒரு சிங்கம் இவர்களைத் தாக்க வருகிறது. அப்போது ஒருவர் தனது காலணியின் லேஸை சரிசெய்துகொண்டார். அதைப் பார்த்த இரண்டாவது நபர் கேட்டார், “லேஸை சரிசெய்தால் மட்டும் நீ என்ன அந்த சிங்கத்தைவிட வேகமாக ஓடிவிட முடியுமா?”. அதற்கு முதல் நபர் சொன்னார், “நான் லேஸை சரிசெய்வதால், சிங்கத்தை விட வேகமாக ஓடிவிட முடியாது. அது அவசியமும் இல்லை. ஆனால் நான் உன்னை விட வேகமாக ஓடினால் போதும்”.

Product Benchmarking

நீங்கள் உற்பத்தித் துறையில் இருந்தால், குறிப்பாக B2C, FMCG, Foods, Consumer Durables, appliances, போன்ற துறைகளில் இருந்தால் போட்டியாளர்களின் பொருட்களை சந்தையிலிருந்து வாங்கி அவற்றை ஆய்வு செய்து பார்க்கலாம். 

இதன் மூலம், மிக ஆழமான நுண்ணறிவை நாம் பெறமுடியும். ஏற்கனவே, உங்கள் வாடிக்கையாளர் தேவைகளையும் விருப்பங்களையும் நீங்கள் பட்டியலிட்டு விட்டீர்கள். அதோடு, அவற்றை முக்கியத்துவத்தின் அடிப்படையில் வரிசைப்படுத்தி வைத்திருக்கிறீர்கள்.

Benchmarking – Example

உதாரணமாக, நீங்கள் பேனா உற்பத்தி செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். வாடிக்கையாளர் தேவைகள் மற்றும் விருப்பங்களின் பட்டியல் பின்வருமாறு இருக்கலாம்.

அவர்களின் தேவைகளை நீங்கள் ஆராய்ந்து பார்க்க வேண்டும். இதனை அம்சங்களில் வாடிக்கையாளருக்கு மிகவும் முக்கியமான அம்சம் எது என்பதை ஒரு வாடிகையாளராக இருந்து நீங்கள் வரிசைப்படுத்த வேண்டும். இதற்கு உலகமெங்கும் பரவலாக இப்போது Design Thinking என்ற புதிய கண்ணோட்டம் பயன்டுத்தப்படுகிறது. 

அவ்வாறு நீங்கள் முக்கியத்துவத்திற்கான மதிப்பெண் கொடுத்தபின் அந்தப் பட்டியல் கீழ்கண்ட மாதிரி இருக்கும்.

சில நேரங்களில், உங்களின் பொருட்களை விட சிறப்பாக இல்லாத உங்கள் போட்டியாளர் பொருட்களை வாடிக்கையாளர்கள் விரும்பி வாங்குவார்கள். இதன் காரணம் என்ன என்பது புரியாமல் சில நேரம் குழம்பி இருக்கலாம். கீழ் உள்ள பட்டியல் உங்களுக்கு சில குறிப்புகளைத் தரலாம்.

போட்டியாளர்களின் பொருட்களை ஆராய்வதன் மூலம் பல விஷயங்களை நாம்கற்றுக்கொள்ள முடியும். இன்று சீனாவின் மிகப்பெரிய தொழில்துறை வளர்ச்சிக்கு reverse engineering என்று சொல்லப்படும் போட்டியாளர்களின் பொருட்களிலிருந்து அவர்கள் கற்றுக்கொண்டவையே காரணம்.

நீங்கள் விற்பனைத் துறையிலோ சேவையிலோ இருந்தாலும் இந்த வழிமுறை உங்களுக்குப் பலன் கொடுக்கும்.

4. புதிய பொருள் உருவாக்கம்

தேவையும் தேடலும் புதுமைகளைப் படைத்து மனித குலத்தை மேம்படுத்திக்கொண்டிருக்கின்றன.

இந்தத் துறையின் மிக முக்கியமான பணி புதிய பொருள் உருவாக்கம். இதற்கான inputகளாக வாடிக்கையாளர் தேவைகள், அவற்றின் முக்கியத்துவம், போட்டியாளர்களின் செயல்திறன் ஆகியவை  ஏற்கனவே உங்கள் கைகளில் கிடைத்துவிட்டன.

அடுத்த கட்டம் புதிய அம்சங்களுடன் புதிய பொருள் அல்லது சேவையை உருவாக்குதல்.

பெரிய நிறுவனங்கள், தங்களுக்கென ஒரு தனி R&D துறையை உருவாக்கி அதற்கென டார்கெட்களைக் கொடுத்து புதிய பொருட்களை உற்பத்தி செய்கின்றன. Plan – Do – Check – Act  என்ற வரிசையில் ஏழு அல்லது எட்டு படிகளாக இந்த புதிய பொருள் உற்பத்தி நடைபெறுகிறது. new product development process என்று இன்டர்நெட்டில் தேடிப்பார்க்கவும். 

Product Pipeline

இத்துறையின் பணிகளை ரிவியூ செய்ய Product Pipe Line எவ்வளவு நீளமாக இருக்கிறது என்று நீங்கள் சோதிக்கலாம். Pipe line என்பது எத்தனைப் புதிய பொருட்கள் வடிவமைப்பு நிலையில் இருக்கின்றன? வரும் ஆண்டில் எந்த மாதங்களில் எந்த புதிய பொருட்கள் அறிமுகம் செய்யப்படும்? என்ற ஒரு அட்டவணை ஆகும்.

Market Benchmarkingஐ அடிப்ப்டையாகக் கொண்டு Quality Function Deployment அல்லது QFD என்ற அறிவியல் பூர்வமான முறையை நீங்கள் நடைமுறைப் படுத்த முயற்சிக்கலாம்.

5. செயல்முறை சீரமைப்பு மற்றும் மேம்பாடு

Standardisation

உங்கள் நிறுவனத்தை யார் நடத்துகிறார்கள்? நீங்களா? உங்கள் மேலாளர்களா? அல்லது செயல் அமைப்புகளா? ஏற்கனவே நாம் பிசினஸ் என்றால் என்ன (பிஸினஸின் புதிய புரிதல்) என்பதைப் பற்றிப் பார்த்தோம். 

பிசினஸ் என்பது, நமது வாடிக்கையாளர் தேவைகளில் நம்மால் எதை சிறப்பாக செய்யமுடியுமோ அதை நம்மைவிட சிறப்பாக செய்பவர்களைக் கொண்டு அதிக அளவில் செய்வதற்கான அமைப்பு ஆகும்.

இன்னொரு முறை படித்துக்கொள்ளுங்கள்.

இதனை நீங்கள் புரிந்து கொண்டால் – தொழில் வளர்ச்சிக்கு ஒரு நிருவனராக நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் – அந்த அமைப்பை மேம்படுத்துவது மட்டும்தான் என்பது புரியும்.

ஒரு கட்டடத்தைக் கட்டி எழுப்ப மிக முக்கியமான அம்சம் எது? அந்தக்கட்டடம் எவ்வளவு பெரியதாக ஆக முடியும், எவ்வளவு உயரம்வரை அதை எழுப்ப முடியும் என்று தீர்மானிக்கும் அந்த முக்கிய அம்சம் – உறுதியான அதன் அஸ்திவாரம். அதைப்போலத்தான் உங்கள் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு வேறெந்த வழிமுறையைவிட மிக மிக இன்றியமையாதது உங்கள் நிறுவனத்தின் சீரமைக்கப்பட்ட செயல்முறைகள் ஆகும் – எனவே STANDARDISE FIRST.

இவ்வாறு ஒவ்வொரு செயல்முறையாக நிறுவனத்தின் எல்லா பணிகளையும் சீரமைப்பு செய்வது இத்துறையின் வேலையாகும்.

இவ்வாறு சீரமைப்பு செய்வதன் நன்மைகள்

  1. உங்கள் பணியாளர்கள் மாறினாலும் செயல்முறை மாறாமல் இருக்கும்.
  2. உற்பத்தித் தரமும், உற்பத்தித் திறனும் அதிகரிக்கும்.
  3. புதிதாகப் பணியை மேற்கொள்பவர்களுக்குப் பயிற்சி கொடுப்பது எளிதாகும்.
  4. அளவுக்கு அதிகமாக ஒரு சிலரை நம்பியே தொழில் செய்யவேண்டிய அவசியம் குறையும்.
  5. நிறுவனத்துக்குள் Collective Intelligence என்று சொல்லப்படும் கூட்டு நுண்ணறிவு வளரும். அதாவது, நிறுவனத்திலுள்ள அனைவரின் அறிவாற்றலும் ஒருங்கிணைக்கப்பட்டு, நிறுவனத்தின் அறிவாற்றலாக மாறும்.
  6. ஒவ்வொரு துறையையும், அதன் மேலாளரையும், முக்கியப் பணியாளரையும் அவர்களது பங்களிப்பையும் KPI களின் மூலமும், டார்கெட்கள் மூலமும் அளவிட முடியும்.

சீரமைப்பு செய்ய சிறந்த வழி?

நான் பார்த்தவரை ஒரு நிறுவனத்தின் செயல்முறைகளைச் சீரமைக்க Quality Management System எனப்படும் ISO 9001 வழிமுறைகளே மிகச் சிறந்த வழியாகும். இந்த ISO வழிமுறைகள் பல்வேறு காரணங்களால் இன்று ஒரு விற்பனைப் பொருளாகவும், காட்சிப் பொருளாகவும் மாறிவிட்டது. மாற்றிவிட்டோம் என்றே சொல்லலாம்.

ஆனால், சர்டிபிகேட்டிற்காக அல்லாமல், சுய முன்னற்றத்துக்காக இதனைப் பயன்படுத்தும்போதுதான் இதன் முழு பலனையும் நீங்கள் அனுபவிக்க முடியும். இந்த வழிமுறையில் ஒரு நிறுவனம் என்னவெல்லாம் செய்யவேண்டும், அவற்றை எப்படி செய்யவேண்டும், அவற்றை செய்ய எப்படித் திட்டமிடவேண்டும், நடைமுறைகளை எப்படி மறுஆய்வு செய்யவேண்டும், எப்படி மேம்பாடு செய்யவவேண்டும் என அனைத்தும் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன.

ஒரு நிறுவனத்தைத் தோல்வியடையாமல் காப்பாற்றும் பாதுகாப்பு வளையமாக நான் இந்த ISO 9001ஐப் பார்க்கிறேன். இதனை Quality Management System என்பதற்கு பதிலாக ஒரு SMEக்கான Business Management System என்று கருதுகிறேன்.

Process Development

SMEக்களின் வளர்ச்சி விகிதம் குறைவாக இருப்பதற்கு Process Development எனப்படும் செயல்முறை மேம்பாடு அல்லது தொடர் முன்னேற்றம் இல்லாமல் இருப்பதும் ஒரு காரணமாகும்.

உங்கள் நிறுவனத்தில் செலவுகளைத் தவிர வேறென்னவெல்லாம் தொடர்ந்து உயர்கின்றன? உங்கள் உற்பத்தித் திறன் வருடாவருடம் அதிகரிக்கிறதா? அதற்கென உங்கள் உற்பத்தி மேலாளருக்கு நீங்கள் இலக்கு கொடுத்திருக்கிறீர்களா? உங்கள் Order Lead Time குறைந்துகொண்டே வருகிறதா? உங்கள் பொருட்களின் தரம் தொடர்ந்து உயர்ந்துகொண்டே வருகிறதா? உங்கள் நிறுவனத்தில் விபத்துகள் மற்றும் காயங்கள் ஏற்படுவது தொடர்ந்து குறைகிறதா?

இவற்றில் ஒரு சில விஷயங்கள் நடந்தாலும் அது உங்கள் வெற்றிக்கான வழி.

பல மைல் பயணம் ஒரு அடியில் தொடங்குகிறது.

இப்படி ஒவ்வொரு அடியாக நாம் பல துறைகளிலும் முன்னேறும்போது நமது போட்டியாளர்களைப் பின்னுக்குத் தள்ளி நாம் வெற்றியடைந்து கொண்டே செல்லலாம். ஜப்பானிய நிறுவனங்கள் இவ்வாறான தொடர் முன்னேற்றத்தை செய்து மிகப்பெரிய வெற்றியை அடைந்திருக்கின்றன.

டொயோட்டாவின் சுவாரசியமான கதை

குறிப்பாக, Toyota கார் நிறுவனம் இதில் மிகப் பிரபலமானது. 1970கள் தொடங்கி இன்றுவரை உலகக் கார் துறையை ஆக்கிரமித்திருக்கும் இந்நிறுவனம், 1980களில் அமெரிக்காவின் மிகப்பெரிய கார் நிறுவனங்களான GM, Ford மற்றும் Chrysler மோட்டார் நிறுவனங்களைப் பின்னுக்குத் தள்ளி, அமெரிக்காவிலேயே அவர்களைத் தாண்டி வளர்ந்தது.

அந்த சமயத்தில், டொயோட்டாவின் இந்தத் தொடர் முன்னேற்ற வழிமுறைகளைக் கற்றுக்கொள்ள அதன் மிகப்பெரிய போட்டி நிறுவனமான GM நிறுவனம் அவர்களை நாடியது. தன்னுடைய வெற்றி ரகசியமான தொடர் முன்னேற்ற வழி முறைகளை மறைத்து வைக்கும் என அமெரிக்கர்கள் அனைவரும் எதிர்பார்த்த போது டொயோட்டா நிறுவனம், GM நிறுவனத்தோடு இணைந்து NUMMI என்று ஒரு கூட்டு நிறுவனத்தி உருவாக்கி அந்தத் தொழிற்சாலையில் வேலை செய்பவர்களுக்கு தனது தொடர் முன்னேற்ற முறைகளைக் கற்றுக் கொடுத்தது.

ஏன் உங்கள் போட்டியாளர்களுக்கு இந்தத் தொடர் முன்னேற்ற முறைகளைக் கற்றுக்கொடுக்கிறீர்கள்? உங்கள் ரகசியத்தைத் தெரிந்துகொண்ட அவர்கள் உங்களை எளிதாகத் தோற்கடித்து விடுவார்களே என்று பலர் டொயோட்டா நிர்வாகிகளிடம் கேட்டனர்.

அதற்கு அவர்களின் பதில் – “நாங்கள் கடந்த முப்பது முதல் நாற்பது வருடங்களாக இந்த வழிமுறையை எங்கள் நிறுவனத்தில் நடைமுறைப் படுத்தி வருகிறோம். இப்போது இவர்களுக்குக் கற்றுத் தருகிறோம். எங்களது போட்டியாளர்கள் இதனைப் பயன்படுத்தி முன்னேறும்போது, நாங்களும் அதனைத் தொடர்ந்து பயன்படுத்தி அவர்களை விட வேகமாக முன்னேறிவிடுவோம். எங்கள் போட்டியாளர்களை விட எங்கள் மீதும் இந்த வழிமுறையின் மீதும் எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது”

Cost Reduction

இந்தத் தொடர் முன்னேற்றங்களால் ஏற்படும் மிக முக்கியப் பயன் – எல்லா வேலைகளிலும் செலவு மிச்சம் ஆகும். ஆனால் இந்த cost reduction என்பது ஒரு byproduct ஆகும்.

எல்லா இடங்களிலும், எல்லோரும் இந்த வழியில் தங்களது வேலைகளை முன்னேற்றம் செய்யும்போது உங்கள் நிறுவனம் தரம், உற்பத்தித் திறன், குறைவான உற்பத்தி நேரம், குறைந்த விலை, குறித்த நேரத்தில் டெலிவரி, போன்ற அனைத்து கோணங்களிலும் முன்னேறிக்கொண்டிருக்கும்.

இதனால் வாடிக்கையாளர், சேனல் பார்ட்னர்கள் என அனைவரின் நன்மதிப்பையும் பெறமுடியும்.

நாம் Process & Product Developmentஇன் அறிமுக அத்தியாயத்தில் பார்த்த Cost Curve நினைவிருக்கிறதா? குறிப்பாக, புதுமைகளைப் பெரிதாகப் புகுத்த முடியாத துறையில் இருக்கும் நிறுவனங்களுக்கும், ஏற்கனவே Commodity நிலையில் இருக்கும் நிறுவனங்களுக்கும் இந்தத் தொடர் முன்னற்றம் ஒரு வரப்பிரசாதமாகும்.

தொடர்ந்து முக்கியமான பணிகள் முன்னேற்றம் அடைவதால், உற்பத்தி மற்றும் சேவைக்கான செலவும் தொடர்ந்து குறைகிறது. இதனால், ஒரு நிறுவனத்தால் சந்தை விலையை சமாளித்து லாபம் பார்க்க முடிகிறது. அதைத்தான் இந்தப் படம் விளக்குகிறது.

போட்டி தொடர்ந்து நிலவும்போது இவ்வாறான முன்னேற்றம் செய்யாத நிறுவனங்கள் இந்த விலை அழுத்தத்தைத் தாங்கமுடியாமல் வெளியேறி விடுவார்கள்.

அடுத்து

எதிர்காலத்தைச் சார்ந்த People Development பற்றி எழுதுவதாக இருந்தேன். ஆனால், மார்க்கெட்டிங் பற்றிப் படித்த சிலர் அடுத்ததாக சேல்ஸ் பற்றி எழுதினால் நன்றாக இருக்கும் என்று கருத்து சொல்லியிருந்தனர். அதனால், அடுத்த அத்தியாயத்தில் விற்பனைத் துறையின் நோக்கங்கள் மற்றும் வேலைகளைப் பற்றிப் பார்ப்போம்.