செயல் மேன்மை முறைகள்
Operational Excellence – விடையைத் தேடி
பதினாறு வருடங்களுக்கு முன் ஒரு கெமிக்கல் நிறுவனத்தில் QC கெமிஸ்டாக எனது பணி வாழ்க்கையைத் தொடங்கினேன். அதன் பின் உற்பத்தித் துறையில் கெமிஸ்ட்ரியைப் புரிந்துகொள்ளவும் எனது வேலையைப் புரிந்துகொள்ளவும் சில வருடங்கள் தேவைப்பட்டன.
என் பணியை நான் விரும்பத் தொடங்கிய சில நாட்களில் எனக்குள் ஒரு கேள்வி எழுந்தது.
“ஒரு நிறுவனத்தின் வளர்ச்சியில் Quality (தரக் கட்டுப்பாடு) துறையின் பங்களிப்பு என்ன?”
இந்தக் கேள்விக்கான பதிலைத் தேடும் முயற்சியில் Quality சம்மந்தமான பல புத்தகங்களை படிக்கத் தொடங்கினேன்.
operational excellence என்னும் செயல் மேன்மை தொடர்பான பல விஷயங்களைத் தேடிப் பயணித்தேன். ஒரு கட்டத்தில் இப்படிப்பட்ட செயல் மேலாண்மை உத்திகளை நடைமுறைப் படுத்துவதே Quality துறையின் பங்களிப்பாக இருக்கமுடியும் என்று முடிவெடுத்தேன்.
அதற்கான முறையான கல்வியின் மூலம் என்னை வளர்த்துக்கொண்டேன். பின் படிப்படியாக Quality துறையின் மேலாளராக உயர்வு பெற்றேன்.
நான் மேலாளராக சேர்ந்தபோது அங்கு Quality துறையில் 4 என்ஜினீயர்கள் இருந்தார்கள். எங்கள் நிறுவனம் வளர வளர, வாடிக்கையாளர்களின் தேவையும் மறுபுறம் புகார்களும் அதிகரித்த வண்ணம் இருந்தன.
உற்பத்திப் பொருட்களின் புகார்களைக் குறைக்க நான் தரக் கட்டுப்பட்டுத் துறையில் மேலும் 16 என்ஜினீர்களைச் சேர்த்தேன். தரப்பரிசோதனைகளைக் கடுமையாக்கும் போது தரக்குறைபாடுகள் சரியும் என்ற என் கணிப்பைப் பொய்யாக்கி வாடிக்கையாளர் புகார்கள் அதிகரித்துக் கொண்டே சென்றன.
இந்த சக்கர வியூகத்தில் இருந்து வெளியேற மீண்டும் அதிகமாகப் படிக்கத் தொடங்கினேன். தரம் மற்றும் நிர்வாகத்துறை வல்லுனர்களின் உதவியை நாடினேன். அதிர்ஷ்டவசமாக எனக்குப் பல உண்மைகள் புரியத் தொடங்கின.
Dr எட்வர்ட்ஸ் டெமிங் பற்றியும் உற்பத்தித் தரத்தையும் உற்பத்தித் திறனையும் உயர்த்த அவரது கோட்பாடுகளையும் அந்த வல்லுநர்கள் எனக்கு அறிமுகம் செய்தனர்.
இந்த சமயத்தில் என் மனதிற்குள் இருந்த கேள்வி சற்றே மாற்றமடைந்தது.
ஒரு நிறுவனத்தின் வளர்ச்சிக்கு இவ்வாறான செயல் மேன்மை முறைகளின் (Operataional Excellence Methodologies) உண்மையான பங்களிப்பு என்ன?
எங்கள் நடைமுறை வித்தியாசமானது!
இப்படித் தொடர்ந்த பயணத்தில் நான் செயல் மேன்மை ஆலோசகராக உருமாறினேன். கடந்த பத்து வருடங்களாக Consultantஆக, பல செயல் முறைகளையும் வெவ்வேறு உத்திகளையும் கற்றுக் கொண்டிருக்கிறேன். ஆனால், அவற்றை நடைமுறைப் படுத்த முற்படும்போது பல நிறுவனங்களின் வல்லுனர்களிடமும் மேலாளர்களிடமும் இந்த செயல் முறைகளின் மீது ஒரு அந்நியத்தையும் சலிப்பையும் என்னால் காண முடிகிறது.
“இது போன்ற விஷயமெல்லாம் இங்கே வேலை செய்யாது. எங்களோட நிறுவனம் டொயாட்டோ அல்லது GE மாதிரியான கம்பெனி இல்லை. இங்க எல்லாம் வேற மாதிரி”.
அதே சமயம், லீன், சிக்ஸ் சிக்மா அல்லது 5S போன்ற நடைமுறைகள் ஆரம்பத்தில் மிகப்பெரிய மாற்றத்தைத் தந்து உற்பத்திச் செலவைக் குறைத்தாலும், அவை நீடித்த பலனையும், பண மிச்சத்தையும் கொடுப்பதில்லை என்பதையும் மறுக்க முடியாது.
ஒரு நிறுவனத்தில் இதுபோன்ற நடைமுறைகள் தொடங்கிய சில நாட்களில் மிகப்பெரிய வரவேற்பையும் எதிர்பார்ப்பையும் பெறுகின்றன. ஆனால் நாளடைவில் நிறுவனத்தின் உயர்மட்ட மேலாளர்களின் ஆர்வம் குறையத் தொடங்குகிறது. மற்ற அலுவலர்களும், ஊழியர்களும் அவற்றை மறந்து பழைய நிலைமைக்கு வெகு விரைவில் திரும்பி விடுகின்றனர்.
அது போன்ற தருணங்களில் எனக்கு ஏற்படும் ஆதங்கம் அளவிட முடியாதது.
“உற்பத்தித் தரத்தை உயர்த்தவும், உற்பத்தி திறனைப் பெருக்கவும், விரயங்களைத் தடுக்கவும் நல்ல வாய்ப்புகளை உங்கள்ஒரு கையிலும் மிகப் பெரிய சந்தை வாய்ப்புகளை மறு கையிலும் வைத்துக் கொண்டு – உங்களால் இரண்டையும் பயன்படுத்த முடியவில்லையே என்று என் மனம் பதறும்.
இவ்வாறான அனுபவங்களால் எனக்குள் இன்னொரு கேள்வி பிறந்தது.
ஒரு நிறுவனத்தின் அனைத்துத் தரப்பு ஊழியர்களும் இது போன்ற மேன்மை முறைகளை ஏன் விரும்புவது இல்லை?
சில மைல்கற்கள்…
நான் சில நிறுவனம் சார்ந்த நடத்தை (organisational behaviour), உளவியல் மற்றும் நிர்வாக உறவுமுறைகளைப் பற்றி தொடர்ந்து படித்து வருகிறேன். கிடைக்கும் சந்தர்ப்பங்களில் நடக்கும் விஷயங்களைப் படித்தவற்றோடு ஒப்பிட்டு உன்னிப்பாக கவனித்தும் வருகிறேன். நான் நிறுவனத் தலைவர்கள், மேலாளர்கள் மற்றும் தொழிலாளர்களிடம் நிறைய கேள்விகளைக் கேட்டும் உரையாடியும் தகவல்களை சேகரிக்கிறேன்.
என் கேள்விகளுக்கெல்லாம் பதில் கிடைத்துவிட்டது என்று இப்போது சொல்ல முடியவில்லை. ஆனாலும் சில உண்மைகளை நான் புரிந்து கொண்டேன். இவைதான் முடிவா அல்லது இவை முழுமையான உண்மையா என்பது எனக்குத் தெரியவில்லை. என்றாலும் எனக்குத் தெரிந்தவற்றை இங்கே உங்களுடன் உரையாட விரும்புகிறேன்.
ஒரு நிறுவனத்தின் தலைவரோ, மேலாளரோ இந்த செயல் மேன்மை முறைகளைக் கடைபிடிக்கத் தடையாய் இருப்பவை –
1. இந்தக் கொள்கைகளின் தோற்றம் மற்றும் பரிணாம வளர்ச்சி பற்றி தெரிந்து கொள்ளாமல் இருத்தல் –
2. இது போன்ற நடைமுறைகளை பின்பற்றி பிற நிறுவனங்கள் எவ்வாறு முன்னேற்றம் அடைந்தன, அவற்றை நாம் எப்படிக் கையாள வேண்டும் என்று அறியாமல் இருத்தல் –
3. இந்த வழிமுறைகள் சில நிறுவனங்கள் அல்லது சில நிபுணர்களின் கண்டுபிடிப்பாக நினைத்தல். ஆனால் என் புரிதல் என்னவென்றால், இந்த செயல்முறைகளை யாரும் கண்டுபிடிக்கவில்லை. அவர்கள் சந்தித்த சவால்களையும் சில அச்சுறுத்தல்களையும் சமாளிக்க அவர்கள் கையாண்ட நடைமுறை மாற்றங்களே நாளடைவில் ஒரு குறிப்பிட்ட செயல் முறையாக உருபெற்றுருக்கின்றன.
லீன், சிக்ஸ் சிக்மா, கய்சென், ISO, என்பன போன்ற மேலாண்மை முறைகளின் பின்புலத்தைப் புரிந்து கொள்வதன் மூலம் இந்த இடைவெளியை நிரப்பமுடியும் என நான் உறுதியாக நம்புகிறேன்.
மேலும் இவற்றின் வேர்களைத் தேடி அறியும்போது
1. ஒவ்வொரு நிறுவனத் தலைவரும், மேலாளரும் உலகில் உள்ள சிறந்த மேலாண்மை முறைகளைத் தெரிந்து கொள்ளலாம்
2. நம்முடைய தினசரி நிர்வாக சூழலுக்கு ஏற்ற முடிவுகளை நாம் தீர்மானிக்கலாம்
3. இன்று உலகளவில் சிறந்து விளங்கும் நிறுவனங்கள் எந்தமாதிரியான சவால்களை எதிர்கொண்டன, அவற்றின் உறுப்பினர்கள் அந்தசவால்களை எப்படி சமாளித்தனர் என்பைத அறியலாம்
4. இந்தப் படிப்பினைகள் மூலம், நமது நிறுவனத்தை எப்படி சிறந்த நிறுவனமாக உருவாக்குவது என்ற திட்டத்தை வகுக்கலாம்
5. அந்த திட்டத்தை நோக்கிய முயற்சிகளில் சவால்களை எளிதில் சமாளிக்கலாம்