நிறுவனத்தின் மூன்று பிரிவுகள்

உங்கள் நிறுவனத்திற்கு வடிவம் கொடுங்கள்! – Chapter 2

Organisation Structure in Small Businesses

முதலில் இருந்து தொடங்குவோம்

நமது கலாச்சாரப் படி, எந்த காரியத்தைத் தொடங்கும் போதும் கடவுளை நினைத்துத் தொடங்கவேண்டும். ஒரு கடிதமோ ஒப்பந்தமோ எழுதும்போதும் கடவுளின் அடையாளத்தை எழுதியபிறகே தொடங்குவோம். ஏன்? 

கடவுளை நினைத்துத் தொடங்கினால் எல்லாம் சிறப்பாக நடக்கும் என்பது மட்டுமல்ல; எல்லாம் சிறப்பாக முடியும் என்பதும் தான். அதாவது, கடவுளை நினைத்துத் தொடங்கும்போது, நாம் அந்தசெயலின் முடிவை நினைத்து ‘எல்லாம் நல்லபடியாக நடந்து முடியவேண்டும்’ என்று வேண்டுவோம். அதன் மூலம், அந்த செயலின் முடிவை நாம் நினைத்துப் பார்த்தபின் அந்தசெயலைத் தொடங்குவோம்.

இதைத்தான் ஸ்டீவன் கோவே, தனது 7 Habits of Highly Successful People என்ற புத்தகத்தில் “Start with the end in mind” என்று சொல்கிறார். சைமன் சினேக் என்ற சிந்தனையாளர் இதனைத் தனது வாழ்க்கைசெய்தியாகவே சொல்கிறார். “செய்யும்முன் ஏன் செய்கிறோம் என்பதை முதலில் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள் – start with why” என்கிறார்.

ஏன் ஒரு நிறுவனத்திற்கு நிர்வாகக் கட்டமைப்பு (Organiation Structure) அவசியம்?

இந்தக் கேள்விக்குப் போவதற்கு முன் பிசினஸ் என்றால் என்ன என்பதைப் புரிந்து கொள்வோம். 

நாம் ஏதேதோ காரணங்களுக்காக ஒரு பிசினெஸ்ஸை ஆரம்பித்து இருக்கலாம். ஆனால், உண்மையில் ஒரு பிசினஸ் என்றால் என்ன? ஒரு வர்த்தகத்தில் என்ன நடக்கிறது?

ஒரு வாடிக்கையாளர் உங்களை நாடி வருகிறார். அல்லது நீங்கள் அவர்களைத் தேடிச் செல்கிறீர்கள். அவர்கள் உங்களிடம் பொருளையோ சேவையையோ வாங்கிக் கொள்கிறார்கள். அதற்கு அவர்கள் பணம் தருகிறார்கள். அவர்கள் கொடுத்த பணத்தில் நம் செலவுபோக மிச்சம் தான் நமக்கு லாபம். அவ்வளவுதான் ஒரு பிசினஸ். 

ஒரு பிசினஸ் என்பது நமது வாடிக்கையாளருக்கு என்ன வேண்டுமோ அவற்றை அதிகமாக வழங்கி அவர்களிடமிருந்து மேலும் மேலும் நமக்கான பணத்தைப் பெறவேண்டும். நீங்கள் ஒருவராகச் சென்று எத்தனை வாடிக்கையாளரை சந்திக்க முடியும்? 10 பேர், 20 பேர் அந்த அளவுக்கு உங்களுக்கு லாபம் கிடைக்கும்.

மேற்கொண்டு லாபம் கிடைக்க என்ன செய்யவேண்டும்?

பொருட்களின் விலையை ஏற்றலாம். உங்கள் வாடிக்கையாளருக்கு அவரின் தேவைக்கு அதிகமான பொருட்களை விற்றுவிடலாம். உங்கள் வேலை நேரத்தை இரட்டிப்பாகி நீங்கள் 16 மணிநேரம் வரை வேலை செய்து நீங்கள் அதிகமான வாடிக்கையாளரைப் பார்க்கலாம். அதற்கு மேலும் லாபம் சம்பாதிக்க என்ன செய்யலாம்?

இப்போது நீங்கள் உங்களைப் போலவே வாடிக்கையாளர்களிடம் ஆர்டர் எடுக்க மேலும் ஆட்களை சேர்க்க வேண்டும். இப்போதுதான் அங்கு ஒரு நிறுவனம் உருவாகிறது. அந்நிறுவனம் மேலும் மேலும் வளர்வதற்கு இது போன்ற பல பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள். அவர்களை ஒருங்கிணைக்கவும், அவர்கள் செய்யவேண்டிய பணிகளை அவர்களுக்கு அறிவுறுத்தவும், அவர்கள் செய்த வேலைகளை சரிபார்க்கவும் அந்நிறுவனத்திற்கு ஒரு கட்டமைப்பு தேவைப்படுகிறது.

வெவ்வேறு டிபார்ட்மெண்ட்கள்

நீங்கள் வெறும் விற்பனை மட்டும் செய்வதானால் மேற்சொன்ன அளவு ஆட்கள் போதும். அவர்கள் அனைவரும் விற்பனை மட்டுமே செய்வார்கள். ஆனால் நீங்கள் ஒரு பொருளை உற்பத்தி செய்பவராக இருந்தால் உங்களுக்கு உற்பத்தித்தொழிலாளர்கள் வேண்டும். பொருட்களை வாடிக்கையாளருக்கு அனுப்ப லாஜிஸ்டிக்ஸ் டிபார்ட்மென்ட் தேவை. பொருட்களைப் பாதுகாக்க ஸ்டோர்ஸ் டிபார்ட்மென்ட் தேவை. Raw material என்ற உள்ளீட்டுப் பொருட்களை வாங்க பர்ச்சேஸ் டிபார்ட்மென்ட் தேவை. இத்தனை வெவ்வேறு வல்லுநர்களை நியமிக்க HR டிபார்ட்மென்ட் தேவை. வரவு செலவு கணக்கு பார்க்க அக்கவுன்ட்ஸ் டிபார்ட்மென்ட், தரப் பரிசோதனைக்கு குவாலிட்டி டிபார்ட்மென்ட் என்று பட்டியல் நீள்கிறது.

பிஸினஸின் புதிய புரிதல்

இன்றைய காலகட்டத்தில் வளர்ச்சி என்பது நாம் விரும்பி ஏற்கும் ஒரு வாய்ப்பு அல்ல. மாறாக வளர்ச்சி என்பது இன்று கட்டாயமாக்கப்பட்டுவிட்டது. இதனால் நான் பிசினெசைப் பின்வருமாறு வரையறுக்கிறேன்.

வாடிக்கையாளர்களுக்கு நாம் எவ்வாறு மென்மேலும் சிறந்த சேவையை / பொருளை வழங்கமுடியும் என்று ஆராய்ந்து, அந்த சேவையை / பொருளை நம்மை விடத் திறமையான பணியாளர்களைக் கொண்டு அதிகப்படியான வாடிக்கையாளரிடம் கொண்டு சேர்ப்பது.

மேலாண்மை என்ன சொல்கிறது?

இவ்வாறு வளரும் நிறுவனங்கள் எப்படித் தங்களைக் கட்டமைத்துக் கொள்ளவேண்டும் என்பது பற்றி மேலாண்மைத் துறை பல அறிவுரைகளையும் உதாரணங்களையும் வழங்குகிறது.

பொதுவாக ஒரு நிறுவனத்தின் அடிப்படைக் கட்டமைப்பு மூன்று பிரிவுகளாக இருக்கும். அவை

  1. Top மேனேஜ்மென்ட் என்று சொல்லக்கூடிய முதலாளர்களுக்கான முதல் அடுக்கு
  2. Middle மேனேஜ்மென்ட் என்ற மேலாளர்களுக்கான இரண்டாவது அடுக்கு மற்றும்
  3. Work force என்று சொல்லக்கூடிய பணியாளர்களுக்கான மூன்றாவது அடுக்கு.

இதன் வடிவம் ஒரு பிரமிடைப் போல் அமைந்திருக்கும். அதாவது, முதலடுக்கில் 1 அல்லது மிகச் சிலபேர், இரண்டாவது அடுக்கில் பத்திலிருந்து 100 பேர்வரை, மற்ற 10 முதல் பல ஆயிரம் வரையிலான பணியாளர்கள் மூன்றாவது அடுக்கில் இருப்பார்கள்.

எதன் அடிப்படையில் இந்த 3 பிரிவுகள்?

ஒவ்வொரு பிரிவிலிருக்கும் மக்கள் பொதுவாக செய்யக்கூடிய வேலையின் அடிப்படையிலேயே இவ்வாறு 3 பிரிவுகள் ஏற்படுத்தப் பட்டுள்ளன. 

WorkForce 

மூன்றாவது பிரிவுக்கான வேலை அந்தப்பிரிவின் பெயரிலிருந்தே அறியலாம். இப்பிரிவில் இருப்பவர்கள் பெரும்பாலும் ஆப்பரேட்டர்கள், சூப்பர்வைசர்கள், டெச்னிசியன்கள், விற்பனைப் பிரதிநிதிகள், அக்கௌன்டன்ட்கள் போன்றோர். இவர்கள் தங்கள் உடல் உழைப்பையும் தங்கள் நேரத்தையும் தங்களது நிறுவனத்திற்காக வழங்குகிறார்கள். அவர்களின் உழைப்பு மற்றும் நேரத்தின் பங்களிப்பிற்கு ஏற்ப நிறுவனம் அவர்களுக்கு சம்பளம் வழங்குகிறது.

இங்கு மிக முக்கியமாக நாம் கவனிக்கவேண்டிய விஷயம் நமது நிறுவனத்தின் அடிநாதம் இங்குதான் அமைந்துள்ளது. விற்பனையோ, உற்பத்தியோ, சேவையோ – நமது வடிக்கையாளருக்குத் தேவையான விஷயங்கள் இங்குதான் நடைபெறுகின்றன. இதை ‘a business is done by work force’ என்று சொல்வார்கள். 

இந்தப் பிரிவை நாம் ஒரு நிறுவத்தின் உடல் திறன் என்று சொல்லலாம்.

Middle Management 

இடைநிலை மேலாளர்கள் என்ற இந்த அடுக்கில், ஜூனியர் மேனேஜர் முதல், ஜெனரல் மேனேஜர், சீனியர் வைஸ் ப்ரெசிடெண்ட் வரை உள்ள அனைத்து மேலாளர்களும் அடங்குவர். இவர்கள் என்ன விஷயத்தை நிறுவனத்திற்குக் கொடுக்கிறார்கள்? 

கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். பெரும்பாலான மேனேஜர்கள் உற்பத்திப் பொருளைத் தொட்டிருக்கக் கூட மாட்டார்கள். ஒரு வாடிக்கையாளரிடம் கூட பேசி இருக்க மாட்டார்கள். அவர்கள் தங்கள் பணத்தையும் முதலீடு செய்யவில்லை. அப்படியென்றால் அவர்களின் பங்களிப்பு என்ன? 

விடையைக் கண்டுபிடித்து விட்டீர்களா? சரி. அவர்கள் தங்கள் அறிவுத் திறனைப் பங்களிக்கிறார்கள். அவர்களின் அறிவினைப் பயன்படுத்தி நிறுவனத்திலுள்ள அனைவரும் என்ன வேலையை செய்யவேண்டும், எப்படி செய்வது, எப்போது செய்வது என்பதைத் திட்டமிடுகிறார்கள். 

இந்தப் பிரிவை நிறுவனத்தின் அறிவுத் திறன் என்று சொல்லலாம்.

முதலாளர்களுக்கான அடுக்கு

ஆம்! நீங்கள் சரியாகத்தான் படித்தீர்கள். முதலாளர்கள். பணியை செய்வதால் பணியாளர்கள். தங்கள் மேலாண்மையைத் தருவதால் மேலாளர்கள். முதலை இடுவதால் முதலாளர்கள். நாம் இங்கு முதலாளிகளைப் பற்றிப் பேசவில்லை. Top Management என்ற பிரிவில் அந்நிறுவனத்தை ஆரம்பித்தவர்கள், நிர்வாக இயக்குனர்கள், CEO எனப்படும் தலைமை செயலாக்க அலுவலர், Functional Presidents, போன்றவர்கள் இருப்பார்கள்.

ஒரு SME நிறுவனத்தில் நாம் அதன் தொழில்முனைவோரை மட்டும் இந்தப் பிரிவில் வைத்துக்கொள்ளலாம்.

இவர்களின் வேலை என்ன?

வேலையே செய்யாமல் சும்மா இருப்பதுதான் இவர்கள் வேலை. இவர்கள் திட்டமிட ஆரம்பித்தால் மேனேஜர்களின் வேலையைப் பார்பதாகிவிடும். இவர்கள் உடல் உழைப்பை அளித்தால் அது work force இன் வேலையைப் பார்பதாகிவிடும்.

அப்படியென்றால், வேலை செய்யாமல் எப்படி சம்பளம் வாங்குவது? ஒரு நிறுவனத்தின் மிக மிக முக்கியமான வேலை இங்குதான் நடக்கிறது. அந்தவேலை – கனவு காண்பது, சிந்திப்பது, முடிவெடுப்பது, அந்த முடிவை அறிவிப்பது – அவ்வளவுதான்.

ஒரு உதாரணத்தைப் பாப்போம். ஒரு போர்க்களத்தில், அரசன் முடிவெடுக்கவேண்டும். தனது படைத்திறம், எதிரியின் வலிமை, தாக்குதல் முறை, அதற்கான நேரம் ஆகியவற்றை ஆராய்ந்து முடிவெடுக்கவேண்டும். அந்த முடிவுகளைத் தளபதிகளின் மூலமாக படைவீரர்களைக் கொண்டு செயலாக்க வேண்டும். அமைச்சர்கள் அரசனை வழி நடத்த, தளபதிகள் படைவீரர்களை வழி நடத்துவார்கள். போர்க்களத்தில் உண்டாகும் சிறிய பிரச்சினைகளைத் தளபதிகளே தீர்த்துக் கொள்வார்கள்.

இதுதான் முதலாளர்களுக்கான வேலை.

அடுத்து…

இந்த மூன்று பிரிவினருக்கான குண நலன்கள் என்னென்ன என்பதை அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம். இன்னொரு சுவாரசியமான விஷயம் – இந்த மூன்று குண நலன்களும் ஒவ்வொரு தொழில் முனைவோரிடம் காணப்படும். அவரிடம் எந்த குணம் அதிகம் வெளிப்படுகிறதோ அந்த நிலையிலிருந்தே அவர் தனது தொழிலை நடத்துவார்.

விரிவாக விவாதிப்போம்.