நிறுவனத்திற்குத் தேவையான ஆளுமைகள்

உங்கள் நிறுவனத்திற்கு வடிவம் கொடுங்கள்! – Chapter 6

An article series on Benefits of Organisation Structure & KPIs in MSMEs

ஒருவரின் ஆளுமைகளின் அடிப்படையில் அவரது விருப்பங்கள் மாறுபடும் என்பதையும், நான்கு விதமான ஆளுமைக் கட்டங்களையும் சென்ற அத்தியாயத்தில் பார்த்தோம். மேலும் ஒருவருக்கு மனநிறைவைத் தரக்கூடிய ஆனந்தக் கட்டத்தைப் பற்றியும் பார்த்தோம்.

இங்கு அந்த 4 அடிப்படை ஆளுமைகள் (Personalities) குறித்தும், அவற்றிற்கு சாதகமான துறைகள் குறித்தும் பார்க்கலாம்.

4  அடிப்படையான ஆளுமைகள்

கட்டம் I

இந்தக் கட்டத்தில் இருப்பவருக்கு புதிய மனிதர்களை சந்திப்பதும், புதிய இடங்களுக்குப் போவதும் ஓர் உத்வேகத்தைத் தரும். தன்னுடைய தோற்றத்தையும், ஆளுமையையும் எளிதாகப் பயன்படுத்தி காரியத்தை சாதிக்க வல்லவர்கள். பெரும்பாலும் இவர்கள் நேரில் போன காரியம் வெற்றிதான். அடுத்தவரின் மன  ஓட்டத்தை எளிதில் புரிந்துகொண்டு அதற்கேற்றவாறு தனது காய்களை நகர்த்துவார். வாய்ப்பேச்சில் சாதுர்யமும், கூடவே இருக்கும் ஒரு அதிகார தோரணையும் (கெத்து) இவர்களுக்கு கைகொடுக்கும். சட்டதிட்டங்களை ‘நான் யார் தெரியுமா?’ என்ற பாணியில் உடைத்து தனது வழியில் செல்வார்கள்.

இந்தக் கட்டத்திற்கு உரிய துறை – மார்க்கெட்டிங், மக்கள் தொடர்பு, Customer Relationship Management, Laisoning, Turn-Key Project Management. 

கட்டம் II 

இவர்கள் தன்னுடைய சிந்தனை ஆற்றலை மட்டுமே நம்பி வாழ்பவர்கள். புதிதான கண்டுபிடிப்புகள், கலைப் படைப்புகள், புதுமையான யுக்திகளை விரல் நுனியிலேயே வைத்துக் கொண்டிருப்பார்கள். புது வழிகளைக் கண்டுபிடிப்பதில் இருக்கும் ஆர்வம் புதிய மனிதர்களிடம் இருப்பதில்லை. பெரும்பாலும் தனிமையிலும், சிந்தனையிலும் இவர்கள் நேரத்தை செலவிடுவார்கள். புதுமையாக யோசிப்பதால் பிரச்சினைகளுக்கு எளிதில் தீர்வு கண்டுபிடிப்பார்கள். இவர்களை சட்டத்திட்டம் போட்டு கட்டுப்படுத்த முடியாது. அவற்றுக்குள் சிக்காமல் மீறும் நுணுக்கமும் சாமர்த்தியமும் நிறைந்தவர்கள்.

இந்தக் கட்டத்திற்கான துறைகள் – R&D, New Product Development, Innovation, Process & Systems Development.

கட்டம் III 

இவர்களின் பலத்தை வெளியில் காட்ட மாட்டார்கள். தன் நேரத்தையும் சிந்தனையையும் தன்னை சார்ந்தவர்களின் நலனுக்காகவும், அவர்களோடு உறவை வலுப்படுத்தவும் செலவிடுவார்கள். நெட்ஒர்க் எனும் பந்தங்கள் அவர்களது பலமாக இருக்கும். எங்கு என்ன நடக்கிறது என்பதைத் தங்கள் இடத்திலிருந்தே இவர்களால் அறிந்துகொள்ள முடியும். பொது வாழ்வில், எங்கு எந்த உதவி வேண்டுமானாலும் இவர்களை அணுகலாம். ஒரு போனில் வேலையை முடிக்க வல்லவர்கள். தெரிந்த நட்பு வட்டத்தில் இருப்பதும், ஒருவருக்கு மற்றொருவர் மூலமாக உதவிகள் செய்வதும் இவர்களின் விருப்பமான விஷயங்கள்.

இந்தக் கட்டத்திற்குப் பொருத்தமான துறைகள் – Sales, Procurement, HR, Factory Management, General Manager, CEO.

கட்டம் IV 

இவர்கள் தங்களுக்கென ஒரு கொள்கையை வகுத்தும், வரைமுறைகளை ஏற்படுத்தியும் அதற்குள்ளே வாழ்பவர்கள். கோட்டை கட்டி வாழும் வாழ்கை இவர்களுடையது. எல்லா விஷயங்களையும் திட்டமிட்டே செய்ய விரும்புவார்கள். நேரம் தவறாமை இவர்களின் பழக்கம். தன்னைப்போலவே அனைவரும் ஒரு கட்டுப்பாட்டுக்குள் செயல்புரிய வேண்டுமென்று எதிர்பார்ப்பார்கள்.

அவர்களுக்கு முழுமையான நம்பிக்கை வரும்வரை புதிய விசயங்களை முயற்சிக்க மாட்டார்கள். ஒரு செயலைத் திருந்தச் செய்யும் வரை திருப்தி அடையமாட்டார்கள். தனது திட்டப்படி எல்லாம் போய்க்கொண்டிருக்கும் வரை அமைதியாகவும் தெளிவாகவும் இருக்கும் இவர்கள் எதிர்பாராத விளைவுகள் ஏற்படும்போது தலைகீழாக நடந்துகொள்வார்கள்.

இந்தக்கட்டத்தின் துறைகள் – Production Management, Quality, Accounts, Auditing, Stores Management, Maintenance.

ஒரு நிறுவனத்தில் இந்த 4 வகை ஆளுமைகள் 

ஒரு நிறுவனம் முழுமையான வளர்ச்சி பெற இந்த நான்கு ஆளுமைகளும் அதில் இருந்தாக வேண்டும். இல்லையென்றால் அந்நிறுவனத்தின் வளர்ச்சி தேக்க நிலையிலேயே இருக்கும். சில நிறுவனங்களின் தேக்க நிலையை சாதாரணமாக ஆராயும்போது எல்லாமே சரியாக இருப்பதாகத் தோன்றும். என்ன குறையென்றே கண்டுபிடிக்கமுடியாது. சில உதாரணங்களைப் பார்ப்போம்.

நிறுவனத் தலைவர் முதல் கட்டத்தில் இருந்தால் 

அந்த நிறுவனம் மார்க்கெட்டிங்கில் சிறப்பாய் செயல்படும். நிறுவனத்தின் பெயரும், நிறுவனரின் பெயரும், நிறுவனத்தின் பிராண்ட்டும் வாடிக்கையாளருக்குப் பரிச்சயமாய் இருக்கும். புதிய வாடிக்கையாளரைக் கொண்டுவருவதாலும், புதிய கடைகளை அல்லது விற்பனை ஏரியாவைப் பிடிப்பது மூலமாகவும் விற்பனை அதிகரிக்கும். 

ஆனால், அவர்களிடம் ஒரு நிச்சயத் தன்மையை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்கள் ஏமார்ந்து போவார்கள். ஒருமுறை மிகச்சிறப்பாக இருந்த உற்பத்திப் பொருள் / சேவை மறுமுறை சுமாராக இருக்கும். அட்ரிஷன் எனப்படும் பணியாளர்கள் விலகல் அதிகம் இருக்கும். System சார்ந்த, திட்டமிட்ட Production, Quality, Accounts போன்றவை பலவீனமாக இருக்கும்.

இரண்டாம் கட்டத்தில் இருந்தால் 

இவர்கள் வாடிக்கையாளரின் தேவை அறிந்து அதற்கேற்ற மாதிரி பொருளையும், சேவையையும் மாற்றிக்கொடுப்பதில் வல்லவர்கள். மிக உயர்ந்த தரமான, புதுமாதிரியான பொருட்களை அவர்கள் நிறுவனம் வழங்கும். ஆனால் திட்டமிட்ட நேரத்தில் இவர்களிடமிருந்து பொருளை வாங்குவது கடினம். இவர்கள் நிறுவனத்தின் விதிமுறைகள் மாறிக்கொண்டே இருக்கும். திட்டமிட்டபடி முன்னேறுகிறோமா இல்லையா என்ற பரிசீலனை குறைவாக இருக்கும். 

தொழிலாளர்களிடம் நிறுவனத்தின் மீது ஈடுபாடு குறைவாக இருக்கும். பணியாளர்களிடம் பொறுப்புகளை ஒப்படைப்பதும் அப்படி ஒப்படைக்கப்பட்ட பணிகளை ஆய்வு செய்வதும் மிக பலவீனமாக இருக்கும். மார்க்கெட்டிங் மற்றும் திட்டமிட்டு வேலைசெய்தல் கூட பலவீனமாக இருக்கும்.

மூன்றாம் கட்டத்தில் இருந்தால் 

அந்த நிறுவனரின் சமூக உறவின் (network) மூலமே பெரும்பாலான ஆர்டர்கள் வந்துகொண்டிருக்கும். மார்க்கெட்டிங் என்பது அவரது நண்பர்களைப் போய் பார்ப்பது, அவர்களுடன் பேசிவிட்டு வருவது அவ்வளவுதான். வாடிக்கையாளரிடம் தொடர்பில் இருப்பதால் அவர்களின் தேவையை அறிந்து பொருட்களையும், சேவையையும் முன்னேற்றம் செய்துகொண்டே வருவார்கள். இதனால் வாடிக்கையாளரின் திருப்தி அதிகரிக்கிறது.

பணியாளர்கள் நிறுவனரிடம் மதிப்பும், நல்லுறவும் கொண்டிருப்பார்கள். இந்நிறுவனத்தின் மிகப்பெரிய பிரச்சினை எதிர்காலத்தைப் பற்றிய தெளிவான குறிக்கோள் இல்லாமல் இருப்பது. எங்கே செல்வது, எந்த விஷயத்தில் முன்னேற்றம் செய்வது என்பன போன்ற திட்டங்கள் இவர்களிடம் இருக்காது. மார்க்கெட்டிங் ஒரு சவாலான விஷயமாக இருக்கும்.

நான்காம் கட்டத்தில்  இருந்தால் 

இந்நிறுவனத்தில் சொன்னவை சொன்னபடி நடக்கும். ரிஸ்க் இல்லாத வகையில் திட்டங்கள் இருக்கும். கையில் இருக்கும் ஆதாரங்களைக்  கொண்டு அதிகப்படியான உற்பத்தி / விற்பனையை அடைவதைக் குறிக்கோளாகக் கொண்டிருப்பார்கள். புதுமையான விஷயங்களை முயற்சி செய்வது குறைவாக இருக்கும். கணக்கு வழக்குகளில் தெளிவாக இருப்பார்கள். 

திட்டங்கள் படியே நிறுவனம் நடத்தப்படும். சட்டங்களுக்கோ திட்டங்களுக்கோ ஒத்துவராத நபர்கள் நிறுவனத்திலிருந்து வெளியேறவேண்டும் அல்லது வெளியேற்றப்படுவார்கள். மார்க்கெட்டிங் அவசியமில்லை என்று நினைப்பதால் மிகப்பெரிய இடைவெளி இதில் இருக்கும். சின்ன சின்ன புதுமைகளைக் காட்டி இவர்களது போட்டியாளர்கள் கஸ்டமர்களைக் கவர்ந்து போய்விடுவார்கள்.

அதனை அவனிடம் …

நான் முன்பே சொன்னதுபோல் இந்த நான்கு கட்டங்களிலும் ஒருவர் ஒரே அளவில் சிறப்பாக செயல்படமுடியாது. ஒரு தொழில்முனைவோர் யாருக்கும் பதில் சொல்லவேண்டியதில்லை. எனவே, தனக்கு எந்த வேலை சிறப்பாகவும் ஈஸியாகவும் வருகிறதோ அந்த வேலையில் மட்டுமே கவனம் செலுத்துவார். மற்றவை அவருக்கு கஷ்டமாக இருப்பதால் அவற்றில் பெரிதாக கவனம் செலுத்த மாட்டார். 

ஆனால் ஒரு நிறுவனம் முழுமையாக வளர்ச்சிபெற அது எல்லா துறைகளிலும் கவனம் செலுத்தவேண்டும். அதற்குத் தகுதியான ஆட்கள் இந்த நான்கு  குணநலன்களுடன் அவரவர்களுக்கான துறையை கவனிக்க வேண்டும். 

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து 

அதனை அவன்கண் விடல்.

என்று இதைத்தான் சொன்னாரோ வள்ளுவர்?

ஆல்-இன்-ஆல்

“இதுக்கு ஏன் சார் நாலு பேர்? என்ன வேணும்ன்னு சொல்லிட்டிங்கல்ல, நானே எல்லாம் சிறப்பா செஞ்சிடுவேன்!” என்று உங்களுக்குள் அந்த ஒரு குழந்தைத் தனமான, பயமறியாத ஒரு குரல் பேசுவது எனக்கு கேட்கிறது. அதெப்படி இல்லாமலிருக்கும். அது உங்கள்த் தொழில்முனைவோராக்கிய நம்பிக்கை கலந்த ஈகோவின் குரல். 

உங்களால் முடியாது என்று நான் சொல்லவில்லை. ஆனால் இவற்றையெல்லாம் அவரவரிடம் விட்டுவிட்டால் வேலை இன்னும் எளிமையாக, மகிழ்ச்சியாக, சீக்கிரமாக முடிந்துவிடும். 

தொழில் வளர்ச்சியின் பார்முலா – குறைவான முயற்சியில் அதிக பலன்.

பிசினஸ் இன் புதிய வரையறை – உங்கள் வாடிக்கையாளருக்குத் தேவையான விஷயங்களில் உங்களால் எதை சிறப்பாகச் செய்யமுடியுமோ அதை நம்மைவிட சிறப்பானவர்களைக் கொண்டு அதிகப்படியாகச் செய்தல்.

சரியா?

எனவே, ஒரு நிறுவனம் தொடர்ந்து வளர, திறமையான பணியாளர்கள் சரியான இடத்தில் இருக்கவேண்டும்.

அதற்க்கான முதல் படி – Oraganisation Structure எனப்படும் நிர்வாக வரைபடம்.

அடுத்து…

சிறிய நிறுவனத்தில் எத்தனைத் துறைகள் வேண்டும்? எத்தனை மேனேஜர்கள் இருக்கவேண்டும்? ஆல்-இன்-ஆல் அழகுராஜாவிலிருந்து அல்டிமேட் ராஜாவாக எப்படி மாறுவது என்று தொடர்ந்து பாப்போம்.