SME வளர்ச்சி Vs கார்பரேட் நிறுவனத்தின் வளர்ச்சி

உங்கள் நிறுவனத்திற்கு வடிவம் கொடுங்கள்! – Chapter 4

An article series on Benefits of Organisation Structure & KPIs in MSMEs

இப்போது உங்கள் மனதில் பல கேள்விகள் ஓடிக்கொண்டிருப்பது எனக்குப் புரிகிறது. பலபேர் மைண்ட் வாய்ஸ் என்று நினைத்துக் கொண்டு சத்தமாகவே புலம்புவது கேட்கிறது.

உங்களுக்குள் எழும் சந்தேகங்கள்

  • நீங்க சொல்றபடி பார்த்தா, நான் கல்லாவுலேயே உட்காரக் கூடாதோ? என்ன சார், நடக்கற விஷயமா பேசுங்க. 
  • இந்தக் காலத்துல யாரை நம்பி பொறுப்புகளை ஒப்படைக்கிறது? ஒருத்தனும் சரியில்லை சார்.
  • நாங்க எல்லாம் சின்ன கம்பெனி சார். நீங்க சொல்ற மாதிரி நிறைய மேனேஜர்களெல்லாம் போட முடியாது. இதெல்லாம் கார்பரேட் கம்பனிக்கு வேணும்னா ஒத்துவரும்.
  • நான் கஸ்டமரைப் போய்ப் பார்த்தாதான் ஆர்டர் கிடைக்கும். வேற யாரையும் அனுப்ப முடியாது சார்.
  • நானே போய்  சரக்கு வாங்கினா தான் சார் எனக்கு  ஒரு திருப்தி. இல்லைன்னா எனக்கு தூக்கமே வராது.
  • காசு விசயத்துல எங்க வீட்ல கொஞ்சம் விவரமா இருப்போம் சார். எங்க தாத்தா காலத்துல இருந்தே எங்க வீட்ல யாரவது ஒருத்தர்தான் கடைய சாத்துவோம்.
  • 30 வருசமா நாங்க இப்படித்தான் சார் வியாபாரம் பண்ணிக்கிட்டு இருக்கோம். சின்னதா ஆரம்பிச்சு இப்போ 40 – 50 பேருக்கு வேலை கொடுக்கும் அளவுக்கு வளர்ந்திருக்கிறோம். எல்லாம் சரியாத்தானே சார் போயிட்டு இருக்கு. இப்போ இதுக்கெல்லாம் என்ன அவசியம்?

என்ன உங்க மைண்ட் வாய்ஸ சரியாய்ப் புரிந்துகொண்டேனா?

ஒரு தலைவனாக நீங்கள் எவ்வளவு நேரம் இருக்கிறீர்கள் என்பதுதான் என் அடிப்படைக் கேள்வி. மேலே நான் சொன்ன அனைத்து கேள்விகளும் என்னிடம் கேட்கப்பட்ட வேள்விகள். நான் இப்போது சொல்லப் போகும் பதில்கள்தான் அவர்களுக்கு நான் சொல்லும் பதில். இந்த சந்தேகங்களை வெளிப்படுத்திய பெரும்பாலானோர் இன்று அவர்களது நிறுவனத்திற்கான organisation structure ஐ உருவாக்கி விட்டார்கள் அல்லது உருவாக்கும் பயணத்தில் இருக்கிறார்கள்.

உங்கள் கேள்விகளுக்கெல்லாம் பதிலாக என்னிடம் இருப்பது மூன்றே மூன்று கேள்விகள் தான்.

1. உங்கள் நிறுவனம் அதன் முழு வளர்ச்சியை அடைந்துவிட்டதா? அதன் முழுப் பலனையும் நீங்கள் அனுபவித்து விட்டீர்களா? ஆம் எனில், நீங்கள் மேற்கொண்டு படிக்க வேண்டாம்.

இல்லை என்றால் – இந்த இரண்டு கேள்விகள்.

2. இயற்கையின் கால நிலைகள் போல், ஒவ்வொரு நிறுவனத்தின் வளர்ச்சியும் பல பருவநிலைகளைத் தாண்டி முதிர்ச்சி அடைய வேண்டி இருக்கிறது. எப்படி, விதை போட்டு, கன்று வளர்த்து, அதை மரமாக்கி, உரம் போட்டு, பூக்கும் காலம் வரும் வரை காத்திருக்கிறோமோ அப்படி – உங்கள் நிறுவனத்திற்கும் வெவ்வேறு படிநிலைகள் இருக்கின்றன. உங்கள் நிறுவனம் இப்போது எந்த வளர்ச்சிப் படியில் இருக்கிறது என்று தெரியுமா?

3. உங்கள் நிறுவனத்தில் நீங்கள் செய்யும் எல்லா  வேலைகளும் உங்களுக்கு செய்யப் பிடிக்குமா? நீங்கள் முழு ஈடுபாட்டுடன் செய்ய முடியாத வேலை ஏதாவது இருக்கிறதா?

விரிவாகப் பாப்போம் 

ஏன் வளர வேண்டும்?

நாம் ஏன் SME ஆகவே இருந்துவிடக்கூடாது? ஏன் ஒரு கார்பரேட் நிறுவனமாக மாறவேண்டும்? 

கொஞ்சம் யோசியுங்கள். இவை இரண்டுக்கும் என்ன வித்தியாசம்? ஏன் கார்பரேட் நிறுவனம் சிறந்ததென்றும் ஒவ்வொரு SMEயும் கார்பரேட்  ஆகவேண்டுமென்றும் விரும்புகிறோம்?

எது வளர்ச்சி?

இவை இரண்டுக்கும் மிகப் பெரிய வித்தியாசம் அவற்றின் வளர்ச்சியில் இருக்கிறது. எவ்வளவு வேகமாக வளர்கிறது என்பதல்ல. அந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்கு யார் பொறுப்பேற்கிறார்கள், யார் அதன் வளர்ச்சிக்காகத் திட்டமிடுகிறார்கள், யார் அதன் வளர்ச்சிக்காக தினமும் உழைக்கிறார்கள்  என்பதில் தான் இருக்கிறது.

ஒரு சிறு நிறுவனத்தில் அனைவருமே வேலைப் பளுவுடன் இருக்கிறார்கள். ஒரு சிறு நிறுவனத்தின் உரிமையாளர், பல நேரங்களில் அந்நிறுவனத்தில் ஒரு மேலாளர் வேலையைப் பார்க்கின்றார். அவரது உதவியாளர்களாக இருக்கும் மேலாளர்கள் பெரும்பாலான நேரங்களில் ஒரு தொழிலாளரின் வேலையைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். 

SME எப்படி வளர்கிறது?

அதனால் ஒரு சிறு தொழில் நிறுவனத்தின் வளர்ச்சி என்பது கீழ்காணும் எதோ ஒரு காரணியால் நடக்கிறது.

1. Inflation என்று சொல்லக்கூடிய பணவீக்கத்தால் விலைவாசிகள் ஏறும். அதனடிப்படையில் விற்பனைப் பொருளின் விலையும் உயர்த்தப்படும். அதனால் நிறுவனத்தின் Turnover அதிகரிக்கும்.

2. உங்கள் மிகப்பெரிய வாடிக்கையாளரின் தொடர்ந்த வளர்ச்சி. அவர்களின் வளர்ச்சியினால் உங்கள் விற்பனை அதிகரிக்கும். இதன் ஒரு தாக்கமாக அந்த ஒன்று அல்லது இரண்டு வாடிக்கையாளர்கள் அந்த வருடத்தின் பெரிய வாடிக்கையாளராக இருப்பார். இது சில ஆண்டுகள் தொடரலாம். ஆனால் இது ஒரு பட்டாசின் மேல் அமர்ந்திருப்பதைப் போன்றது.

3. உள்ளூர் சந்தையில் ஏற்படும் திடீர் மாற்றங்களால் உங்கள் பொருளுக்கான தேவை அதிகரிப்பது. உதாரணமாக, உங்கள் ஊரில் புதிதாகத் தொடங்கப்படும் நிறுவனம் அதன் பணியாளர்களுக்கான தேவைகளை உங்கள் நிறுவனத்திடமிருந்து வாங்குவது. ஓர் அரசாங்க ப்ராஜெக்ட் – ஒரு மருத்துவமனையோ, மின்னுற்பத்தி ஆலையோ கட்டப்படுவது.

4. உங்களிடமிருக்கும் ஏதோ ஒரு ரகசிய காரணி – ஒரு நிறுவனத்தின் வெற்றிக்கான காரணங்கள் பெரும்பாலும் அறியப்படாமல் இருந்துவிடுகின்றன. அதனால், அந்நிறுவனம் எந்த மாறுதலும் செய்யாமல் தொடரவேண்டி இருக்கிறது. அதனால் தான் அது ரகசியம்.

இது ஒரு திட்டமிடப்படாத வளர்ச்சி. யார்வீட்டுப் பசுவோ நம்வீட்டுக்கு வந்து விட்டால் அதை வைத்து பால் கறந்து சம்பாதிக்கலாம். ஆனால் எப்போது வேண்டுமானாலும் பசுவிற்கு சொந்தக்காரன் வந்து பசுவைக் கூட்டிக்கொண்டு போய்விடலாம். அந்த மனநிலை போல், எப்போது யார் வந்து உங்கள் வளர்ச்சியைக் கவர்ந்து போவார்கள் என்று தெரியாத நிலை.

கார்ப்பரேட் நிறுவனத்தின் வளர்ச்சி

ஆனால், ஒரு பெரு தொழில் நிறுவனத்தைப் பொருத்தவரை, அந்நிறுவனத்தின் வளர்ச்சி பல மேலாளர்களின் தினசரிப் பணியாகப் பிரித்துக் கொடுக்கப் பட்டிருக்கிறது. எனவே, பலபேரின் கூட்டு முயற்சியால் அந்நிறுவனம் வளர்கிறது. இதனால் அதன் வளர்ச்சி விகிதம் பெரிதாகிறது; அதோடு அந்த வளர்ச்சியும் நிச்சயமான – திட்டமிடப்பட்ட வளர்ச்சியாக அமைகிறது.

நீங்கள் ஒருவர் யோசித்து ஒரு நிறுவனத்தை வளர்ப்பதற்கும், திறமை வாய்ந்த பலபேர் சேர்ந்து உங்கள் நிறுவனத்தை வளர்ப்பதற்கும் வித்தியாசம் இருக்குமல்லவா? அதிலும் SME யில் உங்களின் நேரம் முழுவதையும் உங்களால் வளர்ச்சிக்காக செலவிட முடியாது.

ஒரு கார்பரேட் நிறுவனமானது தன்னைத் தானே வளர்த்துக் கொண்டு, போட்டிகளை சமாளித்து, வாடிக்கையாளருக்கு தக்க சேவையை அளித்து, தனது நிறுவனர்களுக்கு தானாக (ஆட்டோமேட்டிக்காக) லாபத்தை அதிகப்படுத்தும் ஒரு அமைப்பாக இருக்கிறது. வளர்ந்து முதிர்ச்சி பெற்ற ஒரு மரத்தைப் போல. நீங்கள் அதற்குப் பிறகு பெரிதாக அதன் வளர்ச்சியைப் பற்றிக்  கவலைப்படத் தேவையில்லை. மிகக் குறைவான பராமரிப்பே போதுமானது. மீதமுள்ள நேரத்தில், நீங்கள் அடுத்த தோப்பை உருவாக்குவதைப் பற்றி சிந்திக்கலாம்.

ஆனால், ஒரு சிறுதொழில் நிறுவனம் எப்போதும் தனது நிறுவனர்களை பரபரப்பாகவே வைத்துக் கொள்கிறது. பெரும்பாலான நிறுவனங்கள், தனது உரிமையாளரை மிக மோசமாக வேலை வாங்குகின்றன. தொழில்முனைவோர் அந்தச் சிறிய செடியில் கிடைக்கும் கொஞ்சம் பழங்களை (பலன்களை) வைத்தே வாழவேண்டியதாகிறது. 

தொழில் வளர்ச்சியின் 6 படிநிலைகள் 

ஒரு சிறுதொழில் நிறுவனம் – ஒரு ஸ்டார்ட்-அப் ஆகத் தொடங்கப்பட்டு பெருநிறுவனமாக வளர்வதற்கு அது 6 படிநிலைகளைக் கடந்தாக வேண்டும். இதில் நிறைய நிறுவனங்கள் முதல் மூன்று அல்லது நான்காவது படியோடு நின்று விடுகின்றன. இரண்டாவது படியிலிடுந்து முதல் படிக்கும், மூன்றாவது படியிலிருந்து முதல் படிக்கும் என பலமுறை சுற்றிய இடத்திலேயே சுற்றிக்கொண்டு இருக்கின்றன. 

இதில் நான்காவது படிநிலையில் தனது மக்கள் பலதைப் பெருக்காத நிறுவனம், பல ஆண்டுகள் கழித்தும் எதிர்பார்த்த வளர்ச்சி அடையாமல் தேக்க நிலையினை அடைகின்றன. அல்லது – அதில் தவறு செய்து விட்டோம், இதில் தவறு செய்து விட்டோம் என்று மீண்டும் மீண்டும் தனது value proposition ஐ மாற்றிக்கொண்டே இருக்கின்றன. இதுபோன்ற நிறுவனங்கள் 3 முதல் 5 ஆண்டுக்கு ஒருமுறை முதல் மூன்று படிகளில் சுற்றிசுற்றி வருகின்றன. ‘இல்ல இல்ல, நீ கள்ள ஆட்டம் ஆடுற! கோட்டையெல்லாம் அழி. மொதல்ல இருந்து ஆரம்பிக்கலாம்’ என்பதுபோல.

அடுத்து…

உங்களுக்கு பிடித்த வேலை மற்றும் பிடிக்காத வேலைகள் என்று உண்டா? இருந்தால் நல்லது. இதுவரை இல்லை என்றால் அடுத்த அத்தியாயத்தில் கண்டுபிடிப்போம்.