உற்பத்தித் துறையின் வளர்ச்சி

‘Manufacturing (உற்பத்தி)’ என்றால் என்ன?

‘Manufacturing’ என்ற ஆங்கிலச் சொல் லத்தீன் மொழியிலிருந்து பெறப்பட்டதாகும். ‘Manu’ என்றால் ‘செய்தல்’ ‘facture’ என்றால் ‘கைகளால்’. எனவே, manufacturing என்ற சொல்லுக்கு ‘கைகளால் செய்தல்’ என்றே கொள்ளவேண்டும்.

ஆனால், மனிதர்களின் வேலைகளை இயந்திரங்களால் செய்ய முடியும் என்பதை வணிக உலகம் உணர்ந்தபோது தயாரிப்புத் துறை வியத்தகு முறையில் முன்னேறியது. 1886 ஆம் ஆண்டு ஏற்பட்ட தொழில் புரட்சியின் அடித்தளம் இத்தகைய மாற்றங்கள்தான். பிரான்சு மற்றும் ஜேர்மனி போன்ற அண்டை நாடுகளுக்கு பரவிய இந்தப் புரட்சி, 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அட்லாண்டிக் கடலைக் கடந்து அமெரிக்காவை அடைந்தது. ஜவுளித் தயாரிப்பு, சுரங்கம், இரும்பு உற்பத்தி மற்றும் விவசாயம் போன்ற துறைகள் அனைத்தும் முழுமையான மாற்றத்தைச் சந்தித்தன.

கில்ட் (Guild)

பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஏற்பட்ட தொழில்புரட்சிக்குப் பிறகே தரம் பற்றிய தேவையும் அறிவும் முக்கியத்துவம் பெற்றன என்றாலும், பதின்மூன்றாவது நூற்றாண்டுகளிலேயே மத்திய ஈரோப் மற்றும் பிரிட்டனில் கில்ட் என்ற அமைப்பு பரவலாகப் பின்பற்றப்பட்டு வந்தது. ஒரு பெருநகரம் அல்லது மாகாணத்திலுள்ள ஒரே தொழிலைச் சார்ந்த கைத் தொழில் வல்லுனர்கள் (craftsmen) – ஒரு குழுவாக இணைந்து தங்களுக்குள் ஏற்படுத்திக் கொண்ட அமைப்பே ஒரு கில்ட்.  தங்கள் பகுதி முழுவதிலும் தயாரிக்கப்படும் பொருட்களின் தரத்தில் சமநிலையை ஏற்படுத்துவதே கில்ட்களின் நோக்கம்.

ஜெர்மனியில் – ஒரு பாரம்பரியமான இரும்பில் செய்யப்பட்ட ஒரு கில்ட் அடையாளம். இந்த குறிகள் பல பழைய ஐரோப்பிய நகரங்களில் காணப்படுகின்றன. அங்கு கில்ட் உறுப்பினர்கள் தங்கள் வியாபார இடங்களில் இவ்வகையான அடையாளங்களை பயன்படுத்துவதை ஓர் அங்கீகாரமாகவும் கௌரவமாகவும் கருதினார்கள்.

மூலம்: விக்கிபீடியாhttps://en.wikipedia.org/wiki/Guild

இன்றும் இவ்வாறான அடையாளங்கள் மீது ஐரோப்பியர்கள் நாட்டமும் மரியாதையும் கொண்டிருக்கின்றனர். ISO முறையில் சான்றிதழ்களை வழங்குவதும், பெறப்பட்ட சான்றிதழ்களை ஓர் அங்கீகாரமாக அவர்கள் காட்சிப்படுத்துவதும் இந்த வழக்கத்தினால்தான்.

‘கில்டு’களின் நோக்கம்

தன்னுடைய உறுப்பினர் தயாரிக்கும் பொருட்களனைத்தும் ஒரு குறிப்பட்ட தரநிலையில் இருப்பதையும் அவை ஞாயமான விலைக்கு விற்கப்படுவதையும் இந்த கில்ட்கள் உறுதி செய்யும். ஒவ்வொரு உறுப்பினரும் திறமை மிக்கவராகவும் வல்லுனராகவும் அங்கீகரிக்கப்பட்டதால் இந்த கில்ட்களில் உறுப்பினராவது கௌரவத்தின் அடையாளமாகக் கருதப்பட்டது. இன்றைய தொழில் சங்கங்கள் போல, உறுப்பினரின் தொழில் தொடர்பான எல்லா தேவைகளையும் கில்ட்கள் பார்த்துக்கொள்ளும். உறுப்பினர் திடீர் மரணமடைந்தாலோ தொழிலைத் தொடரமுடியாத நிலை ஏற்பட்டாலோ  இந்த சங்கங்கள் அவர்களின் குடும்பத்திற்கு நிதி உதவி அளிக்கும்.

கில்ட்கள் உள்ள ஊரில் எந்த ஒருவரும் புதிதாகத் தொழிலைத் தொடங்கிவிட முடியாது. அப்பகுதியில் உள்ள கில்டில் உறுப்பினரானால் மட்டுமே அந்தப் பகுதியில் தொழில் புரிய முடியும். ஒருவர் முதலாளியாவதற்கு அவர் குறைந்தபட்சம் பதினான்காண்டுகள் ஒரு தொழில் வல்லுனரிடம் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். பயிற்சிக் காலத்தில் அவருக்கு பயிற்சிப்படி மட்டுமே வழங்கப்படும். அதே போல இந்தப் பயிற்சிக் காலத்தில் மாணவர்கள் திருமணம் செய்துகொள்ள அனுமதி கிடையாது. பயிற்சி முடித்த பின்னரே அவர் ஒரு தொழிலாளராக சம்பளம் பெறத் தகுதி அடைவார். அதில் ஒரு பகுதியை சேமித்தே அவர் புதிய தொழில் தொடங்கமுடியும். ஒரு மாணவன் தன்னுடைய பன்னிரண்டாம் வயதிலிருந்தே இந்த தொழில் பயிற்சியில் சேரலாம்.

உறுப்பினர்களில் ஒரு சிலர் மற்ற உற்பத்தியாளர்களின் தயாரிப்புகளையும் தொழில் முறையையும் ஆய்வு செய்யவும் கண்காணிக்கவும் அமர்த்தப்பட்டனர். உறுப்பினர்களில் யாரேனும் பொதுமக்களை பாதிக்கும் வகையில் தரக்குறைவான பொருட்களை விற்பனை செய்தாலோ குறிப்பிட்ட விலைக்கு அதிகமாக விற்பனை செய்தாலோ அவர்கள் அபராதம் விதிக்கப்பட்டனர். மீறி அவை தொடர்ந்தால் அந்த உறுப்பினர்கள் தொடர்ந்து அந்த ஊரில் தொழில் செய்யமுடியாதபடி கில்டிலிருந்து நீக்கப்பட்டனர்.

தரப் பரிசோதனை = தரமான பரிசோதனை?

பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை இவ்வாறான கைவினைக் கலையாகவே உற்பத்தி நடந்துவந்தது.

தரம் என்பது செய்து முடிக்கப்பட்ட பொருளில் மட்டுமே அறியப்பட்டது. QC (தரநிலை கட்டுப்பாடு) அல்லது PDI (முன் Despatch ஆய்வுகள்) போன்றவை மட்டுமே தரத்திற்கான வழிமுறைகளாகப் பின்பற்றப்பட்டன . பொருட்களைச் செய்வதும் செய்துமுடிக்கப்பட்ட பொருட்களைப் பரிசோதிப்பதும் ஒருவரின் வேலையாகவே இருந்தது.