தற்போதைய பொருளாதார மந்த நிலையை எதிர்கொள்வது எப்படி?

பொருளாதார மந்த நிலை – உண்மையா மாயையா?

ஒரு பிரச்சினையை எதிர்கொள்ள முதலில் அந்தப் பிரச்சினை இருப்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும்.

நமது நாட்டின் வளர்ச்சியும், மொத்த உள்நாட்டு உற்பத்தியும் தொய்வடைந்து இருப்பதை நாம் ஒப்புக் கொள்வோம். ஆம், பொருளாதாரத்தைப் பற்றிய கண்ணோட்டம் அவ்வளவு சிறப்பாக இல்லை. பொருளாதாரச் சந்தைகளும் அதையே பிரதிபலிக்கின்றன.

கார்ப்பரேட் வரி விகிதங்களைக் குறைப்பதில் அரசாங்கத்தின் தைரியமான நடவடிக்கையை கார்ப்பரேட் இந்தியா பாராட்டிக் கொண்டிருக்கும் வேளையில், நான் இந்தக் கட்டுரையை எழுதுகிறேன். அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளின் மூலம் பணப்புழக்கத்தை அதிகப்படுத்த முயற்சித்து வருகிறது. அரசாங்கத்தின் தூண்டுதல்கள் எவ்வாறு, எவ்வளவு விரைவில் இந்நிலையை மாற்றப் போகின்றன என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஆனால், ஒரு SME உரிமையாளராக, மந்தநிலையை நீங்கள் எவ்வாறு எதிர்கொள்ளலாம் என்பதைப் பார்ப்போம்.

முதலில் பொருளாதார மந்த நிலையைப்பற்றி கொஞ்சம் பேசுவோம்.

மந்த நிலையா… அப்படி என்றால்?

வாங்குவோரின் சந்தை Vs விற்பவரின் சந்தை (Buyers’ Market Vs Sellers’ Market)

Capitalist உலகில், பொருளாதாரமானது சந்தைத் தேவைக்கும் உற்பத்தி அல்லது வழங்கலுக்கும் (demand and supply) இடையில் ஒரு சமநிலையைத் தக்கவைக்க முயல்கிறது. வழங்கல் அதிகமாக இருக்கும்போது, ​​வாங்குபவருக்கு அதிக போட்டி இருக்கும். மலிவான விலையில் பொருட்கள் கிடைக்கின்றன. இந்தக் காலம் வாங்குபவரின் சந்தை காலம் என்று அழைக்கப்படுகிறது.

ஆனால், வழங்கலை விட தேவை அதிகமாக இருக்கும்போது, ​​விற்பனையாளர் சந்தையை ஆளுகிறார். பொருட்கள் பற்றாக்குறையாக இருப்பதால் மக்கள் அதிக விலைக்கு வாங்கத் தயாராக உள்ளனர். இந்த கட்டத்தில் விற்பனையாளர்கள் அதிக லாபம் ஈட்டுகிறார்கள்.

ஆனால், விற்பனையாளரின் சந்தை நீண்ட காலம் தொடர்வதில்லை. சந்தையின் லாபகரமான சூழல் போட்டியாளர்களைக் கவர்கிறது. போட்டி அதிகரிக்கும்போது, ​​வழங்கழலும் அதிகரிக்கிறது. இருப்பினும், தேவையான அளவு பொருட்கள் சந்தைக்கு வந்த பின்னும் போட்டியாளர்களின் வருகையும், விநியோகமும் நிறுத்தப்படுவதில்லை. பொதுவாக, உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் தங்களது லாபத்தைத் தொடர்ந்து குறைத்து விற்பனையைத் தக்க வைத்துக்கொள்ள முயல்கிறார்கள்.

பணப்புழக்கம்

அதிகரிக்கும் தேவையை ஈடுகட்ட, உற்பத்தியாளர்கள் தங்களின் உற்பத்தித் திறனை அதிகரிக்கின்றனர். இதற்கான முதலீடு பெரும்பாலும் நிதி நிறுவங்களிடமிருந்து கடனாகப் பெறப்படுகிறது. லிஸ்டட் நிறுவனங்கள் (Listed Companies) தங்களின் பங்கு விற்பனை மூலமாக இந்த மூலதனத்தைத் திரட்டுகின்றன. இதனால் சமுதாயத்தில் பணப்புழக்கம் அதிகரிகிறது. ஒவ்வொரு முறை பணம் கைமாறும்போதும் ஒரு நிறுவனம் அல்லது ஒரு நபருக்கு லாபம் கிடைக்கிறது.

தேக்கம்

ஆனால், துரதிர்ஷ்டவசமாக, தேவையின் அளவை நம்மால் துல்லியமாகக் கணிக்க முடிவதில்லை.

  • அரசாங்கத்தின் திட்டங்கள் எதிர்பார்த்த பலனைத் தராமல் போதல்
  • நாட்டின் பெரிய நிதி நிறுவனங்கள் மோசமான முதலீடுகளால் நஷ்டமடைதல்
  • பல தனியார் நிறுவங்கள் கடனைத் திரும்ப செலுத்தாமல் போதல்
  • அந்நிய செலாவணி (foreign exchange) குறைதல்

போன்ற பல காரணங்களால் நாட்டில் பணப்புழக்கம் குறையத் தொடங்குகிறது. இதன் காரணமாக மக்களிடம் வாங்கும் சக்தி குறைகிறது. எனவே, உற்பத்தியாளர்களால் திட்டமிட்டபடி அதிக பொருட்களை விற்பனை செய்ய முடியாமல் போகிறது.

உற்பத்திப் பொருட்கள் முடங்குகின்றன. உற்பத்தியாளருக்கு அவர் வாங்கிய உள்ளீட்டுப் பொருட்களுக்கு (Raw Materials) பணம் கொடுக்கமுடியாமல், நடைமுறை செலவுகளுக்காக வாங்கிய கடனையும் திருப்பி செலுத்தமுடியாத அளவுக்குப் பண நெருக்கடி ஏற்படுகிறது. இதுவே பொருளாதார மந்தநிலை.

இந்தத் தேக்கம் நம்மை எப்படி பாதிக்கும்?

முதலில், பொருளாதார ஏற்ற இறக்கங்கள் நம் நாட்டிற்கு ஒன்றும் புதிதல்ல. இன்னும் சொல்லப்போனால் எந்த நாட்டுப் பொருளாதாரமும் அல்லது உலக வர்த்தகமும் எப்போதும் ஏறுகத்திலேயே இருந்துவிடுவதில்லை. கடந்த 100 வருட சந்தையின் வரலாறும் இதைச் சொல்லும்.

அதனால், உங்கள் மனதில் எங்காவது இந்த சந்தை நிலவரத்தைப் பற்றிய பயம் இருந்தால் அதைத் தூக்கி எறியுங்கள்.

இன்றைய ஊடங்கங்களுக்கும் கட்சிகளுக்கும் நல்ல ‘அவல்’ கிடைப்பதால் இந்த விசயத்தைப் பற்றி தேவையை விட அதிகமாகவே பேசி பயமுறுத்தி விடுகிறார்கள்.

இந்த பொருளாதார சரிவு நிச்சயம் ஒவ்வொரு நிறுவனத்தையும் பாதிக்கும். ஆனால் அதன் கால அளவும் தாக்கமும் வெவ்வேறாக இருக்கும். உதாரணமாக, B-to-C துறையில் இருக்கும் நிறுவனங்கள் உடனடியாக பாதிக்கப்படப் போவதில்லை.

மாறாக, B-to-B நிறுவனங்கள், குறிப்பாக கனரக எந்திரங்கள், தொழில் நுட்ப சாதனங்கள், வாகனம் மற்றும் வாகன உதிரி பாகம் தயாரிப்போர் போன்ற நிறுவனங்கள் உடனடியாக பாதிப்பை சந்திக்கும்.

FMCG, உணவுப் பொருள் போன்ற நுகர்வோர் சம்மந்தப்பட்ட துறைகளில் பாதிப்புகள் குறைவே.

இந்தப் பிரச்சினையை எப்படி அணுகுவது?

1. சிந்தனை வேண்டும் – கவலை வேண்டாம்

முன்பே கூறியது போல இதுபோன்ற பொருளாதாரச் சரிவுகள் புதிதல்ல. உலகமே ஒன்றும் இடிந்து விழுந்துவிடவில்லை.

முன்பெல்லாம் 30 அல்லது 40 வருடங்களுக்கு ஒரு முறை ஏற்பட்ட இந்த சந்தை ஏற்ற இறக்கங்கள் இப்போது 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏற்படுகின்றன. அதனால், இதை பற்றிய கவலைகளை முதலில் தூக்கி எறியுங்கள்.

நாம் கவலைப் படுவதால் நிலைமை இப்போதைக்கு மாறிவிடப் போவதில்லை. எனவே, நம் நிறுவனம் இந்த சூழலை எப்படி வெற்றிகரமாகக் கையாளலாம் என்பதைப் பற்றி சிந்தியுங்கள்.

2. உங்கள் Working Capital இல் ஒரு கண் வையுங்கள்

இதுபோன்ற சவாலான தருணங்களில்தான் நாம் மிக முக்கியமான பாடங்களைக் கற்க முடியும். எனவே, இந்த வருடம், நீங்கள் working capital ஐ இன்னும் சரியாகக் கையாளக் கற்றுக்கொள்ளுங்கள்.

ஒர்கிங் கேப்பிடல்-ஐக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுங்கள். குறிப்பாக, உங்களது சப்ளையர் அதிகப்படியான தள்ளுபடி அல்லது பிற சலுகைகளைக் கொடுத்து உங்களை மொத்தக் கொள்முதல் செய்யச் சொல்லலாம். ஏனென்றால் அவர்களும் இந்த சவாலைச் சந்திக்க வேண்டுமே.

ஆனால், நீங்கள் உங்கள் கொள்முதலில் செய்யும் அதிக முதலீடு இன்னும் சற்று நாட்களில் உங்களின் மிகப்பெரிய சுமையாகக் கூடும். முடிந்தால், உங்கள் கொள்முதல் அளவைப் பாதியாகக் குறைத்து, மாதம் இருமுறை கொள்முதல் செய்யமுடியுமா என்று யோசியுங்கள்.

3. சரக்குக் கையிருப்பைக் குறையுங்கள்

ஒர்கிங் கேபிடல்-ஐக் கட்டுப்படடுத்த சுலபமான வழி கையில் சரக்கு இருப்பைக் குறைப்பதுதான். சரக்கிருப்பைக் குறைப்பதன் மூலம் நாம் குறுகியகால ஆபத்துகளைத் (short term risk) தவிர்க்க முடியும். சந்தை தேவைக்கு மிகச்சரியான அளவே சரக்கை வைத்திருங்கள். அது Raw Material, பேக்கிங் Material, உற்பத்தி செய்த பொருட்கள் அல்லது WIP – எந்த சரக்காக இருந்தாலும் இதே விதிதான்.

கையில் சரக்கு அளவுக்கு அதிகமாக இருக்கும்போது நாம் நமது negotiating power-ஐ இழந்து விடுகிறோம்.

4. முன்பணம் கொடுப்பதைத் தவிருங்கள்

நம் சமுதாயத்தில் அனைவருமே நல்லவர்தான். ஆனால் சந்தர்பங்கள் / நெருக்கடிகள் அவர்களைத் தவறு செய்ய வைத்துவிடுகின்றன. எனவே, எந்த ஒரு பரிவர்த்தனையில் அதிக முன்பணம் கொடுப்பதைக் கொஞ்சகாலம் தவிர்த்துவிடுங்கள்.

நாம் கொடுக்கும் முன்பணம், இதுபோன்ற மந்த நிலையில் நமது சப்ளையரின் ஒர்கிங் கேப்பிடல் பிரச்சினையில் சிக்கிக் கொள்ளக் கூடும். முடிந்தவரை Cash-On-Deliery முறையில் ஒப்பந்தங்களைப் போட்டுக்கொள்ளுங்கள்.

5. திறமையான பணியாளர்களைக் கண்டுபிடியுங்கள்

பெரிய மற்றும் பன்னாட்டு நிறுவங்கள் தங்களில் செலவுகளைக் குறைக்க இதுபோன்ற காலங்களில் “Lay -off ” அல்லது பணி நிறுத்தம் செய்வார்கள். அதனால் நல்ல திறமையான பணியாளர்கள் சிலநேரங்களில் வேலை இழப்பதுண்டு. கண்களையும் காதுகளையும் பட்டைதீட்டி கவனியுங்கள். உங்களுக்கு ஏற்ற திறமையான பணியாளர்கள் உங்கள் ஊரிலேயே கிடைக்கக் கூடும். இது பொருளாதாரத் தேக்கநிலை SME களுக்கு கொடுக்கும் ஒரு வரப்பிரசாதமாகும்.

சிறந்த விற்பனைப் பிரதிநிதி, விற்பனை மேலாளர், உற்பத்தி மேலாளர், பொறியாளர்கள், போன்ற பணியாளர்கள் எளிதாகக் கிடைக்கக் கூடும். 2 அல்லது 3 வருடப் பணிக்கான ஒப்புதலுடன் அவர்களை நாம் பணியமர்த்தலாம்.

6. உங்கள் வாடிக்கையாளர்களுடன் உறவை பலப்படுத்துங்கள்

நீங்கள் B-to-B பிரிவில் இருந்தால், உங்கள் வாடிக்கையாளர்களின் தேவை, வரப்போகும் ஏற்ற இறக்கங்கள், உங்கள் பொருட்களின் விலை மற்றும் தாம் பற்றிய கருத்துக்களை அவர்களை நேரில் சந்தித்து கேட்டறியுங்கள். இதன் மூலம் demand இன் உண்மையான அளவு உங்களுக்குத் தெரியவரும். அதற்குத் தகுந்தபடி உங்கள் உற்பத்தியை நீங்கள் கூட்டவோ குறைக்கவோ செய்யலாம்.

இது போன்ற சந்திப்புகள் மற்றும் பேச்சு வார்த்தைகள் மூலம் வரப்போகும் எதிர்மறை சூழ்நிலைகளைப் பற்றியும் நாம் அறிய முடியும்.

7. உங்கள் சப்ளையர்களைச் சந்தியுங்கள்

உங்கள் நிறுவனத்தின் நிதி நிலைமை பற்றியும், வாங்கப் போகும் பொருட்களின் அளவில் ஏற்படும் உத்தேச மாற்றங்கள் பற்றியும் அவர்களுடன் கலந்துரையாடுங்கள். அவர்களின் கருத்துக்களையும் அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளையும் கேட்டு அறியுங்கள். இது சந்தையின் உண்மையான நிலவரத்தைத் தெளிவு படுத்தும். மேலும் நமது போட்டியாளர்கள் எவ்வாறு பாதிக்கப் பட்டிருக்கிறார்கள், எப்படித் திட்டமிடுகிறார்கள் என்பது பற்றி நாம் அறிந்து கொள்ளலாம்.

8. புதிய வாய்ப்புகள் / ஆர்டர்களுக்குத் தயாராகுங்கள்

இதுபோன்ற பொருளாதாரத் சரிவுகள் சந்தையைப் பொறுத்தவரை ஒரு கடும் கோடைக்காலம் போன்றது. ஆழமான ஆர்வத்துடனும், போதிய கட்டமைப்புடனும் செயல்படும் நிறுவனங்கள் மட்டுமே இதுபோன்ற கடுமையான நேரங்களை சமாளிக்க முடியும். அடுத்த ஓராண்டுக்குள் நிதி ஒழுக்கம் மற்றும் அமைப்பு ஒழுக்கம் இல்லாத பல நிறுவனங்கள் காணாமல் போவதை நீங்கள் பார்க்கலாம். அவர்களில் உங்கள் போட்டியாளர்கள், விதிமுறைகளுக்கு உட்படாத (unorganised) நிறுவங்களும் இருக்கலாம். அவ்வாறு ஏற்படும் வெற்றிடத்தை நிரப்ப நீங்கள் தயாராக இருங்கள். எனவே, தற்போது உங்களுக்கு ஆர்டர் கொடுக்காத வடிக்கையாளர்களிடமும் உறவை மேம்படுத்துங்கள்.

முடிவாக…

சவால்கள் இல்லை என்றால் சாதிக்க ஒன்றுமே இல்லை. எனவே, இந்தத் தருணத்தை ஒரு சவாலாகக் கொண்டு நேர்மை சிந்தனையோடு பார்த்தால் SME நிறுவனங்களுக்கு வாய்ப்புகளே அதிகம்.

7 Habits of Highly Effective People என்ற புத்தகத்தில் Steven Covey சொல்வது போல நம்மை எவை பாதிக்கின்றனவோ அவற்றில் நம்மால் எவற்றை பாதிக்க முடியுமோ அவற்றில் கவனம் செலுத்துவோம்.