திருப்புமுனை

ஒரு நீண்ட பயணம்

உற்பத்தித் தரம் மற்றும் உற்பத்தித் திறனில் இன்றைய தொழில் நிறுவனங்கள் அடைந்திருக்கும் மிக உயர்ந்த நிலை ஓரிரு நாட்களை உருவாகவில்லை. யாரும் இதனைத் திட்டமிட்டு உருவாக்கவில்லை.

ஒவ்வொரு வழிமுறையும் பல ஆண்டு அனுபவங்களால் பலரது நஷ்டங்களுக்குப் பிறகே வடிவம் பெற்றன.

உற்பத்திப் பொருட்களின் தரம் ஒரு நூற்றாண்டிற்கு முன்புதான் வணிகத்தில் முக்கியத்துவம் பெறத்தொடங்கியது.

படிப்படியாக, தரம் சார்ந்த சிந்தனைகள் வளர்ந்து, இன்று ஒவ்வொரு நிறுவனத்தின் வளர்ச்சிக்கும் நம் வாழ்கை நிலை முன்னேற்றத்திற்கும் அடிப்படையாக விளங்குகின்றன. லீன், சிக்ஸ் சிக்மா, கய்சென், ISO, 5S, போன்ற பல வழிமுறைகள் இவ்வாறு உருவானவையே.

இந்த வழிமுறைகளை நாம் முழுமையாகப் புரிந்துகொள்ள அவற்றின் தோற்றத்தையும், வரலாற்றையும் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

ஜப்பான் நடத்திய ‘பெர்ல் ஹார்பர் மீதான தாக்குதல்’ இந்த வழிமுறைகளின் வளர்ச்சியில் மிக முக்கியமான ஒரு சம்பவம் என்று நான் நம்புகிறேன்.

எனவே, நம் கதையை இங்கே இருந்து தொடங்குவோம்.

பெர்ல் ஹார்பர் தாக்குதல்

Image 1 – Pearl Harbour Attack (Source: Wikipedia)

1941, டிசம்பர் 7, ஜப்பானின் போர் விமானங்கள் டோக்கியோவில் இருந்து 6000 கிலோமீட்டர் தூரத்தில் ஹவாயில் உள்ள பெர்ல் ஹார்பரில் (Pearl Harbour) அமெரிக்க கடற்படை தளத்தைத் தாக்கியது. இரண்டு மணி நேர தாக்குதலை நடத்திய ஜப்பானிய ராணுவம் 20 அமெரிக்க கடற்படை கப்பல்களையும், எட்டு பெரிய படகுகளையும், 300 க்கும் மேற்பட்ட விமானங்களையும் அழித்து. தாக்குதலில் 2,000 க்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் வீரர்கள் மற்றும் பொதுமக்கள் கொல்லப்பட்டனர், மேலும் 1,000 பேர் காயமடைந்தனர்.

கிழக்கு ஆசியாவில் தனது கட்டுப்பாட்டை விரிவுபடுத்தவும், அந்தப் பிரதேசத்தில் அமெரிக்காவின் ஈடுபாட்டை குறைக்கவும் முன்னேற்பாடாக ஜப்பான் இந்தத் தாக்குதலை நடத்தியது.

அந்தக் காலகட்டத்தில், சீனாவின் குறிப்பிடத்தகுந்த நிலப்பரப்பு ஜப்பானின் ஆதிக்கத்தில் இருந்தது. ஜப்பான் தனது நாட்டின் மூலப்பொருள் தேவைக்கு சீனாவின் இந்தப் பகுதியையும் மற்ற கிழக்காசிய நாடுகளையும் நம்பி இருந்தது.

ஜப்பானின் திட்டம் இந்தியா, சீனா உட்பட தெற்காசியாவில் எஞ்சியிருக்கும் பிரிட்டிஷ் காலனிகளைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவேண்டும் என்பதே. ஆனால் திட்டம் அவர்களுக்கு மிக மோசமான விளைவுகளைத் தந்தது.

அமெரிக்காவின் தாக்குதல்

பெர்ல் துறைமுகத் தாக்குல் ஒரு முன் அறிவிக்கப்படாத போர்த் தாக்குதலாக அரங்கேறியது. இத்தாக்குதலை ஆரம்பிப்பதற்கு முன்பு ஜப்பான் முறையாக அமெரிக்காவை தொடர்பு கொண்டது. ஆனால் இன்றுவரை தெளிவாக தெரியாத காரணங்களால் இந்த தகவல் அமெரிக்கவைச் சென்று சேரவில்லை.

இத்தாக்குதலுக்குப் பின்னர், அமெரிக்க ஜனாதிபதி ஃப்ராங்க்ளின் டி. ரூஸ்வெல்ட் ஜப்பான் மீது போரை அறிவித்தார். ஜப்பானிய மற்றும் ஜெர்மனிய நட்பு நாடுகள் அமெரிக்கா மீது போர் பிரகடனம் செய்ததன. இதனால் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உலகப்போரில் ஈடுபடாமல் இருந்த அமெரிக்கா இறுதியாக உலகப்போரில் இணைந்தது.

ஜப்பானின் பேரழிவு

அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு ஜப்பான் மீது அமெரிக்கா கடுமையான தாக்குதல் நடத்தியது. ஜப்பானின் நட்பு நாடு ஜெர்மனி மற்றும் இத்தாலி வீழ்ச்சியுற்ற பின்னும், ஜப்பானின் மன்னர் சரணடைய மறுத்து, இறுதியில் வரை போராட விரும்பினார்.

சீனா மற்றும் சீனாவின் பிரதான நிலங்களில் ஜப்பான் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியைக் கைப்பற்ற அமெரிக்காவும் பிரிட்டனும் தொடர்ந்து செயல்பட்டன. அதே நேரத்தில், ஜப்பான் ரஷ்யாவின் ஆதரவை கோரியது. ஆனால் ரஷ்யாவின் ஸ்ராலின் அமெரிக்கக் கூட்டணிப் படைகளுடன் செல்ல முடிவு செய்தார், ஜப்பானுக்கு எதிராகப் போரை நடத்தினார்.

Image 2 – Fatman – The atom bomb

இதற்கிடையில், மனிதன் இதுவரை பார்க்காத மிக பேரழிவுமிக்க ஆயுததை அமெரிக்கா ஜப்பானின் மீது பயன்படுத்தியது – அணு குண்டுகள். ஒரு குண்டு – லிட்டில் பாய் என்ற பெயரில் ஹிரோஷிமா மீது ஆகஸ்ட் 6, 1945 இல் பயன்படுத்தப்பட்டது. ஆகஸ்ட் 9 ம் தேதி இரண்டாவது சக்திவாய்ந்த புளூடானியம் குண்டு ‘Fatman’ என்ற பெயரில் நாகசாகி மீது என்று பெயரிடப்பட்டது. இதனால் ஆகஸ்ட் 14, 1945 அன்று ஜப்பான் நிபந்தனையின்றி சரணடைந்தது.

அந்த இரட்டைத் தாக்குதலுக்குப் பின் ஜப்பானில் ஏற்பட்ட பேரழிவுகளைப் பற்றி நாம் அவ்வளவாக அறிந்ததில்லை. உலக அரங்கில் சக்திவாய்ந்த ஒரு நாடாகவும் நேச நாடுகளுக்குத் தனியாக சவால்விடும் அளவிற்கு வளமான நாடாகவும் இருந்த ஜப்பான், இந்தத் தாக்குதல்களுக்குப் பின் அமெரிக்காவிடம் நிபந்தனைகளின்றி  சரணடைந்தது. அந்த அளவுக்கு, இரண்டாம் உலகப் போரினால் ஜப்பான் சீர்குலைந்து போனது.

ஜப்பான் அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள் வந்தபின் ஆக்கிரமிப்புப் படைகளுக்கு தலைமை தாங்க அமெரிக்க இராணுவத்தின் ஜெனரல் டக்ளஸ் மெக் ஆர்தர் நியமிக்கப்பட்டார்.

அந்த நாட்களில் ஜப்பான் அதன் தரம் மற்றும் மலிவான பொருட்களுக்கு அறியப்பட்டது. போர் முடிவுற்ற நிலையில், அமெரிக்கா, ஜப்பான் மீது அணுகுண்டு வீசித் தாக்கிததற்கு பதிலீடாக ஜப்பானின் தொழில் மறுசீரமைப்பு மற்றும் வளர்ச்சிக்கான பொறுப்பை அமெரிக்கா ஏற்றுக் கொண்டது. ஜெனரல் மெக்ஆர்துரின் முக்கியப் பணிகளாக ஜப்பான் நாட்டின் மறுசீரமைப்பு, உற்பத்தி, போக்குவரத்து மற்றும் தொலைத் தொடர்பு ஆகியவற்றைக் குறுகிய காலத்தில் மேம்படுத்துவது போன்றவை வழங்கப்பட்டன.

JUSE

ஜப்பானில் ஏற்கனவே இயங்கிவந்த JUSE (Japanese Union of Scientists and Engineers) என்ற அமைப்பை மெக்ஆர்தர் புணரமைத்தார். ஜப்பானிய தொழிலதிபர்களின் அணுகுமுறை மற்றும் தேவை பற்றி JUSE அறிந்திருந்தது.

1951 ஆம் ஆண்டில் இருந்து எட்வர்ட் டெமிங் மற்றும் ஜோசப் ஜுரான் உள்ளிட்ட அமெரிக்க வல்லுனர்களின் கருத்தரங்கங்கள், விரிவுரைகள் மற்றும் பயிற்சிகளை ஏற்பாடு செய்தது . இந்த கருத்துக் பரிமாற்றங்களில் ஜப்பானிய தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்கள், டாய்ச்சி ஓனோ (Taiichi Ohno), காரூ ஈஷிகாவா (Kaoru Ishikawa), ஷீகோ ஷிங்கோ (Shigeo Shingo) மற்றும் பலர் பங்களித்தனர்.

ஏற்கனவே, அமெரிக்காவில் தரக்கட்டுப்பாட்டு முறைகள் பெருமளவில் வெற்றிபெறாத விரக்தியிலிருந்த இவர்கள்,  அதன் தோல்விக்கான காரணமாகக் கருதியது அமெரிக்க நிறுவனங்களின் அலட்சியமும் அறியாமையும்தான். எனவே, தரக்கட்டுப்பாட்டு முறைகளுக்கு பதிலாக அவர்கள் நிர்வாகமுறைகள் மற்றும் உற்பத்தித் தரத்தில் நிர்வாகத்தின் பங்கு பற்றி முதலில் அறிவுறுத்தினர்.

இவ்வகையான எண்ணங்கள் ஜப்பனில் பெரும் வரவேற்பைப் பெற்றன. அதுவரை தரக்குறைவான மலிவுவிலைப் பொருட்களுக்காக அறியப்பட்ட ஜப்பான் உற்பத்தி நிறுவனங்கள், உற்பத்தித் தரத்தை உயர்த்த இத்தகைய வல்லுனர்களை முழுமையாகப் பின்பற்றத் தொடங்கின.

இறுதிப் பொருட்களின் தரம் மற்றும் பரிசோதனை போன்றவற்றை மட்டும் நம்பிக் கொண்டிருக்காமல், அவை உற்பத்தி முறைகள் மற்றும் படிநிலைகளின் தரத்தை உயர்த்துவது குறித்து யோசிக்க ஆரம்பித்தன. ஒவ்வொரு செயல்நிலையிலும், அதை செயல்படுத்தும் தொழிலாளர்கள் மூலமே செயல்நிலை மேம்பாட்டை அடைய முடியும் என்பதை அவர்கள் உணர்ந்தனர். இவ்வாறு ஜப்பானின் உற்பத்தித் தரம் முழுமையான தரக் கண்ணோட்டமாக (Total Quality Approach) வளர்ந்தது.

ஜப்பானின் எழுச்சி

ஜூரானின் கொள்கைகளான புள்ளியியல் சார்ந்த தரவியலும், தரம் சார்ந்த மேலாண்மையும், நிறுவனம் தழுவிய தரக் கட்டுப்பாட்டு (Company-Wide Quality Control – CWQC) முறைகள் ஏற்படக் காரணமாயின.

அமெரிக்கர்களைப் போலல்லாமல், ஜப்பானில் துறைவாரியான பிரிவுகள் பெருமளவில் பின்பற்றப் படவில்லை. உதாரணமாக, ஒரு எந்திரக் கோளாறை பராமரிப்பு அதிகாரியோ வல்லுனரோ வந்துதான் சரிசெய்ய வேண்டுமென்று அவர்கள் எதிர்பார்ப்பதில்லை. மாறாக, அந்த எந்திரத்தில் வேலை செய்யும் தொழிலாளியும், அவரது மேற்பார்வையாளரும், தேவைப்பட்டால், பராமரிப்புத் துறை தொழிலாளரும் சேர்ந்து, சிறிய இடைவேளைகளிலோ, அலுவல் நேரம் முடிந்த பிறகோ பேசி, அதை சரி செய்ய முயல்வர்.

இவ்வாறான, பரவலான சிறு குழு நடவடிக்கைகள் (Small Group Activities – SGA) 1962 ஆம் ஆண்டு வாக்கில், முறைப்படுத்தப்பட்டு அங்கீகரிக்கப்பட்டன. அவை ஒவ்வொரு துறையிளுமுள்ள தரம் சம்மந்தப்பட்ட பிரச்சினைகளை விவாதித்து, அவர்களே தீர்வுகாணும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டன.

இத்தகைய சிறு குழு நடவடிக்கைகள் தொழிலாரகளிடையே ஊக்கத்தை ஏற்படுத்தி, பிரச்சினைகளைத் தீர்ப்பதிலும், உற்பத்தித் தரத்திலும், அவர்களின் பங்களிப்பை உயர்த்தியது. இவ்வாறாக, முழுமையான தரக் கட்டுப்பாடு, பரிமானமடைந்து, ஜப்பானிய முழுமையான தரக் கட்டுப்பாடாக (Japanese TQC) மாறியது.

பொருளாதார முன்னேற்றம்

உற்பத்தித் துறையில் ஏற்பட்ட இந்த முன்னேற்றம், உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார சக்தியாக ஜப்பானை ஆக்கியது. இன்று, உலகின் மூன்றாவது மிகப்பெரிய ஆட்டோமொபைல் உற்பத்தி நாடாகவும், மிகப்பெரிய மின்னணு தொழிற்துறையை நாடாகவும், மேலும் உலகின் மிகச் சிறந்த ‘கண்டுபிடிப்புகளின்’ (innovations) ஜப்பான் திகழ்கிறது. உலகளாவிய காப்புரிமை பெறுவதிலும் ஜப்பான் இன்று முன்னணியில் திகழ்கிறது.

ஜப்பானின் இந்த மாற்றம் நவீன மேலாண்மை முறைகள் பலவற்றுடன் – உதாரணமாக டொயோட்டா உற்பத்தி முறை, மொத்த தர மேலாண்மை TQM, Kaizen – தொடர்புடையது. மேலும் சிக்ஸ் சிக்மா (Six Sigma) போன்ற மேலாண்மை முறைகள் இந்த வளர்ச்சியின் தாக்கமாகவே பார்க்கலாம்.

Image 3 – Deming Prize (Source: Wikipedia)

1957 ஆம் ஆண்டில், JUSE அமைப்பு ஜப்பானில் சிறந்த தர முன்னேற்றத்திற்கான விருதை வழங்கத் தொடங்கியது. அந்த கௌரவமான விருது டெமிங்கின் பெயரில் அளிக்கப்பட்டது. டெமிங் ஜப்பானிய தொழில்துறைகளுக்கு விரிவுரைகளை வழங்கத் தொடங்கி 7 ஆண்டுகளிலேயே இது நடந்தது. ஏன் டெமிங்? வரவிருக்கும் அத்தியாயங்களில் புரிந்து கொள்வோம்.