1700களில் ஐரோப்பாவில் ஏற்பட்ட தொழில் புரட்சியினால் உற்பத்திமுறைகள் மாறி உற்பத்திப் பொருட்களின் எண்ணிக்கை அதிகரித்தாலும் இறுதிப் பொருளின் தரத்தை உயர்த்துவதில் மட்டுமே சிரத்தை எடுக்கப்பட்டு வந்தது.
கிரிபேவெல் உற்பத்தி முறை – நெப்போலியனின் ரகசிய ஆயுதம்
பிரான்சில் நெப்போலியன் ஆட்சிக்காலத்தில் அந்நாட்டின் ராணுவப் பொறியாளரான (பதவிக்காலம்1732 – 1789) ஜீன் பாப்டிஸ்டே வகெட்டே டி கிரிபேவெல் (Jean Baptiste Vaquette de Gribeauval) – சுருக்கமாக கிரிபேவெல் – அவரது புதிய உற்பத்தி முறையின் மூலம் அந்நாட்டில் ஆயுத உற்பத்தியில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தினார்.
அதுவரை ஆயுதத் தயாரிப்பும் கைவினைத் தொழிலாகவே செய்யப்பட்டு வந்தது. ஒவ்வொரு பீரங்கியும் அளவிலும் வடிவமைப்பிலும் ஒவ்வொரு மாதிரியாக இருக்கும்; கைத் துப்பாக்கிகளும் ஒன்றோடு ஒன்று ஒத்திராது. ஓர் ஆயுதத்தில் ஒரு சிறு பழுது ஏற்பட்டாலும் அல்லது சிறு பகுதி உடைந்தாலும் அதை சரிசெய்ய அதன் உற்பதியாளரிடம் கொண்டுசெல்ல வேண்டும். அவர் பழுதடைந்த அல்லது உடைந்த பாகத்தை தனியாக செய்து தருவார் – நாம் முன்னர் பார்த்த craftsmanship.
ஆனால் கிரிபேவெல்லின் புதிய உற்பத்தி முறையில், ஆயுதங்கள் அனைத்தும் ஒன்றையொன்று ஒத்திருந்தன. அவற்றின் அளவுகளும், பாகங்களின் வடிவமைப்பும் சீர்ப்படுத்தப் பட்டிருந்தன. இதனால் உற்பத்தித் திறன் பெருகியதுடன், பழுது ஏற்படும் பட்சத்தில் பழுதடைந்த பாகத்தை மட்டும் மாற்றிக்கொள்ள வசதி கிடைத்தது (ஒரே மாதிரியான பாகங்கள்). இது நெபோலியனின் ராணுவத்திற்கு பெரும் ஆயுத பலத்தை அளித்தது.
கைத்துப்பாக்கி தயாரிப்பில் கிரிபேவெலின் முறை
பதினெட்டாம் நூற்றாண்டின் மத்தியில் ஹோநோரே ப்லான்க் (Honoré Blanc) என்ற பிரெஞ்சு ஆயுத உற்பத்தியாளர், கிரிபேவெல்லின் புதிய உற்பத்தி முறையால் ஈர்க்கப்பட்டு, தன்னுடைய கைத் துப்பாக்கி தொழிற்சாலையில் அதைப் பின்பற்றினார்.
இவர் gauges மற்றும் அளக்கும் கருவிகளை வடிவமைத்தும், முதன்மை ஒப்பீட்டுக் கருவிகள் (Master Models) போன்ற யுத்திகளைப் புகுத்தியும், வெற்றி கண்டார். இவரது தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட்ட கைத் துப்பாக்கிகள் அனைத்தும் ஒரே Master கருவியுடன் ஒப்பிட்டு செய்யப்பட்டதால் ஒரே அளவில், ஒத்த வடிவமைப்பில் இருந்தன.
ஆனால், இந்த உற்பத்தி முறை ஈரோப்பின் பிற பாகங்களில் பெரும் வரவேற்பைப் பெறவில்லை. இது நடைமுறையில் சாத்தியமற்றது என்று கருதப்பட்டதும், இந்தமுறை வெற்றிபெற்றால், கைவினைஞர்கள் தங்கள் முக்கியத்துவத்தை இழந்துவிடுவோம் என்று அஞ்சியதும் அதற்குக் காரணமாய் இருந்திருக்கலாம்.
எலி விட்னி
எனினும் இந்த வழி முறை ஆங்கில மற்றும் அமெரிக்க ஆயுத உற்பத்தியாளர்களின் கவனத்தை ஈர்த்தது. அமெரிக்க புரட்சியின் போது பிரெஞ்சு இராணுவ உதவியால் அமெரிக்காவில் அறிமுகமானது.
அமெரிக்க ராணுவம் 1798இல் துப்பாக்கிகள் வாங்கும் ஒப்பந்தத்தை எலி விட்னி என்பவருக்கு வழங்கியது. இந்த ஒப்பந்தப்படி, பிரெஞ்சு ஆயுத உற்பத்தி உத்திகளைப் பயன்படுத்தி 10,000 முதல் 15,000 துப்பாக்கிகளை உற்பத்தி செய்ய வேண்டும். இங்கு பிரெஞ்சு உத்தி என்று குறிப்பிடப்படுவது கிரிபெவிலின் தொழில்நுட்பமாகும்.
அமெரிக்கர்கள் பெரும்பாலும் பரிமாற்றம் செய்யக்கூடிய பாகங்களை எலி விட்னி முதலில் உருவாக்கியதாகவும், அந்தத் தொழில் நுட்பத்தைக் கண்டுபிடித்தததாகவும் கருதுகிறார்கள். ஆனால் அவர் அமெரிக்காவில் இந்தத் தொழில் நுட்பத்தை பிரபலமடையச் செய்தார். அதற்காக அவரைப் பாராட்டலாம் – அவ்வளவுதான்.
ஆனால் இந்தக் கொள்முதல் ஒப்பந்தம் தோல்வியில் முடிந்தது. விட்னியால் இந்தத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி 10,000 துப்பாக்க்கிகளை உற்பத்தி செய்ய முடியவில்லை.
அமெரிக்க உற்பத்தி முறை
19 ஆம் நூற்றாண்டில் இந்த மாற்றியமைக்கக்கூடிய பகுதிகள் மற்றும் இயந்திரங்களைக் கொண்டு செய்யும் உற்பத்தி ஆகியவை சேர்ந்து அமெரிக்க உற்பத்தி முறை ஆனது.
இந்த நேரத்தில், வணிகத் தரம் என்பது வரைபடத்தை ஒத்து தயாரித்தல் என்றே அறியப்பட்டது. இந்தக் காலக்கட்டத்திற்கு முன் இயந்திரங்களைப் பயன்படுத்தி அதிகமான எண்ணிக்கையில் பொருட்களை உற்பத்தி செய்வதே முக்கிய அம்சமாகக் கருதப்பட்டது.
ஆனால் காலப்போக்கில் இயந்திரங்கள், வரைபடங்கள், அளவீடுகள் நிறைந்த தொழிற்சாலைகளில் மிக முக்கிய அங்கமான தொழிலார்களைப் பற்றி யாரும் கவனம் செலுத்த வில்லை.
தொழிலாளர்களை நிர்வகிப்பது மிகப்பெரிய சிக்கலாக உருவெடுத்தது.
உற்பத்தித் திறன் – உடனடித் தேவை
19 ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவில் அடிமைமுறை முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. தொழிலாளர்கள் நலன்களை உறுதிப்படுத்துவதற்காக – நிர்வாகத்தினரிடம் இருந்து தொழிலாளர்களின் உரிமைகளை பெற்றுத் தருவருவதற்காக வர்த்தக மற்றும் தொழிலாளர் சங்கங்கள் தொடங்கப்பட்டன.
20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் ரஷ்யா போன்ற உலகின் மிகப்பெரிய பொருளாதாரங்கள் உள்நாட்டுக் கலவரங்கள் மற்றும் உலகப் போர்களினால் பெருமளவில் பாதிக்கப்பட்டன.
1908 ஆம் ஆண்டு மே 13 அன்று அமெரிக்கத் தலைவரான தியோடர் ரூஸ்வெல்ட் அவரது உரையில், தேசிய உற்பத்தித் திறனுக்கான தேவையையம், தொழில் நிறுவனங்களில் ஏற்படும் இழப்புக்களைக் குறைக்க வேண்டிய தேவையையும் வலியுறுத்தினார்.
தரம் மற்றும் உற்பத்தித் திறன் மூலமாக மட்டுமே நிறுவனங்கள் லாபகரமாக செயல்பட முடியும் என்று அமெரிக்க சமூகத்திற்கு சுட்டிக் காட்டினார். ஒரு தேசியத் தலைவர் உற்பத்தித் திறன் பற்றிப் பொது மேடையில் பேசுவது அதுவே முதல் முறை. அமெரிக்க நிறுவனங்களும் நிர்வாகிகளும் அவரது கருத்தின் ஆழத்தையும் உற்பத்தித் திறன் மேம்பாட்டுக்கான தேவையையும் உணரத் தொடங்கினர்.