மனத் தடைகளைத் தாண்டி சிறந்த நிறுனவங்களை உருவாக்குவோம்

CSense - Getting Out of the Maze Book - LS Kannan

சிறந்த நிறுனவங்களை உருவாக்குவோம்

2020ல் நம் இந்தியா வல்லமை மிக்க நாடாகத் திகழவேண்டும் என்பது 20 ஆண்டுகளுக்கு முன் விதைக்கப்பட்ட கனவு. ஆனால் இன்றும் அந்த ஆண்டைத்தான் தள்ளிப்போட்டுக் கொண்டிருக்கிறோம். இன்றும் அந்த ஆண்டு நிர்ணயிக்கப் படவில்லை என்றே தோன்றுகிறது.

ஒரு சமுதாயத்தின் வளர்ச்சி, பெரும்பங்கு அதன் விவசாய மற்றும் தொழில் வளர்ச்சியை சார்ந்தே அமையும். தொழில் வளர்ச்சி, முன்னேற்றம் இதைப்பற்றிப் பேசியவுடன், நாம் கண்முன் வருவது, வளர்ச்சியடைந்தமேற்கத்திய நாடுகள் மற்றும் அவற்றின் தொழில்துறை. நாம் அவர்களைப் போல் வளர வேண்டும்; அந்த நாட்டில் இருப்பதுபோல் மிகப் பெரிய நிறுவனங்களை உருவாக்க வேண்டும் என்பது தான்.

இதில் ஒரு தவறும் இல்லை. ஆனால், அவர்களைப் போல் வளர நாம் அவர்களைப் பார்த்து படியெடுக்க (காப்பி அடிக்க)த் தொடங்குவது சரியான வழியல்ல. உற்பத்தித் திறன், மேலாண்மை, மனித வளம், செயலாக்கம் போன்ற உத்திகளெல்லாம் மேற்கத்திய நாடுகளில் முளைத்து அவர்களது சமுதாய வளர்ச்சிக்குக் காரணமாயிருந்தன. ஆனால், இன்று, நமக்கு அவையெல்லாம் ஒன்றுமே தெரியாதது போலவும், அரிச்சுவடியைக் கூட நாம் அமெரிக்கர்களிடமிருந்துதான் அறிந்துகொள்ள வேண்டும் என்பது போலவும் ஒரு மாயையை நாமே உருவாகிக் கொண்டிருக்கிறோம்.

இன்னொரு பக்கம் அமெரிக்காவின் தொழில் முறைகள் முட்டாள் தனமானவை என்றும், மேற்கத்திய வழிமுறைகளில் இருக்கும் குறைகளும் தவறுகளும், நீடித்த வெற்றியைத் தராது என்றும், நீங்களெல்லாம் மேற்கில் பார்க்கும்போது நாங்கள் உங்களுக்கு எதிர்ப் புறத்தில் கிழக்கை (ஜப்பானை)ப் பார்க்கிறோம் என்று கூறும் ஒரு பிரிவினர் மூலம் அங்கிருக்கும் நடைமுறைகளை நாம் இங்கே தாரைவார்த்துக் கொண்டிருக்கிறோம்.

அமெரிக்காவையோ மேற்கத்திய நாடுகளையோ தோல்வி அடைந்தவர்கள் என்று சொல்வதை யாராலும் ஒப்புக் கொள்ள முடியாது. கடந்த நூற்றாண்டுகளிளுருந்து மனித குல மேம்பாட்டிற்கு அவர்கள் ஆற்றியுள்ள பணி மிக மிகப் பெரியது. ஆனால், ஜப்பானும் சீனாவும் வலுவடைந்து வருகின்றன. தொழில் முறைகளையோ கலாச்சார முறைகளையோ ஒப்பிட்டுப் பார்க்கும் போது, இவ்விரு பிரிவுகளும் எதிரெதிர் துருவங்களாகவே விளங்குகின்றன. ஒருவரை ஒருவர் பார்த்து கற்றுக் கொண்டிருக்கின்றனர் தவிர ஒருவரை ஒருவர் படியெடுக்க வில்லை.

நன்றாற்றல் உள்ளும் தவறுண்டு அவரவர் – – பண்பறிந்து ஆற்றாக் கடை. (திருக்குறள்)

அவரவர் குணங்களும் தகுதியும் அறிந்து செய்யப்படாத செயல்கள் நல்ல செயல்களாக இருப்பினும் தவறுகள் நடந்துவிடும்.

எனவே, நாம் எந்த ஒரு வழிமுறையையும் கடை பிடிக்கும் முன் அவற்றைப் பற்றி நன்கு அறிந்து, அவை நமது வாழ்க்கை முறைக்கு, கலாச்சாரத்திற்கு ஒற்றி வரக்கூடியவையா என்பதை ஆராய வேண்டும்.

அறிவியலை இறக்குமதி செய்தோம்… அறிவையுமா?

இன்றளவும், மேலாண்மை முறைகளும், அவற்றின் தத்துவங்களும் நமக்கு நூலறிவாகவே இருக்கின்றன. அவை அன்னியப் பட்டு நிற்கக் காரணம், அவை அந்நிய மொழிகளில் படிக்கப் படுவதும், அவற்றின் பின்புலத்தை நாம் அறியாமலிருப்பதும் தான்.

இந்த நிலைமையை மாற்றினால்தான், தமிழகம் தொழில் துறையில் முன்னணி மாநிலமாகத் திகழும். நம் இந்தியா வல்லமை மிக்க நாடாக வளரும். பன்னாட்டு நிறுவனங்களும், நம் நாட்டு பெரிய நிறுவனங்களும், தங்களுக்கென்று அறிவுசார் மையங்களை நிறுவி அவற்றின் மூலம், தங்களது தொழில் கலாச்சாரம் மற்றும் சரியான தொழில்நுட்பத்தைத் தேர்ந்தேடுக்கின்றன. ஆனால், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில் காணப்படும் இந்த இடைவெளியே அவை மிகப் பெரிய நிறுவனங்களாக வளராமல் தடுக்கிறது.

இந்த அறிவுசார் இடைவெளியைக் குறைக்கும் நோக்கத்துடன், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் நண்பனாக அதன் எல்லா நிலை உறுப்பினர்களுக்கும் தொழில் உலக அறிவைப் பெருக்கவும், அந்நியப்பட்டு நிற்கும் உலகத்தர உற்பத்தி முறைகளை நமது மொழியில் நமது வழியில் உணரவும் அவற்றைத் தமிழ்ப் படுத்தி வழங்கும் ஒரு சிறு முயற்சி இது.

மொழிப் பற்று மிக்க முயற்சியாக இது தென்பட்டாலும், இதன் நோக்கம் உலகத் தரமிக்க வழிமுறைகளைத் தொழில் துறையினர் தமதாக உணரவேண்டும் என்பதே. தமிழ் மற்றும் இந்திய கலாச்சாரங்களும், பழைய ஞானங்களும் இதில் மேற்கோள் காட்டப்பட்டாலும், அது நமக்கு அந்த வழிமுறை அல்லது சிந்தனைகளின் மீது இருக்கும் ஓர் அந்நியத் தன்மையைப் போக்கவும், அவற்றின் மீது நம் ஆளுமையை அதிகரிக்கவுமான முயற்சியே தவிர, மொழி அல்லது கலாச்சாரம் சார்ந்த அல்லது அவற்றைப் போற்றிப் புகழும் செயலல்ல.

பல ஆயிரம் ஆண்டு முன்னரே நாம் வானியலில் சிறந்து விளங்கினோம் ஆனால், நம் நிலவில் மனிதன் காலடி பட்டு அறுபது ஆண்டுகளாகியும் முன்தோன்றி மூத்தகுடி இன்னும் கவிதைககளில் நிலவை அழைத்துக் கொண்டுதானிருக்கிறோம்.

எனவே, நம் நேற்றைய திறன்களைப் பற்றியே பேசிக் கொண்டிருக்காமல், இன்றைய வளர்ச்சிகளில் நம் பங்கைப் பெற, நம்மையும் நமக்கேற்ற வழிமுறைகளையும் உணர்ந்து கைகொள்ள வேண்டும் என்பதே இதன் நோக்கம்.

தேடும் பொருளைத் தேடிய மாத்திரத்தில் முன் கொணர்ந்து நிறுத்திய Google தேடு தளத்திற்கும், தமிழ் டைப்பிங்கை மிக எளிமையாகிய Google Translitereature சேவைக்கும், வரலாற்று நிகழ்வுகளையும் மேலும் பல குறிப்புகளையும் வழங்கிய Wikipedia வுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

புத்தகத்தின் தமிழ் வடிவம்

தொழில் நடைமுறைகளை முழுமையாக அறிந்துகொள்ள அவற்றின் வேர்களை அறிவது மிக முக்கியம். அதனால், லீன், சிக்ஸ் சிக்மா, கய்சென், ISO, 5S போன்ற நடைமுறைகளை பற்றியும் அவற்றின் தொடக்கம் பற்றியும் LinkedIn இல் இரண்டு வருடங்கள் கட்டுரைகளாக எழுதினேன். அவற்றின் தொகுப்பு Getting Out of The Maze என்னும் தலைப்பில் ஒரு ஆங்கிலப் புத்தகமாகத் தற்போது வெளிவந்துள்ளது.

ஆனாலும், அவற்றைத் தமிழில் வழங்க வேண்டும் என்ற தேடலின் விளைவாக இந்தப் பகுதியை எழுதத் தொடங்கி இருக்கிறேன்.

சீரான இடைவெளியில், ஒவ்வொரு வழிமுறையைப் பற்றியும் விரிவாக விவாதிப்போம்.

உங்கள் கருத்துக்களை kannan@csensems.com இ-மெயில் பகிர்ந்து கொள்ளலாம்.